MLA க்கள் தகுதி நீக்கம் ஏன்? | கட்சி தாவல் தடை சட்டம் சொல்வதென்ன?
ஆட்சியை தக்கவைக்க நடக்கின்ற கணக்குப்போராட்டத்தில் ஏற்கனவே தினகரன் அணிக்கு தாவிய (முதல்வர் பழனிசாமியை நீக்க வேண்டும் என ஆளுநரிடம் மனு அளித்தவர்கள்) தகுதி நீக்கம் செய்யப்பட்டு தேர்தலும் நடந்தேறிவிட்டது. தேர்தல் முடிவுகள் எப்படி வருமென கணித்தார்களோ என்னவோ மீண்டும் 3 MLA க்களை தகுதி நீக்கம் செய்யும் பணியில் இறங்கியிருக்கிறது அதிமுக.
உண்மையில் அதிமுக செய்வது சரிதானா?
கட்சி தாவல் தடை சட்டம் சொல்வது என்ன?
இவற்றை பார்க்கலாம்.
3 அதிமுக MLA தகுதி நீக்கம்
தற்போது அதிமுக MLA வாக இருந்து வரும் விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி ரத்தினசபாபதி , கள்ளக்குறிச்சி பிரபு ஆகிய மூவரும் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக கூறி தகுதி நீக்கம் செய்யுமாறு கட்சி கொறடா, சபாநாயகருக்கு மனு அளித்திருக்கிறார். இதேபோல இரட்டை இலை சின்னத்தில் வென்ற தமிமுன் அன்சாரி திமுகவிற்கு வாக்கு கேட்க சென்றார் உட்பட பல காரங்களுக்காக அவரையும் தகுதி நீக்கம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உண்மையில் அதிமுக செய்வது சரிதானா?
ஒவ்வொருமுறை ஒரு சட்டமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்யப்படும்போதும் பல இழப்புகளை அரசு சந்திக்கிறது. மக்களின் பிரதிநிதி இல்லாமல் போகிறார், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும், மக்கள் வாக்களிக்க செல்ல வேண்டும் என பல வேலைகள் மீண்டும் நடக்க வேண்டும், பண விரயமும் ஏற்படுகிறது.
ஆனால் கட்சித்தாவல் நடக்கும் போது MLA தகுதி நீக்கம் செய்யப்படாமல் போனால் இன்னும் மோசமான நிகழ்வுகளை நாம் சந்திக்க வேண்டி இருக்கும். பண பலம், அதிகார பலம் பொருந்தியவர்கள் எளிமையாக ஆட்சி கவிழ்ப்பு அல்லது ஆட்சி அமைப்பு ஆகியவற்றை எளிமையாக செய்திட இயலும், ஜனநாயகத்திற்கு விரோதமாக.
அந்தவகையில் பார்த்தால் தனது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள அதிமுக எந்தவித முயற்சியை செய்யவும் அதற்க்கு உரிமை இருக்கிறது. அதனைத்தான் தற்போதும் செய்துகொண்டு இருக்கிறது.
கட்சி தாவல் தடை சட்டம், 1985
பின்வரும் முக்கிய விதிமுறைகள் கட்சி தாவல் தடை சட்டம், 1985 இல் இருக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தின் 10 வது அட்டவணையில் உள்ள கட்சித் தாவல் தடை சட்டம் ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த போது, 1985ல் 52வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் கொண்டுவரப்பட்டது.
கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் ஒரு நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர், தானாக முன்வந்து தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியிலிருந்து விலகினால், அவர் தனது உறுப்பினர் பதவியை இழப்பார்.
நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர் சார்ந்திருக்கும் கட்சியின் கொறடா பிறப்பிக்கும் உத்தரவுக்கு மாறாக நாடாளுமன்ற/சட்டமன்ற வாக்கெடுப்பில் வாக்களித்தாலோ, அல்லது வாக்கெடுப்பைப் புறக்கணித்தாலோ பதவி இழப்பார்.
ஒரு உறுப்பினர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும், கட்சி தாவல் தடுப்பு சட்டப்படி அவர் தேர்தலில் நிறுத்திய அரசியல் கட்சியைச் சேர்ந்தவராகவே கருதப்படுவார்” என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் விளைவாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருந்தாலும் சட்டமன்ற உறுப்பினரோ, நாடாளுமன்ற உறுப்பினரோ கட்சிக் கொறடாவின் கட்டளைக்கு கீழ்படிந்து நடக்க வேண்டும். கட்சிக் கொறடா கட்டளையை மீறினால் பதவி பறிபோகும். இவ்வாறு கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் வேறு கட்சியில் சேர்ந்தாலும் பதவி பறிபோகும்.
கட்சி தாவல் சட்டம், 1985ன் படி இந்திய நாடாளுமன்ற மக்களவை அல்லது மாநிலங்களவை அல்லது மாநில மாநில சட்டமன்றத்தில் உள்ள ஒரு அரசியல் கட்சியில் உள்ள மொத்தமுள்ள உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் சேர்ந்து வேறு கட்சிக்கு மாறினால் அல்லது புதிய கட்சி துவக்கினால் அவர்களின் பதவி பறிபோகாது.
கட்சி தாவல் தடைச் சட்ட திருத்த மசோதா 2013ன் படி, ஒரு அரசியல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி வேறு அரசியல் கட்சிக்கு மாறினால் அவர்களின் பதவி பறிக்கப்பட்டுவிடும்.
அண்மையில் தமிழகத்தில் 18 MLA தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கிலிருந்து சட்டமன்றம் அல்லது நாடாளுமன்றம் ஆகியவற்றிற்கு வெளியே கட்சிக்கு விரோதமாக செயல்பட்டாலும் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என தெரியவருகிறது.
விரைவில் நான்கு சட்டமன்ற தொகுதிகள் காலியாகும் என்பதே உண்மை
தொடர்ந்து இதுபோன்ற செய்திகளை படிக்க Subscribe பண்ணுங்க, ஏற்கனவே செய்திருந்தால் ignore பண்ணுங்க