இளையராஜாவின் இசையை ஒருமுறை நேரில் கேட்டுவிடுங்கள்

இளையராஜாவின் இசை தான் எல்லாமே என நினைத்து வாழ்வோரை ஒரு கூட்டமாக பார்க்க வேண்டும் அவர்கள் ராஜா சாரின் இசையை எப்படி ஆத்மார்த்தமாக ரசிக்கிறார்கள் என்பதை பார்க்கவேண்டும். ஏதோ ஒரு விசயத்தை நாமும் அந்த அளவிற்கு ரசித்து வாழ வேண்டும்.

இளையராஜா

கடந்த ஆண்டு சென்னை பிளிம் சிட்டியில் இளையராஜா அவர்களின் இசை கச்சேரி நடந்தது. வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் எனக்கு இசையில் பெரிய ஆர்வமும் கிடையாது அறிவும் கிடையாது. கேட்பதற்கு நன்றாக இருந்தால் கேட்டுவிட்டுப்போகும் சராசரி மனிதனில் நானும் ஒருவன். ஆனால் என்னோடு பணிபுரியும் நண்பர்களில் சிலர் இளையராஜாவின் இசையில் மயங்கியவர்கள். ஆமாம், அவரின் பெரிய ரசிகர்கள். அப்படிப்பட்டவர்களோடு இளையராஜாவின் இசைக்கச்சேரியை நேரடியாக பார்ப்பதற்கு ஒப்புக்கொண்டேன்.

தொலைக்காட்சியில் மட்டுமே இசை கச்சேரிகளை நேரடியாக பார்த்த அனுபவம். ஒருமுறை நேரடியாக பார்துவிடலாமே என்ற எண்ணத்தில் தான் வர சம்மதித்தேன். நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பாக நான் நினைத்துக்கொண்டது என்னவெனில், அவர் எங்கேயோ இருப்பார் 1000 ரூபாய் டிக்கெட் எடுத்த நாம் எங்கேயோ இருக்கப்போகிறோம், ஒன்றும் கேட்கப்போவது இல்லை. கூட்டத்தை பார்த்துவிட்டு வருவோம் என்று தான் எண்ணிக்கொண்டு இருந்தேன்.

நண்பர்கள் சொன்னார்கள் நிகழ்ச்சி துவங்கும் என குறிப்பிட்ட நேரத்திற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரத்திற்கு முன்பாகவே நாம் சென்றால் தான் முன்பக்கத்தில் இடம் பிடிக்கலாம் என்றார்கள். சரியென்று நாங்களும் புறப்பட்டோம். EVP பிலிம் சிட்டி எங்கேயோ இருக்கிறது ஆனால் அதற்கு வெகு தொலைவில் இருந்தே சாலையில் கூட்டம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது. இசைக்காக ஒரு கூட்டமாக திரண்டு செல்வதை பார்க்க வியப்பாக இருந்தது.

 நாங்கள் நினைத்துக்கொண்டிருந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாகவாவது சென்று விடலாம் என்று ஆனால் அங்கிருக்கும் கூட்டத்தை பார்த்தால் நான்கு மணி நேரத்திற்கு முன்பாகவே செல்வதற்கு வந்திருப்பதை போல தோன்றியது. ஒருவழியாக சென்று சேர்ந்தோம். ஆனால் நிகழ்ச்சி துவங்கும் என சொல்லப்பட்ட நேரத்திற்கு துவங்கவில்லை. காரணம், SPB உள்ளிட்ட பாடகர்களும் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டார்கள் என கூறப்பட்டது.

நிகழ்ச்சி துவங்குவதன் அறிகுறியாக நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. தேடிப்பிடித்து ஒரு இடத்தை பிடித்துக்கொண்டோம். சரியாக கேட்காது என நினைத்துக்கொண்டிருந்தேன், ஆனால் திரை மற்றும் ஸ்பீக்கர்கள் நன்றாகவே அமைக்கப்பட்டிருந்தன.

இளையராஜா

இளையராஜாவின் உண்மையான ரசிகர்களை நான் அங்குதான் பார்த்தேன். எனது நண்பர்கள் போலத்தான் அனைத்து ரசிகர்களும் இருப்பார்கள் என நினைத்துக்கொண்டு இருந்தேன். அவர்களை விடவும் 500 மடங்கு அதிகமான ரசிகையை அங்கே நான் பார்த்தேன். 50 வயதுக்கு மேல் இருக்கும் அந்த பெண்மணி ஆரம்பம் முதலே ஆர்வத்தோடு இருந்தார். நிகழ்ச்சி தாமதப்படுவதை அறிந்த அவர், தம்பிகளா எல்லாரும் கத்துங்கப்பா அப்போ தான் சீக்கிரமா ஆரம்பிப்பாங்க என கேட்டதோடு கத்தவும் ஆரம்பித்தார். அவருடைய கணவர் மறுபக்கம் எங்களைப்போல நிகழ்ச்சியை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்.

நிகழ்ச்சி ஆரம்பித்தது, ஒவ்வொரு பாடலுக்கும் அந்த பெண்மணியின் ஆரவாரத்தை பார்க்கவே ஆவலாக இருந்தது. நேரடியாக கேட்பதைவிடவும் மொபைலில் கேட்கும் போது தான் துல்லியமாக கேட்கும் என்ற எனது நம்பிக்கை அன்று காலியாகிப்போனது. SPB, யேசுதாஸ் போன்றவர்கள் பாடும் போதெல்லாம் புல்லரித்துக்கொண்டே இருந்தது. நேரடியாக ஏன் கச்சேரிகளை கேட்க பலர் விரும்புகிறார்கள் என்பதை அங்கு சென்றபிறகு தான் புரிந்துகொள்ள முடிந்தது. இரண்டு நண்பர்கள் சிறிது போதையோடு நடனமாடி இசையை ரசித்துக்கொண்டு மற்றவர்களுக்கும் நகைச்சுவையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

சிறுவர்கள் இருந்தார்கள், இளைஞர்கள் இருந்தார்கள், திருமணம் ஆகாத பெண்கள் இருந்தார்கள், திருமணம் ஆன ஜோடிகள் இருந்தார்கள், வயதானவர்கள் இருந்தார்கள். அனைத்து தலைமுறையையும் அங்கே காண முடிந்தது. அவர்கள் மற்றவர்களுக்கு துணைக்கு வந்தவர்கள் அல்ல, இசை ஞானியின் இசையை தேடிப்பருக வந்தவர்கள். இன்னமும் அந்த தருணத்தை நினைத்தால் ஏதோ ஒருவித சந்தோசம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

இசையில் பெரிய ஆர்வமில்லாத எனக்கே அத்தனை சந்தோசத்தை இளையராஜாவின் இசை தந்ததென்றால் அவரையே தொழுது அவர் இசையிலேயே வாழ்ந்துகொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவரது இசை எப்படிப்பட்ட சந்தோசத்தை கொடுக்கும் என்பதை என்னால் யூகித்து பார்க்க முடிகிறது.

இசைஞானி இளையராஜா அவர்களின் பிறந்த தினம் ஜூன் 2. வாழ்த்துக்கள் ராஜா சார்.

இந்த தருணத்தில் நான் கேட்டுக்கொள்வது இதுதான், ஒருமுறையேனும் இசைஞானியின் இசையை நேரடியாக பெற்று மகிழுங்கள். அற்புதமாக இருக்கும்.



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *