11 மாத பிரதமர் வி.பி. சிங் இன்றளவும் கொண்டாடப்படுவது ஏன்?
ஒரு ஆண்டு கூட முழுமையாக பிரதமராக பதவி வகிக்க முடியாதவரால் பெரிதாக என்ன செய்திருக்க முடியும் என கேட்பவர்களுக்கு “என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்” என்ற பிரதமராக அவரது இறுதி பாராளுமன்ற உரையில் குறிப்பிட்டதை பதிலாக கூறலாம்.
நாம் எத்தனைக்காலம் ஒரு பதவியில் வகிக்கிறோம் என்பது முக்கியமல்ல. நாம் வகிக்கின்ற சில பொழுதுகளில் நம்மால் எவ்வளவு ஆக்கபூர்வமான விசயங்களை செய்து முடிக்க முடியுமோ அதனை செய்து முடித்தால், வரலாறு நமக்கான இடத்தினை நிச்சயமாக மறுக்காமல் வழங்கவே செய்யும். பிரதமராக பலர் பல ஆண்டுகள் நீடித்து இருந்தாலும் 11 மாதங்கள் 8 நாள்கள் மட்டுமே பிரதமராக பதவி வகித்த விபி சிங் பல விசயங்களை துணிந்து நாட்டு மக்களின் நலன் கருதி செய்தார். அவர் வளைந்து கொடுக்கும் பிரதமராக நடந்துகொண்டிருந்தால் அவரால் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்திருக்கக்கூட முடியும். ஆனால் அவர் அப்படி செய்திடவில்லை. அதனாலேயே அவர் நினைவு கூறப்படுகிறார். வி பி சிங் அவர்கள் ஆற்றிய பணிகள் குறித்து எழுதப்பட்ட இந்தக்கட்டுரை உங்களுக்கு நல்ல அறிமுகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்.
வி பி சிங் : ராஜ குடும்பத்து பிள்ளை
எனக்குத்தெரிந்த வரையில், நல்ல வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்து ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் களமிறங்கி போராடிய இருவரை கூறுங்கள் என்றால் எனது அறிவிற்கு உட்பட்டு ‘பெரியார்’ ‘வி பி சிங்’ என்ற இரண்டு பெயர்களைக் கூறுவேன்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் உள்ள தையா என்கிற ஒரு ராஜ குடும்பத்தில் 1931-ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி பிறந்தார். மண்டா சமஸ்தானத்தின் மன்னர் ராஜ்பகதூர், தனது வாரிசாக சிறு வயதான வி.பி.சிங்கை தத்தெடுத்துக்கொண்டார். விஸ்வநாத் பிரதாப் சிங் என்பதனை வி.பி.சிங் என அழைத்துவந்தார்கள். படிப்பில் நல்ல கெட்டிக்காரராக விளங்கிய வி பி சிங் எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற லட்சியத்துடனேயே படித்து வந்தார். ஆனால் காலம் அவரை அரசியலுக்கு அழைத்து வந்தது.
இளம் வயதிலேயே அவர் அரசியல் ஆர்வம் உடையவராக இருந்தார். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இருந்தது. ஒரு சமயம், வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தின் மீது கொண்ட ஈர்ப்பால் தன்னிடம் இருந்த விளைநிலங்களை ஏழை எளிய மக்களுக்கு வழங்கினார். 1969 இல் தான் தீவிர அரசியல் பயணம் துவங்கியது. அந்த ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அதிலும் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு தேர்வானார். தூய்மை, திறமையான அரசியல் என அவரது திறமையை உணர்ந்திருந்த இந்திரா காந்தி தனது அமைச்சரவையில் மத்திய வர்த்தகத்துறைக்கு இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
நாம் ஏற்கனவே குறிப்பிட்டதைப்போல, வகிக்கும் பணிக்கு நேர்மையாக செயல்படக்கூடியவர் வி.பி.சிங்.எமர்ஜென்சி காலகட்டத்தில் இவரது துரித நடவெடிக்கைகளால் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் களையப்பட்டு விலை உயர்வு கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதனால் நல்ல மதிப்பை பெற்றிருந்தார் வி.பி.சிங்.
வி.பி.சிங் : உத்திரபிரதேச முதல்வர்
1980 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் உத்திர பிரதேசத்தில் ஆட்சியை பிடித்தது காங்கிரஸ். இதனையடுத்து அம்மாநில முதல்வராக நியமிக்கப்பட்டார். ஏற்கனவே அந்த மாநிலத்தில் கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்து ஆடின. இவற்றை ஒழிக்க கடுமையான பல நடவெடிக்கைகளை எடுத்தார் வி.பி.சிங். இந்த தருணத்தில் அவருடைய சகோதரர் கொலை செய்யப்படவே, கொள்ளை சம்பவங்களை ஒழிக்க முடியாததற்கு தானே பொறுப்பேற்று முதல்வர் பணியை ராஜினாமா செய்தார். வெறும் இரண்டு ஆண்டுகளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபடியால் அவரைப்பற்றி நாடு முழுமைக்கும் பேசப்பட்டது.
வி.பி.சிங் : பிரதமர் பயணம்
இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட பிறகு அமைந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் வி.பி.சிங். இணை அமைச்சராக இருக்கும் போதே கடுமையாக வேலை செய்தவர் நிதி அமைச்சர் பதவி கிடைத்தால் விடுவாரா, தயவு தாட்சண்யமின்றி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையாக நடவெடிக்கை எடுத்தார். திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சன் அவர்களின் சகோதரர் என பல முக்கியஸ்தர்கள் உட்பட பலர் மீதும் நடவெடிக்கைகள் பாய்ந்தது.
இவரது நடவெடிக்கைகளால் நிலைகுலைந்த ஆதிக்க சக்தி வாய்ந்தவர்கள் பிரதமருக்கு நெருக்கடி தர ஆரம்பித்தனர். இதனால் நிதி அமைச்சர் அமைச்சர் பதவியிலிருந்து விலக்கப்பட்டு பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கும் அவரது வேலை தொடர்ந்தது. இவர் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் போது தான் ராணுவ தளவாடங்கள் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டதாக சுவீடன் நாட்டு வானொலியில் செய்தி வெளியாகி பெரிய அதிர்வை நாடு முழுமைக்கும் ஏற்படுத்தியது. இது குறித்து விசாரிக்க குழு அமைத்தார். இந்த விவகாரத்தில் ராஜிவ் காந்தி அவர்களுக்கும் இவருக்கும் பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அதிருப்தி அடைந்த வி.பி.சிங் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த ராஜினாமாவுக்கு பிறகு ஜன்மோர்ச்சா என்ற புதிய கட்சியை உருவாக்கினார் விபி சிங். அவர் ராஜினாமா செய்த தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்றார். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சில மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டார். அதில் 143 இடங்களை இவர்களது கூட்டணி பெற்றது. காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக பார்த்தால் இவர்களை விட அதிக தொகுதிகளை வென்றிருந்தாலும் கூட ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெறவில்லை. பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேசிய முன்னனி கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு தர சம்மதம் தெரிவித்தன.
இதனால் தேசிய முன்னனி கூட்டணிக்கு ஆட்சியமைக்கும் பலம் கிடைத்தது. யார் பிரதமர் என்ற பேச்சு எழும்போது, ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால் அவர்களை பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்தார் விபி சிங். ஆனால் பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் தேவிலால். இதனை அடுத்து விபி சிங் பிரதமர் ஆனார். தனித்த பலம் இல்லாதபடியால் இவருக்கு ஆதரவு தந்தவர்கள் தங்களுக்கு தேவையான காரியங்களை செய்துமுடிக்க எண்ணினர். ஆனால் அவர்களுக்கு தயவு தாட்சண்யமின்றி மறுப்பு தெரிவித்தார் விபி சிங். இவரது நேர்மையான அணுகுமுறை இவரது ஆட்சியை வெறும் 11 மாதங்கள் 8 நாட்கள் மட்டுமே நீடிக்க விட்டது. இவரது ஆட்சிக்காலத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை பார்க்கலாம்.
‘மண்டல் கமிஷன்’ என்று பரவலாக அறியப்பட்ட, சமூக ரீதியாக பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையம் (Socially Backward Classes Commission) சரண் சிங் பிரமதராக இருந்தபோது 1979ல் அமைக்கப்பட்டது.பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் 51% வாழ்வதாகவும், அவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று 1980இல் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ஆணையத்தின் அறிக்கை பரிந்துரைத்தது. ஆகஸ்ட் 1990ல் மண்டல் கமிஷன் பரிந்துரை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு அமல் படுத்தப்படும் என்று வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசு அறிவித்தது. இதை எதிர்த்து நாடு முழுவதும் ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
காவிரி நதி நீரை எந்தெந்த மாநிலங்கள் எவ்வளவு பகிர்ந்துகொள்வது என்று தீர்ப்பளித்த காவிரி நடுவர் மன்றம் 1990இல் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோதுதான் அமைக்கப்பட்டது.
அப்போதைய அரசியல் காரணங்களுக்காக தமிழகத்தை சேர்ந்த எம்ஜிஆர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது. வழங்கப்பட்டது. ஆனால் மறுபக்கமோ, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கார் அவர்களுக்கு எந்தவித விருதும் கொடுக்கப்படாமல் இருந்தது. இதனை எதிர்த்து, அம்பேத்காருக்கு பாரத ரத்னா விருது வழங்கியது விபி சிங் ஆட்சி. அதோடு நில்லாமல் நாடாளுமன்றத்திலும் அவரது படம் இடம்பெற செய்தது.
சங்பரிவார் நடத்திய ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.
கருணாநிதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க காவிரி நடுவர் மன்றம் அமைத்திட ஏற்பாடு செய்தது இவரது ஆட்சியில் தான்.
பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். கூடவே, பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார்.
இதுபோன்ற துணிச்சலான முடிவுகளை எடுத்ததனால் அவர் இன்றளவும் பேசப்படுகிறார். இடஒதுக்கீடு இருக்கும் வரை வி.பி சிங் புகழ் இருக்கும், அவர் பேசப்படுவார், போற்றப்படுவார்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!