நவோதயா பள்ளிகளை தமிழகம் எதிர்க்க காரணம் என்ன? | Navodaya Schools in Tamilnadu
நவோதயா பள்ளியினை திறக்க மத்திய அரசு தயாராக இருந்த போதும் தமிழக அரசு அதற்கான அனுமதியினை வழங்க மறுக்கிறது.
கல்வித்தரம் குறித்தோ, நீட் போன்ற நுழைவுத்தேர்வுகள் குறித்தோ, அரசுப்பள்ளிகளின் செயல்பாடுகள் குறித்தோ பேசும்போது “ஏன் நவோதயா பள்ளிகளை திறக்க தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க மறுக்கிறது?” என்ற கேள்வி கிளம்புவதை பார்த்திருப்போம். நவோதயா பள்ளிகள் என்றால் என்ன? நவோதயா பள்ளிகள் யாரால் நடத்தப்படுகின்றன? நவோதயா பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன? ஏன் தமிழக அரசு அதனை எதிர்க்கிறது? தமிழக அரசு எதிர்ப்பது சரிதானா? என்பது போன்ற கேள்விகளுக்கான பதிலை தான் இங்கே காணவிருக்கிறோம்.
நவோதயா பள்ளிகள் என்றால் என்ன?
நவோதயா பள்ளிகள் என்பவை தங்கும் இடத்துடன் கூடிய இலவசக்கல்வியினை வழங்கக்கூடியவை. முன்னாள் பிரதமர் திரு ராஜிவ் காந்தி அவர்களது ஆட்சிக்காலத்தில் தான் நவோதயா பள்ளிகள் துவங்க முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பள்ளிகள் துவங்கப்பட்டதன் நோக்கமாக கூறப்படுவது என்னவெனில் “நல்ல திறன் வாய்ந்த கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமாக தரமான கல்வியினை வழங்குவது தான்”. அதன்படி நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 1 நவோதயா பள்ளி துவங்கப்படும். அதில் 75% இடங்கள் அந்த மாவட்டத்தில் இருக்கின்ற கிராமப்புற மாணவர்களுக்கு கொடுக்கப்படும். அதோடு SC மற்றும் ST மாணவர்களுக்கும் குறிப்பிட்ட சதவிகிதம் இடங்கள் ஒதுக்கப்படும்.
நவோதயா பள்ளிகள் யாரால் நடத்தப்படுகின்றன?
நவோதயா பள்ளிகள் முழுக்க முழுக்க மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மூலமாக ஒதுக்கப்படும் நிதி மூலமாகத்தான் நடத்தப்படுகிறது [Department of School Education & Literacy, Ministry of Human Resource Development, Govt. of India]. நவோதயாவின் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின் படி 2018 – 2019 ஆம் ஆண்டுக்கு மட்டும் Rs.3213 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதுதவிர பிற நிதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன [https://navodaya.gov.in/nvs/en/Finance/Budget-and-Accounts/]
2017 – 18 ஆம் ஆண்டில் நாடு முழுக்க (தமிழகம் தவிர்த்து) 628 நவோதயா பள்ளிகள் செயல்படுகின்றன. அவற்றில் 2,61,261 மாணவ மாணவிகள் பயில்கிறார்கள். அதில் கிராமப்புற 77.88% என்பது குறிப்பிடத்தக்கது.
நவோதயா பள்ளிகள் எப்படி செயல்படுகின்றன?
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நவோதயா பள்ளி திறக்கப்பட வேண்டும். 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை இருக்கின்ற நோவோதயா பள்ளியில் சேருவதற்கு “நுழைவுத்தேர்வு” நடத்தப்படும் [Jawahar Navodaya Vidyalaya Selection Test]. அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த தேர்வினை CBSE நடத்துகிறது. கிராமப்புற மாணவர்களையும் கருத்தில் கொண்டுதான் தேர்வுத்தாளை CBSE அமைக்கிறது.
தேர்வில் தேர்ச்சி அடைபவர்களில் 75% இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்காக ஒதுக்கப்படுகின்றன. அந்தந்த மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் தொகைக்கு ஏற்ப SC ST பிரிவினருக்கு இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கும் 3% இடங்கள் உடல் குறைபாடு உள்ளவர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது.
நவோதயா பள்ளிகளில் மூன்று மொழிக்கொள்கை பின்பற்றப்படுகிறது. அதன்படி ஹிந்தி, ஆங்கிலம், மாநில மொழி என பின்பற்றப்படும். 7 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு வரைக்கும் தான் மாநில மொழி கற்றல் இருக்கும் அதற்க்கு பின்னர் இந்தியா முழுமைக்குமே ஆங்கிலம்/இந்தி பாடத்திட்டம் தான் பின்பற்றப்படும்.
நவோதயா பள்ளிகள் நாட்டின் கிராமப்புற பகுதிகளில் தான் அமைக்கப்படுகின்றன. அதற்கான இடங்களை மாநில அரசுகள் இலவசமாக ஒதுக்கவேண்டும். அதேபோல தற்காலிக கட்டிடங்களை வாடகையின்றி அமைத்துத்தர வேண்டும்.
நவோதயா பள்ளிகளை ஏன் தமிழக அரசு எதிர்க்கிறது?
நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க உத்தரவிடவேண்டும் எனக்கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளை நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளின்போது தமிழக அரசின் சார்பாக முன்வைக்கப்பட்ட வாதங்களை தான் இங்கே பார்க்க இருக்கிறோம்.
>> ஏற்கனவே தனியார் பள்ளிகளில் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் படிப்பதற்காக குறிப்பிட்ட சதவிகிதம் இடம் ஒதுக்கப்படுகிறது.
>> ஏற்கனவே அனைவருக்கும் கல்வியினை வழங்குவதற்கு போதுமான பள்ளிகளை மாநில அரசு நடத்தி வருகிறது.
>> மும்மொழிக்கொள்கையின் வாயிலாக சமஸ்கிருதம் தமிழக மாணவர்களிடத்தில் திணிக்கப்படலாம்
தமிழக அரசு எதிர்ப்பது சரிதானா?
நவோதயா பள்ளிகள் என்பவை முற்றிலுமாக மத்திய அரசு தரும் நிதியில் இருந்து நடத்தப்படுபவை. மேலும் ஏழை கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகவே அவை நடத்தப்படுகின்றன. அங்கு நடத்தப்படும் பாடத்திட்டங்கள் போலவே தமிழகத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளிலும் கற்பிக்கப்படுகிறது. மும்மொழிக்கொள்கை தான் பிரச்சனை என்றால் அதில் விலக்கு தருமாறு மத்திய அரசை கேட்கலாம் அல்லது சமஸ்கிருதம் திணிக்கப்படாது என்பதற்கான உறுதிமொழியை பெறலாம். அதனை விட்டுவிட்டு ஒட்டுமொத்தமாக நவோதயா பள்ளிகளே வேண்டாம் என்பது சரியானதாகப்படவில்லை.
ஏனென்றால் மத்திய அரசுக்கு வருவாய் ஈட்டித்தருகின்ற மாநிலங்களின் வரிசையில் முன்னிலை வகிக்கிறோம். அப்படிப்பட்ட நாம் மத்திய அரசு தனது நிதியில் நேரடியாக நடத்துகின்ற கல்வி நிலையங்களை பயன்படுத்தாமல் போவது நமக்குத்தான் இழப்பு என தோன்றுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் பல பள்ளிகள் இதே போன்று செயல்பட்டுக்கொண்டு இருக்கும்போது வெறுமனே சில காரணங்களுக்காக நவோதயா பள்ளிகளை வேண்டாம் என எதிர்ப்பது தவறு என்றே தோன்றுகிறது.
உங்களது கருத்துக்களை கமெண்டில் பதிவிடுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
நவோதயா பள்ளிகள் திறக்க பட்டால் கிராமப்புற மாணவர்க நிச்சயம் பலன் பெறுவார்கள்..
நவோதயா பள்ளிகள் திறக்க பட்டால் கிராமப்புற மாணவர்கள் நிச்சயம் பலன் பெறுவார்கள்..
இப்படித்தான் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க கோரிக்கை வைத்தார்கள். ஆனால் நடந்தது என்ன? இன்றளவும் பிரச்சனைகள் தீரவில்லை. அணைத்து மாநிலங்களும் ஏற்கும்போது தமிழகம் மட்டும் ஏன் எதிர்க்கிறது என்று கேள்விதான் கேட்டார்கள். நவோதய பள்ளித் தேர்விலும் இதே நிலை வந்தால் என்ன செய்வது?
நீங்களே சொல்கிறீர்கள் ” 7 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்பு வரைக்கும் தான் மாநில மொழி கற்றல் இருக்கும் அதற்க்கு பின்னர் இந்தியா முழுமைக்குமே ஆங்கிலம்/இந்தி பாடத்திட்டம் தான் பின்பற்றப்படும்” என்று. நீதிமன்ற தீர்ப்புகளும் இப்போது தமிழில் வெளியாகிறது. மக்களவையிலும் தமிழில் உரையாடலாம். இந்தச்சூழ்நிலையில் 7 ஆம் வகுப்பு அல்லது 8 ஆம் வகுப்புப் பிறகு இந்திக்கு பதிலாக ஏன் மாநிலமொழி இடம்பெறக்கூடாது? இதுகூட ஒருவகையில் இந்தி திணிப்பு இல்லையா?