யார் கடவுள்? – கண்ணதாசனின் பதில் இதோ!
நான்கு கைகள், மாய வித்தைகள், ஆடை அணிகலன்களுடன் அழகான முகத்தோற்றம் கொண்டதொரு கடவுளைத்தான் பெரும்பாலானவர்கள் தேடுகிறார்கள். ஆனால் உண்மையாலுமே யார் கடவுள் என்பதற்கு கண்ணதாசன் பதில் தந்திருக்கிறார்.
பெரும்பாலானவர்கள் தங்களுக்கு தெரிந்த வகையில் கடவுளைத் தேடி பயணம் மேற்கொண்டு தான் இருக்கிறார்கள். வெளிப்படையாக சொல்லவேண்டும் என்றால் இதுவரைக்கும் கடவுள் நேரிடையாக தோன்றிய வரலாறு எங்கேயும் இல்லை. இதனை அனைவருமே ஒப்புக்கொண்டாகத்தான் வேண்டும். ஆனாலும் பன்னெடுங்காலமாக பெரும்பான்மையான மக்கள் கோவில்களுக்கு சென்று வணங்குதலை பின்பற்றியே வருகிறார்கள். சிலருக்கு கடவுள் பற்றிய புரிதல் இல்லாவிட்டாலும் கூட கோவில்களுக்கு நிம்மதியைத்தேடித்தான் செல்வதாக பலர் கடவுளையும் கோவில்களையும் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.
கடவுளுக்கான புரிதல் இன்னமும் நமக்கு ஏற்பட வேண்டும். அது இல்லாவிட்டால் மூடநம்பிக்கையின் உச்சத்திற்கு பலர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டே தீரும். யார் கடவுள் எது கடவுள் என்பதற்கான எளிமையான விளக்கத்தை கவிஞர் கண்ணதாசன் அவர்கள் தனது கவிதையின் வாயிலாக வெளிப்படுத்தி இருக்கிறார். “அனுபவமே கடவுள்” எனும் அக்கவிதையினை வாசித்தால் நிச்சயமாக நமக்கு உண்மை புலப்படும்.
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்து பாரென இறைவன் பணித்தான்!
படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
படித்துப் பாரென இறைவன் பணித்தான்!
அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்
அறிந்து பாரென இறைவன் பணித்தான்!
அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்
அளித்துப் பாரென இறைவன் பணித்தான்!
பாசம் என்பது யாதெனக் கேட்டேன்
பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்
மணந்து பாரென இறைவன் பணித்தான்!
பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்
பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்!
முதுமை என்பது யாதெனக் கேட்டேன்
முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்!
வறுமை என்பது என்னெனக் கேட்டேன்
வாடிப் பாரென இறைவன் பணித்தான்!
இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்
இறந்து பாரென இறைவன் பணித்தான்!
அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில்
ஆண்டவனே நீ ஏன்’ எனக் கேட்டேன்!
ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி
‘அனுபவம் என்பதே நான்தான்’ என்றான்!
ஆறு கைகள் கொண்ட மாயை கடவுள் அல்ல நண்பர்களே!
அற்புதமான அனுபவம் தான் கடவுள்!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!