எது திமிர்த்தனம்? திமிராக நடந்துகொள்ளலாமா?
யாருக்கும் அடங்காமல் தன் கருத்தை சொல்கிறவரையும் யாருக்கும் மதிப்பளிக்காமல் செயல்களை செய்வோரையும் நம் சமூகத்தில் திமிர் பிடித்தவன் என சொல்லும் வழக்கம் இருக்கிறது. உண்மையில் எது திமிர்த்தனம்? திமிராக நடந்துகொள்வது சரியா? எந்த தருணத்தில் திமிரோடு நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
திமிராக நடந்துகொள்ளலாமா?
யாருக்கும் அடங்காமல் தன் கருத்தை சொல்கிறவரையும் யாருக்கும் மதிப்பளிக்காமல் செயல்களை செய்வோரையும் நம் சமூகத்தில் திமிர் பிடித்தவன் என சொல்லும் வழக்கம் இருக்கிறது. ஆனால் இதில் எனக்கு உடன்பாடு இல்லை. “சாதிகள் இல்லையடி பாப்பா” என உயர்குலத்தில் பிறந்திருந்த பாரதி தன் கருத்தை தெரிவித்தபோது அப்போதைய சமூகம் அவரை “திமிர் பிடிச்சவன்” என்றுதான் சொல்லியது. நல்லதை சொன்ன பாரதி திமிர்பிடிச்சவரா?
வாக்களிப்பதற்கு என் கிராமத்தாருக்கு பணம் கொடுக்க கூடாது என இளைஞர் ஒருவர் தடுக்கிறார். எவர் சொல்லியும் கேட்காத அவரை “இவ்வளவு பேர் சொல்லியும் கேட்க மறுக்கிறான், எவ்வளவு திமிர்” என்று ஊரார் பெரும்பாலானோர் தூற்றிடுவார். நல்லதை செய்த அந்த இளைஞனை கிராமத்தார் “திமிர் பிடிச்சவன்” என சொல்வது சரியா?
உலகமே எதிர்த்து நின்றாலும் நல்லது என உங்கள் மனதிற்கு தோன்றிடும் செயலுக்காக அடுத்தவரை எதிர்த்து கருத்துக்களை கூறுவதும், நல்லதை நிறுவுவதற்காக எவரையும் எதிர்த்து செயல்களை செய்வதும் திமிர்த்தனம் ஆகாது.
உண்மையில் எது திமிர்த்தனம்?
பிறர் சொல்வதற்கு மதிப்பே சிறிதும் அளித்திடாமல், நமது சிந்தனையை சுய பரிசோதனைக்கு உட்படுத்திடாமல் தான் சொல்வதுதான் சரி என நிர்ணயம் செய்துகொண்டு தவறான விசயத்தை பேசிக்கொண்டு இருப்பது திமிர்த்தனம் ஆகிறது.
அதனைப்போலவே நாம் யாருக்கு எதிராக செயல்படுகிறோம் என்பதை அறியாமல், நாம் செய்வது சரிதானா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளாமல், தீமையான செயல்களை எவரையும் மதியாமல் செய்திடும் செயல் திமிர்த்தனமான செயலாக இருக்கிறது.
திமிர்த்தனம் வேண்டுமா வேண்டாமா?
என்னைக்கேட்டால் திமிர்த்தனம் கண்டிப்பாக அனைவருக்கும் இருக்க வேண்டும். ஆனால் அந்த திமிர்த்தனம் உண்மையை எவர் எதிர்ப்பினும் துணித்து சொல்லக்கூடிய திமிர்த்தனமாகவும், எவர் தடுப்பினும் அநீதியை எதிர்த்து நல்லனவற்றை செய்வதற்கு உரிய திமிர்த்தனமாகவும் இருக்க வேண்டும்.
இன்று இந்த திமிர்த்தனத்திற்கு பஞ்சம் நிலவுகிறது நண்பர்களே. நாம் பொய்யானவர்களுக்கு வளைந்துகொடுக்க பழகிவிட்டோம். ஊழல்வாதிகளோடு வாழ பழகிக்கொண்டோம். உண்மைக்காக குரல் கொடுக்காமல் ஊமையாக இருக்க பழகிக்கொண்டோம்.
——————————————————————————————-
Advertisement:
——————————————————————————————–
நல்லனவற்றிற்க்காக போராடுகிற குரல் கொடுக்கிற “திமிரோடு” இருங்கள். அதுவே சமூகத்திற்கு நன்மை பயக்கும்.