சக்தியுள்ள சாமியின் கோயிலுக்கு எதற்கு பூட்டும் சாவியும்?
முதலில் ஒன்றினை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன் . இங்கு சாமி என குறிப்பிடுவது அனைத்து மத தெய்வங்களையும் தான் . பூட்டும் சாவியும் என்றால் மூடத்தனமான சம்பிரதாயங்களும் சாமியார்களும் தெய்வங்களின் பெயர்களிலே ஏன் எனவும் விளங்கிக்கொள்ளாலாம் . இப்போது படியுங்கள் …..
சக்தியுள்ள சாமியின் கோயிலுக்கு எதற்கு பூட்டும் சாவியும் – பெரியாரிய வசனமான இது தமிழகத்தில் முன்வைக்கப்பட்டபோது மிகப்பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தின . வெறும் கரி மற்றும் தார் இரண்டையும் கலந்து சுவர்களில் எழுதப்பட்ட சுவர் விளம்பரங்கள் பலரின் மனங்களில் வலுவாக இருந்திட்ட தெய்வீக சுவர்களை உடைத்து கேள்விகளை எழுப்பின . பலரின் மனதில் கேள்விகளை எழுப்பி பழக்கவழங்கங்களின் பெயரால் பின்பற்றிவந்த மூடநம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் செய்தது .
பெரியாரின் அந்த கேள்வியில் சாமி என இந்துவின் அடையாளம் இருந்ததற்கு காரணமாக “அவரும் இந்து ” என்பதனாலேயே இருக்கலாம் . நான் சாமி என்பதற்கு அனைத்து மத கடவுள்களும் என அர்த்தம் கொள்கிறேன் .
இப்போது நடக்கின்ற நிகழ்வுகள் மீண்டும் இந்த கேள்விக்கான தேவையை ஏற்படுத்தியிருக்கிறதாகவே எண்ணுகின்றேன் .
முதலில் எனக்கு எழுகின்ற அடிப்படை கேள்விகளை முன்வைக்கிறேன் ,
- பன்னெடுங்காலமாக தெய்வ நம்பிக்கை இருக்கின்றது , கதைகளை அன்றி வெறெங்காவது தெய்வங்களை கண்டவர்கள் உண்டா? (கனவில் அல்ல )
- குழந்தைகள் கோயிலுக்குள் கற்பழிக்கப்பட்டபோதும் பாதிரியார்கள் பாவமன்னிப்பு கேட்ட பெண்ணை கற்பழித்தபோதும் வராத கடவுள் எப்போது வருவார் ?
- தன் கண்முன்னால் நடக்கின்ற “கட்டண கொள்ளையை” கூட தடுக்காமல் எப்படி அவரால் இருக்க முடிகின்றது ?
- கடவுள் நம்பிக்கை இல்லாமல் இந்த கேள்விகள் எழவில்லை , கடவுள் நம்பிக்கை இருந்ததினால் தான் இந்த கேள்விகளை கேட்கின்றேன்
பெரியார் காலத்தில் சாதிய கட்டமைப்புகளின் ஆணிவேராக கோவில்கள் இருந்தது. அதற்காக
கடவுள் மறுப்பை கையிலெடுத்தார் . இன்று ஊழலின் ஊற்றுக்கண்ணாகவும் , குற்றவாளிகளின் புகலிடமாகும் , குற்றங்கள் நடக்கும் இடங்களாகவும் கோயில்கள் மாறிப்போனதனால் பெரியாரின் வசனத்திற்கு மீண்டும் தேவை ஏற்பட்டிருப்பதாக கருதுகின்றேன் .
சிலைகளையே திருடிய பக்திமான்கள்
தற்போது தமிழகத்தில் இருந்து திருடப்பட்ட சிலைகளில் பல மீட்கப்பட்டு வருகின்றன . ஏதோ ஒன்றோ இரண்டோ அல்ல மக்களே , ஆயிரக்கணக்கான சிலைகள் கடத்தப்பட்டு இருக்கின்றன . அதில் பூஜை செய்யும் நபர்கள் முதல் கண்காணிக்கும் அதிகாரிகள் வரை அனைவருக்குமே தொடர்பு இருக்கின்றது . ஆனால் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லையே கடவுளால் ?
இதற்கு பதிலாக “கடவுள் தான் பொன்மாணிக்கவேல் அவர்களை அனுப்பியிருக்கிறார் என கூவிடுவார்கள் ” அவரையும் தானே இப்போது மாற்றிட துடிக்கிறார்கள் , இப்போதாவது கடவுள் சொல்லலாமே என்றால் , பதிலில்லை .
பாலியல் தொல்லையளிக்கும் பாதிரியார்கள்
அண்மையில் கேரள மாநிலத்தில் பாவமன்னிப்பு கேட்கவந்த பெண்ணை பாதிரியார்கள் பலர் பலாத்காரம் செய்த கொடுமைகள் அரங்கேறின .
அதனினும் கொடுமை , அமெரிக்காவில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடந்துவந்த ஆண் சிறுவர்களின் மீதாக பாதிரியார்கள் நடத்திய பாலியல் தாக்குதல்கள் . ஆயிரக்கணக்கான சிறுவர்களை பாதித்த இந்த நிகழ்வு குறித்த அறிக்கைகள் வெளிவந்தவுடன் போப் அவர்கள் அனைத்து பாதிரியார்களுக்கும் எழுதிய கடிதமே இதற்கு சான்று.
கோவில் கருவறைக்குள் அட்டூழியம் செய்தவர்களும் இன்னும் நன்றாக இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள் . தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள் , எத்தனை ஆண்டுகளாக நின்று கொல்லும் என்பதுதான் இங்கு கேள்வி .
அனைத்தும் வியாபாரமே
இந்த பதிவினை எழுதுகின்ற நானும் கோயிலுக்கு சென்றேன் , செல்கிறேன் , செல்வேன் . ஆனால் எனக்குள்ளாக பல கேள்விகளை எழுப்பிக்கொண்டுதான் கோவில்களுக்கு செல்கின்றேன் . அந்த கேள்விகள் எனக்கு புரிதல்களை ஏற்படுத்தியிருக்கின்றன .
மொட்டையடிக்கும் முடியை விற்று பணமாக்கு என திருப்பதி ஏழுமலையான் சொன்னாரா ? ஆண்டுதோரும் பல நூறு கோடிகளுக்கு முடியை விற்றே நடத்துகின்ற வியாபாரத்தை யார் கேட்டிர்கள் . சாலையோரங்களில் வேப்பமரம் இருந்தால் சிறிதாக சிலை வைக்கிறான் , அடுத்த ஆண்டு கூல் ஊற்றுகிறான் , அதற்கு அடுத்த ஆண்டு கோயிலை கட்டிக்கொண்டு உரிமையாளனாகிவிடுகிறார்கள் .
துறவின் வேஷத்தில் இருக்கும் கார்பரேட் சாமியார்களை சுற்றி சுற்றி பணம் கொட்டுகிறார்கள் படித்த பக்திமான்கள் . அவர்களோ இலக்கியங்களில் பழைய குறிப்புகளில் கிடைக்கும் விவரங்களையே நயம்பட பேசி தெய்வீகவாதிகள் ஆகிறார்கள் .
சிறுமி ஒருத்தி ஆண் மிருகத்தினால் கற்பழிக்கப்படுவதைக்காட்டிலும் மிகப்பெரிய கொடுமை எதுவுமில்லை , அனாதையாக ஆடையின்றி கதறிடும் கூக்குரலைவிட தெய்வத்தை அழைக்க அதிகபட்ச குரல் எதுவும் தேவையுமில்லை . ஆனால் கடவுள் வரவில்லையே ?
கோயிலுக்கு செல்லாதீர்கள் என்பதல்ல என் கோரிக்கை , கேள்விகளோடு செல்லுங்கள் என்பதே கோரிக்கை
பாமரன் கருத்து