இன்றும் நாம் மெக்காலேயின் அடிமை தான்

இந்தியா எத்தனையோ விதமான அரசர்களின் கீழ் இருந்திருக்கிறது. அவர்கள் தோற்றபிறகு அல்லது நம்மை விட்டு சென்ற பிறகு அவர்களின் ஆட்சிக்காலம் முடிந்துவிட்டது. ஆனால் ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச்சென்று 70 ஆண்டுகள் ஆனபின்னரும் மெக்காலே ஏற்படுத்திய தாக்கம் இன்னும் நம்மை விட்டுப்போகவில்லை. 

தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் தன்னுடைய ‘எனது இந்தியா’ என்ற புத்தகத்தில் ‘மெக்காலேயின் பல்லக்கு’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார். இந்தியர்களாகிய நாம் சுதந்திரம் அடைந்துவிட்டோம் என சொல்லிக்கொண்டு அலைந்தாலும் இன்னமும் மெக்காலே அறிமுகப்படுத்திய கல்வி முறையால் நம்முடைய பாரம்பரியத்தையும் சிந்தனையையும் மொழியறிவையும் இழந்து கொண்டே இருக்கிறோம் என்பதனையும் இன்னமும் அந்தக் கல்விமுறைக்கு அடிமையாகித்தான் கிடக்கிறோம் என்பதனையும் புரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவின் எந்தவொரு மூலைக்குச் சென்றாலும் அங்கே பேசப்படும் மொழியை விட ஆங்கில மொழிதான் உயர்ந்தது என எண்ணுவார்கள் அங்கே சொந்தமொழி பேசக்கூடிய மக்கள். இதுதான் எதார்த்தம். அதேபோல, ஒவ்வொரு பெற்றோரும் தங்களது பிள்ளை ஆங்கில வழிக்கல்வி கற்றால் எளிதில் முன்னேறிவிடுவான், அதுவே கவுரவம் எனவும் நினைக்கிறார்கள். இந்த இரண்டு எண்ணவோட்டங்களும் நாம் மெக்காலேயின் அடிமைகளாக இருப்பதற்கு ஆகப்பெரும் சான்று.

1834 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 அன்று இந்திய சுப்ரீம் கவுன்சில் உறுப்பினராக இங்கிலாந்தில் இருந்து மெட்ராஸ் மாகாணத்திற்கு வந்திருந்தார் மெக்காலே. அப்போது வில்லியம் பெனடிக் கவர்னராக இருந்தார். கடற்கரையில் 15 குண்டுகள் முழங்க பெரிய வரவேற்பு மெக்காலேவிற்கு கொடுக்கப்பட்டதாம். அப்போதைய கவர்னர் வில்லியம் பெனடிக் ஓய்வு எடுக்க ஊட்டியில் தங்கியிருந்தார். ஆகவே அவரை சந்திக்க மெக்காலே ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டார். 

மெக்காலேவை ஒரு பல்லக்கில் நான்குபேர் தூக்கிக்கொண்டு பெங்களூர், மைசூர் வழியாக 11 நாட்கள் நடந்து ஊட்டிக்கு கொண்டுபோனார்கள். நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது அல்லவா. கிட்டத்தட்ட 400 மைல் தூரத்தை பல்லக்கில் மெக்காலேவை தூக்கிக்கொண்டு போனார்கள். அன்று வெள்ளைகார்களுக்கு அடிமைகளாக இருந்தபடியால் நாம் மெக்காலேவை சுமந்தோம். அது விதி. ஆனால் இன்று சுதந்திரம் அடைந்துவிட்டோம். ஆனாலும் மெக்காலேவை சுமக்கிறோமே. இதை என்ன சொல்வது?

மெக்காலே போல இந்தியர்களை புரிந்துகொண்ட வெளிநாட்டவர் எவரும் இல்லை எனலாம். இல்லையென்றால் இவ்வளவு சாமர்த்தியமாக நம்மை அடிமைப்படுத்தியிருக்க முடியாது. இந்தியர்கள் பெரிதாக ஆசைப்படாத அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் மனதுடையவர்கள். அவர்களை கொஞ்சம் மிரட்டி அதிகாரத்தை சற்று வலிமையாக்கி ஆட்சி செய்தால் அவர்களை ஆட்சி செய்திடுவது எளிமையான விசயம் எனக்கருதிய மெக்காலே முதலில் கைவைத்தது கல்விமுறையில்.

பிற மொழியான ஆங்கிலம் கற்பது இந்தியர்களுக்கு கடினம். ஆனால் அவர்கள் கற்றுக்கொண்டால் தான் அவர்களை ஆள்வது எளிது. என்ன செய்யலாம் என யோசித்த மெக்காலே ஒரு முடிவுக்கு வந்தார். ஆங்கிலம் படித்தால் நல்ல சம்பளத்திற்கு வெள்ளைகார்களிடம் வேலைக்கு சேர முடியும் என்றார்.

அடுத்தது, ஆங்கிலேயர்களிடம் வேலை செய்வது கவுரவமான விசயம் என்ற எண்ணவோட்டத்தை புகுத்தினார்.

இந்தியர்களில் பலர் அறிவிற் சிறந்தவர்களாக இருக்கிறார்கள். அதனை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமானால் நமது கல்விமுறைக்கு கீழாக அவர்களை கொண்டுவர வேண்டும் என முன்மொழிந்தார் மெக்காலே.

இந்தியர்கள் நன்றாக படித்தால் நல்ல வேலைக்கு போகலாம் [அப்போது ஆங்கிலேயர்களிடம்] என்ற எண்ணவோட்டம் விதைக்கப்பட்டதும் அவரது ஏற்பாடு தான்.

தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் இருக்கும் உயர்நீதிமன்றத்தில் தமிழ் அதிகாரபூர்வமான வழக்காடு மொழி அல்ல என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும். அங்கேயும் மெக்காலே தான் இருக்கிறார். தமிழ்நாட்டில் தமிழில் வாதாட முடியாது ஆனால் ஆங்கிலத்தில் முடியும். இதுதான் மெக்காலேவை நாம் தூக்கிச்சுமக்கிறோம் என்பதற்கு சிறந்த சான்று.

இந்தியாவில் மெக்காலே இரண்டு முக்கிய விசயங்களை செய்தார். ஒன்று கல்வித்திட்டங்களை வகுத்தது இன்னொன்று குற்றவியல் சட்டங்களை உருவாக்கியது. இன்று நமது அரசியலமைப்பு சட்டத்தில் இருக்கும் பல சட்டங்கள் ஆங்கிலேயர்கள் காலத்தில் அவர்கள் நம்மை ஆள்வதற்கு உருவாக்கிய சட்டங்கள் என்பதே உண்மை.

இந்தியர்களுக்கு ஆங்கிலம் சொல்லித்தர வெள்ளைக்காரர்கள் இங்கிலாந்தில் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு தாய்மொழி ஆங்கிலம். ஆனால் நமக்கு? பொதுவாகவே இந்தியர்களுக்கு ஆங்கில உச்சரிப்பு சரியாக வராது. ஆங்கிலம் சரியாக உச்சரிக்கவராத, பேச வராத நபர்கள் அறிவில் பின்தங்கியவர்கள் என்ற எண்ணவோட்டம் விதைக்கப்பட்டது. அன்று விதைத்த அந்த விதை இன்று பெரிய மரமாகி நம்மில் கலந்துவிட்டது.

மெக்காலே சிறந்த கணிப்பாளி என்பதனை நாம் ஒப்புக்கொண்டு தான் தீரவேண்டும். இல்லையேல் இவ்வளவு திட்டமிட்டு நம் முதுகில் ஏறி சென்றுகொண்டிருக்க அவரால் முடியுமா என்ன. ஆங்கிலம் உயர்ந்தது, ஆங்கிலம் தான் அறிவாளிகளின் மொழி என இந்தியர் எவரேனும் நம்பினால் அவர்களின் முதுகுகளில் மெக்காலே பல்லக்கு பயணம் போய்க்கொண்டிருக்கிறார் என்று பொருள்.

 இப்போது நாம் அவரை இறக்கிவிடப்போவது இல்லை என்றாலும் கூட நமது அடையாளங்களை முற்றிலுமாக இழப்பதற்கு முன்னால் அவரை நாம் இறக்கிவிட்டே தீரவேண்டும்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *