அரசியலாக்கப்படும் விநாயகர் ஊர்வல தடை
இந்த கட்டுரையை படிக்கும்போது ‘நீங்கள் தான் உலகின் உண்மையான பக்திமான் போலவும் நான் அதற்கு (கடவுளுக்கு) எதிரானவன்’ போலவும் எண்ணிக்கொள்ளாமல் எதார்த்த மனநிலையோடு படியுங்கள்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் கொரோனா உலக இயக்கத்தை முடக்கிப்போட்டு இருக்கிறது. ஆண்டாண்டு காலமாக தடைபடாமல் நடந்தேறிய பல விசயங்கள் தடைபட்டு போயிருக்கின்றன. அதுகுறித்து அனைவருக்குமே வருத்தம் தான். ஆனால் என்ன செய்வது இயற்கையின் போக்கில் நாம் இதையெல்லாம் ஏற்றுக்கொண்டுதான் நகர வேண்டி இருக்கிறது.
அனைத்தையும் அப்படி ஏற்றுக்கொண்ட நாம் அல்லது சிலர் தற்போது விநாயகர் ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை குறித்து பெரிய அளவில் விவாதிக்கிறோம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறார்கள்.
அங்கு கொரோனா பாதிப்பை உணர்ந்த நீதிமன்றமோ தடை செல்லும் என அறிவிக்கிறது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் தடை குறித்து விமர்சனங்கள் எழுகின்றன. விமர்சனம் செய்வது உரிமை ஆனால் அந்த விமர்சனத்தின் நீட்சி எப்படி இருக்கிறதென்றால் அரசு இயந்திரம் அனைத்தும் இந்துக்களுக்கு எதிராக இருக்கிறது.
அதனை உடைத்து நான் விழாவை கொண்டாட வேண்டும் என்ற ரீதியில் இருக்கிறது. பல இடங்களில் கூட்டமாக ஊர்வலம் நடந்திருக்கிறது, கூட்டம் கூட்டப்பட்டிருக்கிறது. மதுரை கோவில்களில் பாரம்பரிய திருவிழாக்கள் தடைப்பட்டபோது, எண்ணற்ற மாரியம்மன் கோவில்களிலும் முருகன் கோவில்களிலும் திருவிழாக்கள் தடைப்பட்டபோதும் அமைதியாக இருந்தவர்கள் அதனை ஏற்றுக்கொண்டவர்கள் பிள்ளையார் ஊர்வல தடைக்கு கிளர்ந்து எழுவது வியப்பை அளிக்கவே செய்கிறது.
கொரோனா நோய்த்தொற்றை தடுக்க அரசு கடுமையாக போராடி வருகிறது. எத்தனையோ பேர் இதனால் இறந்து போயிருக்கிறார்கள். அரசு மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தனியார் மருத்துவமனைக்கு சென்றாலோ பத்து லட்சத்திற்கும் குறைவாக கட்டணம் இல்லை.
ஒரு சாமானியன் கொரோனாவின் பாதிப்பு குறித்த உண்மையை புரிந்துகொண்டு அரசின் தடை உத்தரவை பார்க்க வேண்டும். ஊர்வலத்திற்கு தடை விதிக்க அரசு நினைப்பது இல்லை. அந்த தடையில் நேர்மையான காரணம் இல்லாவிடில் நீதிமன்றம் நீக்காமல் விட்டதும் இல்லை.
அப்படி இருக்கும் போது இவ்விடயத்தை அரசியல் நோக்கத்துக்காக முன்னெடுத்து செல்வது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சம் என்றே சொல்லுவேன். ஆனால் அரசியல்வாதிகள் அப்படித்தான் செய்வார்கள்.
ஆனால் சாதாரண பொதுமக்களாகிய நாம் ஒவ்வொருவரும் புரிதலோடு பேச வேண்டும், செயல்பட வேண்டும். தவறாக செயல்படும் அரசியல் கட்சிகளை கேள்வி கேட்க வேண்டும். ஆதரவாக செயல்பட கூடாது.
நாம் செல்வந்தர்கள் அல்ல, சாமானியர்கள். நம்மிடம் மருத்துவ செலவு செய்திட கோடிகள் இல்லை, சாதாரணமானவர்கள். நோய் கிருமி பரவல் கட்டுப்படுத்தப்படும்வரை உணர்ச்சிகளுக்கு இடமளிக்காமல் தனித்திருப்பது மட்டுமே எளியவர்கள் நம்மால் செய்ய முடிந்தது. ஆகவே அதனை செய்வோம்.
விநாயகர் ஊர்வலம் நாம் நன்றாக இருந்தால் அடுத்த ஆண்டு கூட நடத்திக்கொள்ளலாம். புரிதலோடு இருப்போம்.
பாமரன் கருத்து