அனைத்தையும் புரட்டி போடுற அரசியல் தலைவர் வர மாட்டாரா?

ஒருமுறையேனும் ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும், அடுத்தமுறையும் நாமே ஆட்சிக்கட்டிலில் அமர வேண்டும் என்ற அரியணை மோகத்திற்காக மட்டுமே ஆட்சி செய்கிறவர்கள் மத்தியில் ‘மக்களுக்கு நன்மை மட்டுமே’ செய்திட வேண்டும். அதை செய்யப்போய் அவர்கள் தூக்கி எரிந்தாலும் பரவாயில்லை என எண்ணக்கூடிய ஒரு தலைவன் வர மாட்டாரா என்ற ஏக்கம் எனக்கு உண்டு.

ஒருவர் அரசியலுக்கு வருகிறார் என்றால் அதற்கு நோக்கமாக என்ன இருக்க முடியும்? ‘மக்கள் சேவை’ என்பது மட்டுமே நோக்கமாக இருக்க முடியும் என்பது தான் அடிப்படையான பதில். ஆனால் இன்று அரசியலுக்கு வருகிற பலர் என்ன காரணத்திற்காக வருகிறார்கள் என கவனித்து இருக்கிறீர்களா?

>> அப்பா ஏற்கனவே அரசியலில் இருக்கிறார், அவருக்கு பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்திட

>> நிறைய பணம் சம்பாதித்து இருக்கிறேன், அதை காப்பாற்றிக்கொள்ள அரசியல் தேவையாக இருக்கிறது

>> என் சாதி மக்களின் ஆதரவு எனக்கு இருக்கிறது, அதை பயன்படுத்திக்கொள்ள

>> அரசியலில் பங்கேற்றால் தான் மக்களுக்கு நன்மை செய்திட முடியும், அதனால்

>> ஊழல் பெருக்கெடுத்து விட்டது, அதை ஒழிக்க நானே அரசியலில் நுழைகிறேன்

>> தான் சார்ந்த இன மக்களுக்கு போதிய பிரதிநித்துவம் தற்போதுள்ள ஆட்சியாளர்களால் கொடுக்கப்படுவது இல்லை. ஆகவே அவர்களுக்காக அரசியல் பிரவேசம் செய்கிறேன்

இதுபோன்ற பல காரணங்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இருக்கும். 

நாளடைவில் தேய்ந்துபோகும் இலட்சியங்கள்

பெரும்பான்மையான அரசியல் பிரவேசங்களுக்கு ஆத்மார்த்தமான காரணமாக இருப்பது என்னவோ ‘மக்களுக்கு நன்மை’ செய்திட வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த லட்சியம் அரியணை ஏறி பணத்தின் வாசத்தை நுகர ஆரம்பித்த பிறகு மெல்ல மெல்ல புதைகுழிக்குள் ஆழப்புதைந்துவிடுவது தான் அரசியலின் சாபம். இந்த சாபம் பல அரசியல்வாதிகளுக்கு உண்டு. ஆகவே தான் இளம் வயதில் நடந்து நடந்து கால் தேய மக்களுக்கு போராடிய அரசியல்வாதிகள் சில ஆண்டுகளிலேயே ஜாக்குவார் கார்களில் செல்கிறார்கள்.

இறுதிவரை மக்களுக்கு நன்மை செய்கிறவர்கள் இன்று குறைந்து போனதற்கு அரசியல்வாதிகளை மட்டுமே காரணம் சொல்லிவிட்டு கடந்துபோக முடியாது. தேர்தலின் எஜமானர்கள் என அழைக்கப்பெறும் மக்கள் அவர்களது வாக்குகளை சொற்ப பணத்திற்கு விற்க முன்வந்துவிட்ட பிறகே அரசியல்வாதிகளை குற்றம் சொல்ல அவர்களுக்கு ஏது தகுதி. நேர்மையாக மக்களுக்காக செயல்படும் ஒரு அரசியல்வாதியால் ஒரு ஓட்டுக்கு கூட பணம் கொடுக்க முடியாது. கக்கனால் கொடுக்க முடியுமா? காமராஜரால் கொடுக்க முடியுமா? அப்படி கொடுக்க முடியவில்லையென்றால் வெற்றி பெற இயலாது. இதுதான் இன்றைய எதார்த்தமான சூழலாக இருக்கிறது. 

அனைத்தையும் புரட்டி போடுற அரசியல் தலைவர் வர மாட்டாரா?

மஹாத்மா காந்தி பணம் கொடுத்திடவில்லை. ஆனால் அவர் பின்னால் கோடானகோடி மக்கள் சென்றார்கள். அதில் பணக்காரர் இருந்தார், ஏழை இருந்தார், படித்த மேதை இருந்தார், படிக்காத பாமரன் இருந்தார், பெண்கள் இருந்தார்கள். ஆக பேதமின்றி பணம் எதுவும் வாங்காமல் அவர் சொல்படி நடந்தனர். மஹாத்மா காந்தி அவர்களிடம் இருந்த ஏதோ ஒரு வசீகரம் அவர் பின்னால் மக்களை அணிவகுத்து நிற்கச்செய்தது.

மக்களுக்கு நன்மை செய்திட வேண்டும், ஜனநாயகத்தில் குரலற்றவர்களின் குரலாய் இருந்திடல் வேண்டும் என்ற நோக்கத்தை இறுதி மூச்சுவரை கடைபிடிக்கக்கூடிய ஒரு ஒப்பற்ற அரசியல்வாதி வர வேண்டும். சாதியத்தை வளர்த்தெடுக்கும் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டு மாலை அனுவித்து வாக்குவங்கி அரசியலை நகர்த்தி சென்றிடும் சக அரசியல்வாதிகள் மத்தியில் அப்படிப்பட்ட கொண்டாட்டங்களே தவறு, அவை தான் சாதியத்தை தாங்கிப்பிடிக்கின்றன என உரக்க சொல்லும் உத்தம அரசியல்வாதி வர வேண்டும். சொந்தக்காட்சிக்காரன் ஊழல் செய்தால் காவல்துறையில் தானே சாட்சியம் சொல்லி தண்டனை பெற்றுத்தந்திடும் உத்தம அரசியல்வாதி வர வேண்டும், தனக்குப்பிறகு வாரிசை மட்டுமே தட்டிக்கொடுத்து வளர்த்தெடுக்காமல் ‘நேர்மையை’ எந்தத்தொண்டனிடம் காண்கிறேனோ அவருக்கே பொறுப்பு எனச்சொல்லும் அரசியல்வாதி வர வேண்டும்.

அந்நியர்களிடம் அடிமைபட்டுக்கிடந்தபோது நம்மை விடுவிக்க நேதாஜி, காந்திஜி உள்ளிட்ட பல உத்தம தலைவர்கள் கிடைத்தார்கள். ஊழல் பெருக்கெடுத்து ஓடும் இந்த காலகட்டத்தில் நம்மை விடுவிக்க காலம் ஒரு உத்தம அரசியல்வாதியை நமக்கு கொடுக்கும் என நம்புகிறேன். அப்படி ஒருவர் கிடைத்தால் அவர் பின்னால் அணிவகுப்பது நாம் செய்திட வேண்டிய கடமை. 






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *