த பீஸ்ட், நியூக்ளியர் புட்பால் – டிரம்ப் கொண்டுவருவதிலேயே சக்தி வாய்ந்தது இதுதான்
எத்தகைய தாக்குதலையும் சமாளித்து நிற்க வல்லது த பீஸ்ட், உலகின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் அணு ஆயுதத்தை இயக்குவதற்கு ஒப்புதல் அளிக்க வல்லது நியூக்ளியர் புட்பால்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். அமெரிக்க அதிபர்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும்போது அவர்கள் சில பொருள்களை தங்களுடன் கொண்டுசெல்வது வழக்கமாக பின்பற்றப்படுகிற நடைமுறை. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பயணம் செய்வதற்கு உலகிலேயே மிகவும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிற த பீஸ்ட் கார் வருகிறது. மேலும் எப்போதும் அமெரிக்க அதிபர் தன்னுடனேயே வைத்திருக்கும் நியூக்ளியர் புட்பால் கொண்டுவரப்படுகிறது.
எத்தகைய தாக்குதலையும் சமாளித்து நிற்க வல்லது த பீஸ்ட், உலகின் எந்த பகுதியையும் தாக்கி அழிக்கும் அணு ஆயுதத்தை இயக்குவதற்கு ஒப்புதல் அளிக்க வல்லது நியூக்ளியர் புட்பால்
த பீஸ்ட் – அதிக திறன் வாய்ந்த கார் [The Beast]
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இருவரும் இந்திய பயணத்தின்போது பயணம் செய்வதற்கு த பீஸ்ட் காரை பயன்படுத்த இருக்கிறார்கள். 2018 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வந்த தனித்துவமான காடிலாக் கார் தான் த பீஸ்ட். உண்மையில் இதனை கார் என்று சொல்லக்கூடாது, போரில் பங்கேற்கும் டேங்க் என்றுதான் சொல்லவேண்டும் என்கிறார்கள். அந்த அளவிற்கு ஒரு டேங்க் எந்த அளவிற்கு உறுதியானதோ, பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கிறதோ எதிரிகளை தாக்கும் ஆயுதங்களை கொண்டிருக்கிறதோ அதற்கு எந்த வகையிலும் குறையில்லாத அம்சங்களை கொண்டிருக்கிறது த பீஸ்ட்.
த பீஸ்ட் – சிறப்பம்சங்கள்
வெளிப்புறம் : போயிங் 757 ஜெட் விமானத்தில் இருக்கும் கேபின் கதவின் எடைக்கு நிகராக 8 இன்ச் அளவிலான அலுமினியம் டைட்டானியம் மற்றும் செராமிக் கலந்து உருவாக்கப்பட்டுள்ள ஸ்டீல் கொண்டு முழு காரின் சுற்றுப்புறமும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் கதவுகளை மூடிவிட்டால் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்கும் திறன் கொண்ட 100% மூடப்பட்ட அறைபோல அந்த கார் செயல்பட ஆரம்பித்துவிடும்.
காரின் பின்பக்கத்தில் அதிபரையும் சேர்த்து நான்கு பேர் பயணிக்க முடியும். அந்த அறையும் ட்ரைவர் அறையும் தனித்தனியாக பிரிக்கப்பட்டிருக்கும். அதிபர் நினைத்தால் மட்டுமே அதனை திறக்க முடியும். அதேபோல காரில் ஆக்சிஜன் வழங்கும் அமைப்பும் இருக்கிறது. காரின் பின்பக்கத்தில் எதிரிகளை சுட்டுவீழ்த்தும் துப்பாக்கி அமைப்பும் கண்ணீர் புகையை வீசுகின்ற அமைப்பும் இருக்கிறது.
டிரம்ப் இருக்கைக்கு அருகில் சாட்டிலைட் போன் ஒன்று எப்போதும் தயார் நிலையில் இருக்கும். அதன்மூலமாக அதிபர் எப்போது வேண்டுமானாலும் அமெரிக்க துணை அதிபரிடமோ அல்லது பெண்டகன் உடனோ எப்போதும் தொடர்பு கொள்ள முடியும்.
எரிபொருள் அமைப்பு : மிகச்சிறந்த பாதுகாப்பு திறன் வாய்ந்த ஸ்டீல் பிளேட்டால் எரிபொருள் டேங்க் பாதுகாக்கப்பட்டிருக்கும். அதையும் தாண்டி தாக்குதல் நடத்தினால் கூட அந்த அமைப்பு பாதிக்கப்படாத வண்ணம் இருப்பதற்காக ஸ்பெஷல் போம் [Special foam] இருக்கிறது. இதனால் நேரடியாக ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தினால் கூட காரால் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.
அதுபோல காரின் முன்பக்கத்தில் எதிரிகளை தாக்க தானியங்கி துப்பாக்கி மற்றும் கண்ணீர் புகை குண்டு, அதிபரின் ரத்த மாதிரி போன்றவை வைக்கப்பட்டிருக்கும்.தாக்குதலில் காரின் டயர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அப்படியும் கார் டயர் தாக்கி அழிக்கப்பட்டுவிட்டால் ரிம் கொண்டே காரை இயக்க முடியும். அதற்கு ஏற்ற வகையில் ரிம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்பக்கத்தில் இருக்கும் கேமரா கொண்டு இரவில் கார் முகப்பு விளக்குகளை எரிய விடாமல் காரை ஓட்ட முடியும். கார் ஓட்டுனரால் அவரது கண்ணாடியை மூன்று இன்ச் அளவுக்கு தான் கீழே இறக்க முடியும். அதைத்தாண்டி அவரால் இறக்க முடியாது.
அதிபரின் காரை ஒரு சாதாரண ஓட்டுநர் ஓட்டுவதில்லை, ராணுவத்திலேயே மிகச்சிறந்த பயிற்சி பெற்ற ஒரு தலைசிறந்த வீரர் தான் காரை ஓட்டுகிறார். ஆபத்து காலங்களில் எப்படி செயல்படவேண்டும் என்பது குறித்து சிறப்பான பயிற்சி கொடுக்கப்பட்டு அதில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தான் காரை ஓட்டுகிறார். அமெரிக்க அதிபரின் பீஸ்ட் காரை ராணுவம் தான் நிர்வகிக்கிறது.
நியூக்ளியர் புட்பால் [Nuclear Footbal]
இதுபற்றி நாம் நிறைய கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. நியூக்ளியர் புட்பால் என அழைக்கப்படும் இது உண்மையில் புட்பால் போன்ற அமைப்பில் இருக்காது, உண்மையில் இது ஒரு சூட்கேஸ். நியூக்ளியர் புட்பால் என அழைக்கபட்டக்காரணம், அமெரிக்கர்களின் உண்மையான பொழுதுபோக்கு அம்சமாக இருப்பது புட்பால், அந்த பந்தைப்போன்றே இந்த பெட்டியையும் கைகளில் சுமந்து செல்ல முடியும் என்பதால் இப்படி அழைக்கப்படுகிறது.
இதில் ஒரு சிவப்பு நிற பட்டன் இருக்கும் அதனை அழுத்தினால் உலகின் எந்தப்பகுதியையும் இங்கிருந்துகொண்டே அமெரிக்க அதிபரால் தாக்கி அழிக்கமுடியும் என்ற செய்தி இருக்கிறது.
உண்மையில் அப்படிப்பட்ட சிவப்பு நிற பட்டன் எதுவும் இந்த பெட்டியில் இல்லை. மாறாக, ஹோட்டலில் உணவை தேர்ந்தெடுக்க கொடுக்கப்படும் டேப் போன்ற அமைப்பு தான் இதற்குள் இருக்கும். நியூக்ளியர் தாக்குதலை கண்காணிக்கும் மற்றும் தாக்குதல் நடத்த திட்டம் வகுக்கும் பெண்டகன் [National Military Command Center] உடன் தொடர்புகொள்ள இதனை பயன்படுத்த முடியும். இதிலிருந்து தாக்குதலுக்கு அவருடைய ஒப்புதலை அவர் கொடுப்பார். அமெரிக்க அதிபர் அமெரிக்காவைவிட்டு வெளியே செல்லும்போது மட்டும் தான் இந்த பெட்டியை எடுத்துச்செல்லவார்.
இந்த பெட்டிக்குள் என்ன இருக்கும் என்பது குறித்து முன்னால் பாதுகாப்பு அதிகாரி பில் கல்லி தெரிவித்துள்ள தகவல்படி, இதற்குள் 75 பக்கங்களில் நியூக்ளியர் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வாய்ப்புகள் கறுப்பு மற்றும் சிகப்பு நிற எழுத்துக்களில் இருக்கும். மேலும் ஒரு கறுப்பு புத்தகத்தில் ஆபத்தான காலங்களில் அதிபர் பாதுகாப்புடன் இருப்பதற்கான இடங்கள் குறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல ஆபத்துக்காலங்களில் தொலைத்தொடர்புகளை ஏற்படுத்த உதவும் குறிப்புகள், நியூக்ளியர் தாக்குதலுக்கு ஒப்புதல் அளிக்கும் குறியீடு கொண்ட அட்டைகள் இருக்கும்.
இதேபோன்றதொரு பெட்டி அமெரிக்க துணை அதிபரிடமும் இருக்கும். அதிபர் செயல்பட முடியாத நேரங்களில் துணை அதிபர் அந்த வழிமுறைகளை பின்பற்றுவார்.
ஒரு மனுசன் வந்துட்டு போறதுல எவ்வளவு விசயம் இருக்குனு பாருங்க!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
.