குழந்தைகளுக்கு அறிவியலை போதியுங்கள் யூகங்களை அல்ல

உண்மையை விடவும் சுவாரஸ்யங்கள் கலந்த பொய்கள் அல்லது யூகங்கள் அதிவேகமாக பரவுகின்றன. இந்த சூழலில் உங்களது குழந்தைகளை சமூகத்திற்கு தேவையானவர்களாக உருவாக்கிட நினைத்தால் அறிவியலை போதியுங்கள் யூகங்களை அல்ல.
குழந்தைகளுக்கு அறிவியலை போதியுங்கள் யூகங்களை அல்ல

 

காட்டுக்குள் தற்போது இருக்கும் விலங்குகளோடு ஒரு விலங்காக வசித்திட்ட ஒரு உயிரினம் தான் மனித இனம். ஆனால் இன்று மனித இனம் மட்டும் தான் தனது வாழ்வியலை மாற்றிக்கொண்டுள்ளது. மேலும் வாழ்க்கையை எளிமைப்படுத்தவும் அதிக நாள் வாழுதலை உறுதிபடுத்திக்கொள்ளவும் தொடர்ச்சியாக கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்கொண்டே வருகிறது. இதற்கு மிக முக்கியக்காரணம் “சிந்தித்தல்” என்ற மனிதனுக்கு இருக்கும் ஒரு சிறப்பியல்பினால் தான். சிந்தித்தலை செயல்பாட்டுக்கு கொண்டுவருதலில் சோதனைகள் மிக முக்கியபங்காற்றுகின்றன. சோதனையின் முடிவில் எட்டப்படும் முடிவுகள் நம் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்குகின்றன. 

 

சிந்தித்தல் >> சோதனை >> முடிவு  : இந்தப்படிநிலைகளை நாம் அறிவியல் எனக்கூறலாம். இதற்கு மாற்றாக இன்னும் சில விசயங்கள் இருக்கின்றன. அவற்றில் சிந்தித்தல் என்பது மட்டுமே இருக்கும். சோதனை என்பது இருக்கவே இருக்காது. ஒருவேளை சிந்தித்து சொல்லப்படும் விசயம் நடந்துவிட்டால் சோதனை வெற்றியாகக்கொள்ளப்படும் இல்லையெனில் அப்படியே விடப்பட்டுவிடும். இதைத்தான் நான் இங்கே “யூகங்கள்” என குறிப்பிடுகிறேன். யூகங்களை குழந்தைகளுக்கு ஏன் கற்பிக்கக்கூடாது என்பதற்கு முன்னால் நாம் அறிவியல் என்றால் என்ன என்பதற்கான விரிவான விளக்கத்தை தெரிந்துகொள்வோம்.  

ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகள் தான் அறிவியலின் பிறப்பிடம். முட்டாள்தனமாகக்கூட சில கேள்விகள் இருக்கலாம். அவையே மிகப்பெரிய புரட்சியை உண்டாக்கக்கூடிய பதிலைத்தரலாம்.

அறிவியல் என்றால் என்ன?

அறிவியல் என்றால் என்ன என்பதற்கு இப்படி விளக்கமளிக்கலாம் “நாம் நம்மை புரிந்துகொள்ளவும், நம்மை சுற்றியுள்ளவற்றை புரிந்துகொள்ளவும், இந்த உலகம் மற்றும் இயற்கை எப்படி இயங்குகின்றன என்பதை தெரிந்துகொள்ளவும் நாமே மேற்கொள்ளுகிற தொடர்ச்சியான சோதனை அல்லது முயற்சி தான் அறிவியல்” 

 

அறிவியலில் மிக முக்கியமான விசயமே ஊகங்கள் அற்றது என்பது தான். ஒரு கோட்பாட்டை ஒருவர் கூறுகிறார் எனில் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதற்கென சோதனைகள் செய்து அதனை நிரூபித்தால் மட்டுமே அந்த கோட்பாடு அறிவியலுக்குள் வரும். மிகப்பெரிய விஞ்ஞானி ஒருவர் சொல்லிவிட்டார் என்பதனாலேயே எந்தவொரு முடிவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. 

 

இந்தியாவின் மிகப்பெரிய விஞ்ஞானிகளில் ஒருவரும் நோபல் பரிசு பெற்றவருமான சர் சிவி ராமன் அவர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு கடல் மார்க்கமாக பயணம் செய்தார். அப்போது இரவு நேரங்களில் கப்பலின் மேல்தளத்தில் அமர்ந்து கடலின் அழகை ரசித்துப்பார்ப்பார். அப்போது அவருக்குள் இருந்த அறிவியல் அறிஞன் கேள்விகளை கேட்க ஆரம்பித்துவிட்டான். கடல் ஏன் நீல நிறமாக காட்சி அளிக்கிறது? வானத்தின் நீல நிறம் பட்டுத்தான் கடல் நீலமாக காட்சி அளிக்கிறதா? அப்படியானால் ஏன் இரவு நேரத்தில் கூட கடல் நீல நிறத்தில் காட்சி அளிக்கிறது? அப்போதே அவருக்கு சந்தேகம் பிறந்துவிட்டது, சூரியனில் இருந்து வரும் ஒளியினை இந்த கடல்நீரின் மூலக்கூறுகள் எதிரொலிப்பதில் இருந்துதான் நீல நிறம் தோன்றுகிறது என யோசித்தார். கல்கத்தா வந்தவுடன் இதுகுறித்த ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்த சிவி ராமன், ஒரு ஆய்வறிக்கை ஒன்றினை லண்டனில் இருக்கும் ராயல் சொசைட்டிக்கு அனுப்பி வைத்தார். அதற்கு அடுத்த ஆண்டு மூலக்கூறுகள் ஒளியை எதிரொளிக்கும் குறித்த முழு கட்டுரையை வெளியிட்டார். ஒளி ஓர் ஒளிபுகும் ஊடகத்தின் ஊடே செல்லும் போது, சிதறடிக்கப்பட்டு அதன் அலைநீளத்தில் மாறுதல் ஏற்படுகிறது. இதுவே ராமன் சிதறல் [Raman Scattering] அல்லது ராமன் விளைவு [Raman Effect] என அழைக்கப்படுகிறது. இவ்வாறு உட்புகும் ஒளியில் உள்ள போட்டான்களுக்கும் மூலக்கூறுகளுக்குமிடையே ஆற்றல் பரிமாற்றம் நிகழும்போது வெளிவரும் ஒளியின் அலைநீளம் மாறுகிறது.

 

ஒருவேளை சிவி ராமன் சோதனைகள் எதையும் செய்திடாமல் “இதுவாகத்தான் இருக்கும்?” என கூறிவிட்டு சென்றிருந்தால் அது யூகமாகவே கருதப்படும். அறிவியல் இன்னொரு விஞ்ஞானியின் சோதனை முடிவுக்காக காத்திருக்கும். இதுதான் நண்பர்களே அறிவியலின் மகிமை. அறிவியலில் ஒரு முடிவு சொல்லப்படுகிறது என்றால் அது சோதனைக்கு பிறகு எட்டப்பட்ட முடிவு என்பதை புரிந்துகொள்ள வேண்டும். துல்லியமான கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு சில முடிவுகள் மாறுபட்டிருக்கலாம். அதற்கு உடன்பட்டதே அறிவியல்.

சர் சிவி ராமன் பற்றி முழுமையாக இங்கே கிளிக் செய்து படிக்கலாம்

மக்கள் விரும்பும் யூகங்கள்

aadi thallupadi ஆடி தள்ளுபடி

எப்போதும் உண்மையை விட கற்பனைக்கு அதிக சக்தி உண்டு. அது மனிதர்களின் மனங்களை எளிதில் ஆட்கொண்டு விடும். கற்பனை பல சமயங்களில் மனிதர்களுக்கு பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்திட உதவியிருக்கிறது. உதாரணத்திற்கு ரைட் சகோதரர்கள் பறவைகள் போல மனிதர்கள் பறந்தால் எப்படி இருக்கும் என கற்பனையாக சிந்தித்ததனால் விளைந்தது தான் விமானம். ஆகவே யோசிக்கலாம், கற்பனை செய்யலாம் அல்லது யூகம் செய்யலாம். இதில் எதுவுமே தவறில்லை. ஆனால் அதை பிறருக்கு பரிந்துரைப்பதற்கு முன்னாலோ அல்லது பிறர் நம்மிடம் சொல்லும் போது அதை நம்புவதற்கு முன்னாலோ நாம் கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி “சோதனை செய்யப்பட்டு உண்மையென அந்த யூகம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?” என்பதை தெரிந்துகொள்வது தான். இல்லையெனில் அதை பிறரிடம் சொல்லுவதும் தவறு, பிறர் சொன்னால் அதை நம்புவதும் தவறு. 

 

உதாரணத்திற்கு, அண்மையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் விளக்கேற்ற சொன்னார். அவர் சொன்னதன் காரணம் என்னவோ “நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக கரோனா வைரஸ் க்கு எதிராக போராடுகிறோம்” என்பதை நிரூபிப்பதற்காகத்தான் என்றாலும் கூட அந்த செய்தி பலரிடம் தவறான முறையில் கொண்டுசெல்லப்பட்டது. மிகப்பிரபல்யமாக இருக்கக்கூடிய ஒருவரின் மகள் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் 9 கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் வருவதனால் ….என தொடங்கி என்னவெல்லாம் கற்பனையாக சொல்லவேண்டுமா அதையெல்லாம் அள்ளிவிட்டார். உங்களுக்கு தெரியுமா, பிரதமர் சொன்ன காரணம் கூட பெரும்பாலானவர்களுக்கு போய் சேரவில்லை. மாறாக பொய்களும் யூகங்களும் தான் பெரும்பாலான மக்களை சென்று சேர்ந்தது. 

 

பல வதந்திகள் பரவுவதை நிறுத்திக்கொள்ள இந்திய அரசின் தகவல் தொடர்பு துறையின் ட்விட்டர் கணக்கில், “யாரும் அறிவியல்பூர்வமற்ற தகவல்களைப் பகிர வேண்டாம். நம் ஒற்றுமையை வெளிக்காட்டவே விளக்கு ஏற்றும் செயல்,” என குறிப்பிட்டுள்ளனர். “கொரோனாவுக்கு எதிரான ஒருங்கிணைந்த போராட்டத்தின் மன உறுதியையும், ஒற்றுமையையும் வெளிப்படுத்தும் ஒரு செயல்பாடுதான் இது. தயவுசெய்து சமுக இடைவெளியைப் பின்பற்றுங்கள்,” என்றும் தெரிவித்துள்ளனர்.

 

நீங்கள் யூகங்களை பரவவிட்டவர்களிடம் இந்திய அரசே இப்படி சொல்லியிருக்கிறதே என கேட்டுப்பாருங்கள், எங்கேயோ ஒரு முன்னவர் சொல்லியதாக இன்னொரு பொய்யை அவிழ்த்துவிடுவார்கள்.

 

Don't fall for the rumours/unscientific reasoning on the appeal for lightning Diya/candles/flash/torch on 5th April at 9pm.

This initiative is to show solidarity and confidence in our collective fight against #Covid19

Please maintain #SocialDistancing to keep #Covid19 at bay! pic.twitter.com/ZrR9PdhJjv

— PIB Fact Check (@PIBFactCheck) April 3, 2020

குழந்தைகளுக்கு அறிவியலை போதியுங்கள் யூகங்களை அல்ல

குழந்தைகளுக்கு அறிவியலை போதியுங்கள் யூகங்களை அல்ல

கேள்விகேட்கும் குழந்தை கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்

 

பெற்றோர்களை பார்த்தே குழந்தைகள் வளர்கின்றனர். நீங்கள் கடவுளை வணங்குவதும் வணங்காமல் இருப்பதும் உங்களுடைய விருப்பம். ஆனால் கடவுளின் பெயரால் கட்டவிழ்த்துவிடப்படும் யூகங்களை உங்களது குழந்தைகளிடம் கொண்டு சேர்க்காதீர்கள். அது அவர்களுக்குத்தான் கேடானதாக இருக்கும். இதை நீங்கள் பின்பற்றினால் நாளை உங்களது குழந்தைகளும் பின்பற்றுவார்கள். குழந்தைகளுக்கு உண்மையான அறிவியலை பின்பற்றிட கற்றுக்கொடுங்கள். 


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *