டாஸ்மாக் மூலமாக கோடிகள் கொட்டும் ஆனால்…
தமிழகத்தை பொறுத்தவரைக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் டாஸ்மாக் கடைகளை மே 7 ஆம் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டு இருப்பது வேதனை அளிக்கும் விசயமாக இருக்கிறது.
டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவினை பலர் எதிர்க்கிறார்கள். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் “மதுவிலக்கு” என்ற ரீதியில் இதனை எதிர்க்கிறார்கள். ஆனால் நான் இன்னொரு முக்கியமான விசயத்தை முன்னிறுத்தியே அரசு எடுக்கும் இந்த முடிவினை எதிர்க்கிறேன். ஆமாம், ஊரடங்கினால் பல்வேறு தொழில்கள் முடங்கியிருக்கும் சூழலில் ஏழைகளின் வீட்டில் இருக்கும் கொஞ்சநஞ்ச பணத்தையும் இந்த டாஸ்மாக் கடைகள் விழுங்கிவிடும் என்கிற அச்சத்தினால் தான் நான் அரசின் இந்த முடிவை எதிர்க்கிறேன்.
இந்தக்கட்டுரையில் எனது கருத்துக்களை முழுவதுமாக படியுங்கள். உங்களது கருத்தை தவறாமல் கமெண்டில் பதிவிடுங்கள்.
டாஸ்மாக் திறப்பு சரியா?
டாஸ்மாக் கடைகள் ஏன் திறக்கப்படுகின்றன என்பதற்கு அரசு வெளிப்படையாக சொன்ன காரணம், நமது அண்டை மாநிலங்களான ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் ஏற்கனவே மதுக்கடைகளை திறந்துவிட்டார்கள். இதனால் அங்கே திருட்டுத்தனமாக செல்பவர்களை கட்டுப்படுத்த சிரமமாக இருக்கிறது. ஆகவே தான் தமிழகத்திலும் கடைகளை திறக்க முடிவெடுத்துள்ளோம் என கூறியிருந்தார்கள். அதேபோல, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கடைகள் திறக்கப்படாது எனவும் கூறியிருந்தார்கள். உதாரணத்திற்கு, சென்னை உள்ளிட்ட இடங்கள்.
ஏற்கனவே தமிழகத்தின் பெரும்பான்மையான இளைஞர்களும் பெரியவர்களும் மதுவிற்கு அடிமையாகிவிட்ட சூழ்நிலையில் இந்த சூழலை பயன்படுத்தி அப்படியே மதுவிலக்கை கொண்டுவந்துவிடலாம் என்று சிலர் முன்வைக்கும் யோசனையை அவர்களின் நல்ல எண்ணத்திற்க்காக பாராட்டலாம். தவிர அதை செயல்படுத்துங்கள் என வலியுறுத்துவது சரியாக இருக்காது. காரணம், போதிய மருத்துவ ஏற்பாடுகளும் திட்டங்களும் இன்றி மதுவிலக்கை கொண்டுவருவது கொரோனாவை விடவும் பேராபத்தை கொண்டுவந்துவிடும் என்பதே எதார்த்தமான உண்மை.
ஆனால் இவ்வளவு அவசரமாக திறக்க வேண்டிய அவசியம் எங்கே ஏற்பட்டது என்பதுதான் எனது எதிர்ப்பிற்கு முக்கியமான காரணம். அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பணத்தை வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் நமது குடிமக்களுக்கு வெறும் 1000 தான் கொடுக்கப்பட்டது. மூன்றாவது முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட பின்னரும் கூட வழங்கப்படவில்லை. இதுவே மிகப்பெரிய தவறாக பார்க்கப்பட்டது.
ஏற்கனவே ஒவ்வொரு தினக்கூலியும் தான் சம்பாதிக்கும் ஒருநாள் சம்பளத்தில் 40% முதல் 50% வரை டாஸ்மாக் கடைகளிலேயே செலவிட்டு வந்தனர். கொரோனா தடையினால் மதுக்கடைகள் மூடப்படாமல் இருந்திருந்தால் வேலை இல்லாமல் தினசரி வருமானம் இல்லாவிட்டாலும் கூட கடன் வாங்கியாவது குடித்துக்கொண்டு தான் இருந்திருப்பார்கள். காரணம், அவர்கள் அந்த அளவிற்கு அடிமைக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த சூழலில் மதுக்கடைகள் மூடப்பட்டதால் டாஸ்மாக் கடைகளில் அவர்கள் செலவழிக்கும் பணம் மிச்சமாக இருந்தது. ஏற்கனவே இருந்த சிறு சேமிப்புகளை வைத்து குடும்பங்களை நடத்திக்கொண்டு இருந்தார்கள்.
ஆனால் தற்போது டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கின்றது. ஆனால் அனைத்து தினக்கூலிகளுக்கும் முன்புபோல வேலையும் அதன் மூலமாக வருமானமும் கிடைக்க அரசு ஏதேனும் நடவெடிக்கை எடுத்திருக்கிறதா அல்லது உறுதிப்படுத்தி இருக்கிறதா என்றால் “இல்லை” என்பதே பதில்.
டாஸ்மாக் மூலமாக கோடிகள் கொட்டும் ஆனால்….
அரசிடம் பணம் இல்லை ஆகையால் டாஸ்மாக் கடைகளை திறப்பதைத்தவிர வேறு வழியில்லை என சிலர் சொல்கிறார்கள். உண்மைதான், அரசுக்கு குறிப்பிடத்தகுந்த வருமானம் டாஸ்மாக் கடைகளில் இருந்து வருகிறது என்பது உண்மைதான். தற்போது வெகுநாள்கள் கழித்து டாஸ்மாக் கடைகளை திறப்பதன் மூலமாக கோடிகள் கொட்டப்போகிறது என்பதும் உண்மைதான். ஆனால் அந்த கோடிகள் பணம் படைத்தவர்களின் பைகளில் இருந்து கொட்டப்போவது இல்லை. அன்னாடங்காச்சிகளின் பைகளில் இருந்துதான் கொட்டப்போகிறது. இதுதான் இங்கே பிரச்சனையே. இதற்காகத்தான் நான் தற்போது டாஸ்மாக் கடைகளை திறப்பது சரியானது அல்ல எனக்கூறுகிறேன்.
இனி வீட்டில் இருக்கும் சேமிப்புகள் மிகவும் வேகமாக கறையப்போகிறது. சேமிப்புகளைக்கடந்து குடிமகன்கள் கடன்வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஏழைகளிடம் இருந்து பிடுங்கி அதன் மூலமாக அரசு இயந்திரம் செயல்பட்டாக வேண்டும் என்பது மிகவும் கேவலமானதாக இருக்கிறது. அம்மா உணவகம் போன்ற அற்புதமான திட்டங்களைக்கொண்டிருக்கிற தமிழகத்தில் டாஸ்மாக் என்ற கேவலமான திட்டமும் இருப்பது வருத்தமளிக்கிறது.
மதுவை முற்றிலும் ஒழிப்பது தான் அனைவரது விருப்பமாக இருந்தாலும் கூட அதற்கு வாய்ப்பாக ஒரு முன்னேற்றமும் நம் கண்களுக்கு தென்படவில்லை. ஆகையால் தான் இந்த கொடுமையான சூழலிலாவது டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!