ஸ்டாலின் வெளிநடப்பு யாருக்கும் பயனளிக்காது


2019 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று [Jan 02] காலை 10 மணிக்கு தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கிய சிறிது நேரத்திலேயே திமுக மற்றும் அவர்களது  கூட்டணி சார்ந்த கட்சி எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வெளியேறினர்.

 

ஆளுநர் உரை 

 
ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு உரையாற்றினார். அதில், திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொங்கல் பரிசாக ரூ. 1000 வழங்கப்படும் என்றும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயத்தை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்யும் என்றும் கூறினார். 

 

திமுக வெளிநடப்பு

 

ஆளுநர் உரையின்போது, எதிர்க்கட்சி தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் தமிழகத்தின் நிலவும் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பினார். ஆனால், ஆளுநர் அவர்கள் தொடர்ந்து பேசியதால் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சி மற்றும் கூட்டணி சார்ந்த எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் வெளியேறினர். சட்டப்பேரவையிலிருந்து வெளியேறிய ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது, ஸ்டாலின் அவர்கள் ” கஜா புயலில் மத்திய அரசிடம் 15000 கோடி கேட்கப்பட்டது ஆனால் 1500 கோடிகூட வரவில்லை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாயம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக செயல்படுகிறது, மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் தந்து அத்திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்ணுக்கு HIV இரத்தம் செலுத்தியது மற்றும் விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்தக் கோபுரங்கள் அமைத்தல்” தொடர்பாக கேள்வி எழுப்பியதாகவும் ஆனால் ஆளுநர் அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் அரசு எழுதிக்கொடுத்த உரையை படிக்கிறார். இதன் காரணமாகவே தாங்கள் வெளியேறிதாகவும் கூறினார்.

 

வெளிநடப்பு செய்வதால் யாருக்கு என்ன பயன்?

ஆளுநர் படிக்கும் உரை என்பது ஆளுநரால் தயார் செய்யப்படும் உரை அல்ல, அது அரசால் தயார் செய்யப்படும் உரை என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட உரையில் அரசுக்கு சாதகமான அம்சங்கள் தான் இடம்பெற்று இருக்கும் என்பது தெரிந்த விசயம் தான். திமுகவின் ஆட்சிக்காலத்திலும் இதே தான் நடந்திருக்கும். ஆக ஆளுநர் உரை அரசுக்கு சாதகமாக இருக்கிறது என்பதில் பெரிய ஆச்சர்யம் இருப்பதாக தெரியவில்லை.
ஏற்கனவே நாடாளுமன்றம் அரசியல் கட்சிகளின் பொறுப்பற்ற செயல்பாடுகளினால் முடங்கிப்போனது அனைவரும் அறிந்ததே. இப்போது அதே மாதிரியான நிகழ்வு தமிழக சட்டப்பேரவையிலும் நிகழ்வது வருத்தத்திற்கு உரியது.
ஆளுநர் உரையை படித்து முடிக்கும் முன்பே ஸ்டாலின் வெளிநடப்பு செய்துவிட்டார். அவர் வெளிநடப்பு செய்வதால் மக்களுக்கு என்ன பயனளிக்கப் போகிறது? அவர் வெளிநடப்பு செய்வதால் அரசு செய்ய நினைத்த எதனையேனும் தடை செய்துவிட போகிறாரா? தான் கேட்கவந்த கேள்விகளை ஆளுநர் அவர்கள் உரை முடித்தபின்பு கேட்டிருக்கலாம் ஆனால் அதை அவர் செய்யவில்லை. மாறாக வெளிநடப்பு செய்கிறார். இது இன்று மட்டும் நடக்கவில்லை. ஒவ்வொரு முறையும் இதைத்தான் செய்கிறார். முன்னால் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் இல்லாத நிலையில், திமுக எதிர்வரும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்நேரத்தில், ஸ்டாலின் அவர்கள் ஆளும்கட்சியின் குறைகளை சுட்டிக்காட்டியும், மக்களின் உண்மை நிலைமையை எடுத்துக்கூறியும் தன்மீதான விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்து மக்களிடம் செல்வாக்கு பெருவாரென நினைத்தால், “சட்டப்பேரவையில், ஆளும்கட்சியினர் என்ன கூறினால் வெளியேறலாம் ” என்ற கொள்கையை கொண்டவராய், வெளிநடப்பு செய்வதையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.
 
சட்டப்பேரவையில் ஆளும்கட்சி அது திமுகவாக இருந்தாலும் இப்படி தான் நடந்துகொள்வார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படிப்பட்ட சூழலில் வெளிநடப்பையே பிரதானமாக கொண்டு செயலாற்றுவது என்பது வாக்களித்த மக்களை ஏமாற்றுகிற செயல். பல இலட்சம் தொண்டர்கள் மாபெரும் கூட்டணியை கொண்ட கட்சியின் தலைவரே இவ்வாறு நடந்துகொண்டால் மற்ற சிறுசிறு கட்சிகளின் தலைவர்கள் என்ன செய்வார்கள். தன் சுயநலத்திற்காக போராடாமல், தன் தவறுகளை திருத்திக்கொண்டு, மக்களுக்காக மக்கள் மன்றத்தில் உண்மையாக  போராடினால் மட்டுமே அடுத்த தேர்தலில் அவரால் முதல்வராக முடியும்.

 
நன்றி,
க. வினோத்குமார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *