30 நாட்களுக்கு முடங்கப்போகும் சிங்கப்பூர் | ஏப்ரல் 7 முதல் மே 4 வரை
உலக வர்த்தகத்தில் முக்கியப்புள்ளியாக செயல்படும் சிங்கப்பூர் ஏப்ரல் 7 முதல் மே 4 வரைக்கும் முழு ஊரடங்கை கடைபிடிக்கப்போவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் சென்றுள்ள நாடுகளில் ஒன்றாக விளங்கக்கூடிய சிங்கப்பூரில் ஏப்ரல் 07,2020 முதல் மே 4,2020 வரைக்கும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட இருப்பதாக அந்நாட்டின் பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார். இந்த காலகட்டத்தில் மிக முக்கியமான பணிகள் தவிர வேறெதுவும் செயல்பாட்டில் இருக்காது என அவர் தெரிவித்து இருக்கிறார்.
சிறப்பாக தடுப்பு நடவெடிக்கைகளை மேற்கொள்ளும் சிங்கப்பூர்
கிட்டத்தட்ட அனைத்து நாடுகளை சேர்ந்தவர்களும் வணிக விசயமாக வந்துசெல்லக்கூடிய இடங்களில் முதன்மையானது சிங்கப்பூர். நெருக்கமான மக்கள்தொகையை கொண்டிருந்தாலும் கூட மிகவும் குறுகிய பரப்பளவிலான் இடம், அனைத்து இடங்களையும் கண்காணிக்கும் திறன் கொண்ட சிசிடிவி தொழில்நுட்பம், மருத்துவ நிர்வாகம் போன்றவற்றை கொண்டிருக்கிறது சிங்கப்பூர். அதிலும் கரோனா வைரஸ்க்கு எதிராக மிகச்சிறப்பாக முன்னேற்பாடுகளை செய்தது சிங்கப்பூர் என்கிறார்கள் வல்லுநர்கள்.
சீனாவில் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டவுடன் சீனா மற்றும் கொரிய நாடுகளில் இருந்து வரும் பயணிகளை தடுத்து நிறுத்தி கடுமையான மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தியது சிங்கப்பூர் நிர்வாகம். தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவெடிக்கைகளில் எந்தவித சமரசமும் செய்துகொள்ளாமல் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது. மருத்துவ பரிசோதனை முடிந்து வெளியில் செல்பவர்கள், அவர்களோடு தொடர்பில் இருப்பவர்கள் என அனைவரும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட எந்தப்பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ உதவிகொடுக்கப்படுகிறது. நோய் பாதிப்பு தனக்கு வந்திருப்பதாக ஒருவர் சந்தேகம் கொண்டால் அரசை எளிதில் தொடர்புகொள்ளும் விதமாக ஒரு குறுந்தகவல் அனுப்பும் ஆப் ஒன்று கொண்டுவரப்பட்டது.
ஒருவர் நோய் பாதிப்பு குறித்து அரசிடம் தகவல்களை மறைத்தாலோ அல்லது பயண விவரங்களை மறைத்தாலோ அவர்களின் மீது கடுமையான குற்ற நடவெடிக்கைகளையும் சிங்கப்பூர் அரசு செய்துவருகிறது. 2013 ஆம் ஆண்டு 33 பேரை பலி கொண்டது சார்ஸ் நோய், அதேபோல 2010 இல் பன்றிக்காய்ச்சல் நோயால் கிட்டத்தட்ட 4 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்போதே இதுபோன்ற திடீர் வைரஸ் பாதிப்புகளை தவிர்க்க போதுமான கட்டமைப்புகளை செய்துவந்தது சிங்கப்பூர். எளிமையாக கண்காணிக்கும் வசதி, தடையில்லாத மருத்துவ பொருள்கள், சிறப்பான அரசு போன்ற பல்வேறு காரணங்களினால் சிங்கப்பூர் மிகச்சிறப்பாக கரோனோ வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தி வருகிறது. தற்போது மற்ற நாடுகளும் கூட சிங்கப்பூர் போலவே நடவடிக்கைளை மேற்கொள்ளலாம் என பரிசீலித்து வருகின்றன.
மக்கள் தங்களுக்கோ அல்லது தங்களது உறவினர்களுக்கோ சந்தேகம் ஏற்படும்படியாக நோய்ப்பாதிப்பு இருந்தால் அவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்வது கூட ஒருவித உதவிதான்.
30 நாட்களுக்கு முழு ஊரடங்கு
சிங்கப்பூர் மிகச்சிறப்பான நடவெடிக்கைகளை மேற்கொண்டு வந்த போதிலும் கூட கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை என்பது கவலை அளிக்கும் விதத்தில் தான் இருக்கிறது. ஏப்ரல் 06 ஆம் தேதியை பொறுத்தவரைக்கும் 1309 நபர்கள் தற்போது பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். வரும் நாட்களில் இந்த எண்ணிக்கையை குறைப்பதற்கான முயற்சிகளை எடுப்பதற்கு பதிலாக முன்கூட்டியே இந்த நோயையை சமூகத்தில் இருந்து அகற்றுவதற்கான தீர்க்கமான நடவெடிக்கையை எடுப்பதற்கு நாங்கள் முயற்சி செய்துள்ளோம் என சிங்கப்பூரின் பிரதமர் தனது பேச்சில் குறிப்பிட்டு இருந்தார். அதன்படி, கேசினோ, விளையாட்டு அரங்கங்கள் மூடப்பட்டு இருக்கும். உணவகங்கள் , சூப்பர் மார்கெட்டுகள் திறந்திருக்கும் ஆனால் உணவகங்களில் பார்சல் அல்லது டோர் டெலிவரிக்கு மட்டுமே அனுமதி. உலகலாவிய விநியோகசந்தையின் தொடர்பில் இருக்கும் நிறுவனங்கள் செயல்படும்,வேறு எந்த நிறுவனங்களும் வேலைகளும் நடைபெறாது. அனைத்துவிதமான கல்வி நிறுவனங்களும் இந்த தருணத்தில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொழிலாளர்கள் மதிக்க வேண்டும்
பெரும்பாலான இந்தியர்களுக்கு வருவாய் ஈட்டும் ஒரு நாடாக சிங்கப்பூர் இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் அங்கிருக்கும் இந்தியர்கள் அந்த நாடு விதித்து இருக்கும் முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடித்து அந்த நாட்டின் அரசுக்கு உதவியாக இருக்க வேண்டும. அதேபோல இந்த தருணத்தில் பாதிக்கப்படும் சக தொழிலாளர்களுக்கு உதவியாகவும் நீங்கள் இருக்க வேண்டும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!