சச்சின் அடித்ததிலேயே வலி நிறைந்த சதம் இதுதான் | Sachin scored 140 after his father death
சாதாரண மனிதர்களைக்காட்டிலும் ஒரு சூழ்நிலையை சிறப்பாக கையாள விளையாட்டு வீரர்களுக்கு தெரியும். அவர்கள் அதற்காகவே பயிற்சி பெற்றவர்கள். ஆனால் இறுதியில் அவர்களும் மனிதர்கள் தான். அப்பாவின் திடீர் மறைவு ஏற்படுத்திய வலிகளை கடந்து சச்சின் அடித்த 140 ரன்கள் என்பது மகத்தான சாதனை
1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டிக்கு கோப்பையை வெல்லும் முனைப்போடு இந்திய அணி பயணம் செய்தது. இந்தப்போட்டியில் இந்திய அணி உலக கோப்பையை வெல்லாவிட்டாலும் கூட மிகச்சிறந்த நிகழ்வு ஒன்று நடந்தது. அந்த நிகழ்வு ஒரு இக்கட்டான சூழலில் நாம் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நிச்சயமாக கற்றுக்கொடுக்கும். ஆம் அதுதான் சச்சின் அடித்த சதங்களிலேயே வலி நிறைந்த சதம்
சச்சின் அப்பா மறைவு
முதல் போட்டியில் இந்திய அணி அப்போதைக்கு வலிமையாக இருந்த தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்கொண்டது. அந்தப்போட்டியில் இந்திய அணி எடுத்திருந்த 253 ரன்களை 47.2 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்கா அணி எடுத்து வென்றது. அதற்கு அடுத்த போட்டியில் ஜிம்பாபே அணியை சந்திக்க வேண்டி இருந்தது இந்திய அணி. இந்தப்போட்டியில் எப்படியும் வென்றுவிட முடியும் என்ற நம்பிக்கையோடு இந்திய அணியும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் காத்திருந்தனர். ஜிம்பாபே அணிக்கு எதிராக போட்டி நடைபெறவிருந்த நாளுக்கு முந்தைய நாள் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு அதிர்ச்சிகரமான போன்கால் வந்தது. தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடித்தளமிட்டவரும் தனது பாசமிகு தந்தையுமான ரமேஷ் டெண்டுல்கர் மறைந்துவிட்ட செய்தி கேட்டு அதிர்ந்து போனார் சச்சின்.
தனது அப்பாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சச்சின் இந்தியா புறப்பட்டு வந்தார். ஜிம்பாபே அணியை இந்திய அணி சச்சின் இல்லாமல் சந்திக்க வேண்டி இருந்தது. ஜிம்பாபே அணியை எளிதில் வீழ்த்திவிடும் இந்திய அணி என நினைத்துக்கொண்டு இருந்தவர்களுக்கு, சச்சின் உட்பட பெரிய அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தது ஜிம்பாபே. 253 என்ற வெற்றி இலக்கை நோக்கி பயணித்த இந்திய அணியை 249 ரன்களுக்கு சுருட்டி மிகப்பெரிய வெற்றியை சுவைத்தது ஜிம்பாபே அணி. சூப்பர் சிக்ஸ்க்கு செல்ல இந்திய அணி இனிவரும் போட்டிகள் அனைத்திலும் கண்டிப்பாக வென்றால் மட்டுமே சாத்தியம் என்றதொரு நிலைமை உருவானது. அதற்கு சச்சின் அவர்களின் பங்களிப்பு இந்திய அணிக்கு மிகமுக்கியமாக தேவைப்பட்டது.
துக்கத்தை மீறி அணிக்கு திரும்பிய சச்சின்
சச்சின் தேவை அணிக்கு இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததாக இருந்தது. ஆனால் அவர் பெரிதும் விரும்பிய அவரது அப்பா மறைந்து அவர் இறுதிச்சடங்கு நிகழ்வுகளில் பங்கேற்று இருக்கும் போது அவரை எப்படி அழைப்பது என்ற தயக்கம் இந்திய அணி நிர்வாகத்திற்கு இருந்தது. ஆனால் சச்சின் திரும்பினார், ஆமாம் தனது அப்பா இறந்து வெறும் நான்கு நாட்களே ஆன சூழ்நிலையில் இங்கிலாந்து திரும்பினார் சச்சின். அடுத்த போட்டியில் இந்திய அணி கென்யா அணியை சந்திக்க வேண்டி இருந்தது.
பார்ப்பதற்கு கென்யா பலவீனமான அணியாக இருந்தாலும் கூட தொடர்ந்து 2 தோல்விகளை சந்தித்து இருந்தபடியால் இந்திய அணியை எதிர்ப்பதில் கூடுதல் சக்தியை அது பெற்று இருந்தது. கங்குலி, ட்ராவிட் போன்ற ஒவ்வொருவரும் ஒவ்வொரு போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வந்தனர். கென்யாவிற்கு எதிரான போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கினார் சச்சின். சச்சின் அவர்களின் ரசிகர்கள் அவர் ஆடுகளத்திற்குள் களமிறங்கும் போது பெருவாரியாக ஆராவாரம் செய்து வரவேற்றனர். ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும் இப்போதுதான் தனது தந்தையை இழந்திருக்கிறார் இவர் எப்படி ஆடுவார் என்ற சந்தேகமும் நிலவியது.
தனது துக்கத்தை மனதிற்குள் பூட்டிவைத்துக்கொண்ட சச்சின் வழக்கம் போல கை கிளவுஸ்களை சரிசெய்துகொண்டு ஆட்டத்தை துவங்கினார். யாரும் எதிர்பாராத வகையில் சச்சின் மிகச்சிறப்பான ஆட்டத்தை அன்று வெளிப்படுத்தினார். நன்றாக அடித்து ஆடிய சச்சின் 100 ரன்களை கடந்து வானத்தை நோக்கி தலையை உயர்த்த ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். அந்த தருணத்தில் அவர் தனது அப்பாவிற்கு அந்த சத்தத்தை காணிக்கை ஆக்கியிருப்பார் என்று புரிந்துகொள்ள எளிதாக முடிந்தது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய சச்சின் 140 ரன்களை எடுத்து இந்திய அணி வெற்றி பெற பெரிய காரணமாக இருந்தார். சூப்பர் சிக்ஸ் பிரிவுக்குள் நுழைந்த இந்திய அணியால் அதற்கு மேல் பயணிக்க முடியவில்லை.
துயரங்களை துரத்துவோம்
மிகப்பெரிய வீரராக இருந்தாலும் சச்சின் அவர்களும் ஒரு மனிதர்தான். சச்சின் அவர்களுக்கு ஏற்பட்ட பிரிவு போன்று நம் அனைவருக்குமே ஏதோ ஒரு சூழலில் ஏற்படலாம் அல்லது அதே வகையிலான துயரம் வேறு வகையில் ஏற்படலாம். ஆனால் அதைத்தாண்டி நாம் பயணிக்கும் போதுதான் நாம் வாழ்க்கையில் அர்த்தப்படும் வெற்றியை நோக்கி பயணிக்கிறோம்.
தோல்விகளும் பிரிவுகளும் மனிதர்களுக்கு சகஜமானது தான். அவற்றை கடந்து பயணிக்கும் மனிதரே வெற்றி பெறுகிறார்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!