சாதத் ஹசன் மண்ட்டோ : ரத்தமும் சதையுமாக எழுதியவர் | Saadat Hasan Manto Bio in Tamil

வாழ்ந்த காலங்களில் ஆபாசங்களை,வன்முறைகளை தனது எழுத்துக்களாக கொண்டிருக்கிறார் என நீதிமன்ற வாசலுக்கு பலமுறை இழுக்கப்பட்டிருந்தாலும் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களின் குரலாக தன் எழுத்துக்கள் இருப்பதாகக் கூறி அதன் வழியே இறுதிவரை வாழ்ந்தவர் மண்டோ, இவரது முழுப்பெயர் சதத் ஹசன் மண்டோ.

மே 11, 1912 ஆம் நாள் அப்போதைய இந்தியாவின் லூதியானா என்ற இடத்தில் பிறந்தார். பிரிவினைக்குப்பிறகு அந்தப்பகுதி பாகிஸ்தானுக்குள் இருந்தது. அவரும் பாகிஸ்தானில் இருப்பதை ஏற்றுக்கொண்டு தனது வாழ்க்கையை கழித்தார். உருது மொழியில் கதைகளை எழுதும் வழக்கம் கொண்டவர் மண்டோ. இவருடைய எழுத்துக்களால் உருது இலக்கியத்தின் விடிவெள்ளி என போற்றப்படுகிறார். 43 வயதில் மண்டோ இறந்து போனாலும் அவருடைய எழுத்துக்கள் இன்றும் மெச்சப்படுகிறது.

மண்டோ கற்பனையில் உருவான கதாபாத்திரங்களை வைத்து தனது கதைகளை இயற்றவில்லை. அவருக்கு வாழ்வில் ஏற்பட்ட அனுவங்களின் தாக்கத்தின் ஊடாகத்தான் பல கதைகளை அவர் வடித்திருந்தார். அதனாலேயே அவருடைய கதைகளில் வருகின்ற கதாபாத்திரங்கள் வெறும் கதாபாத்திரங்களாக அல்லாமல் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்களாக காட்சியளித்தார்கள். குறிப்பாக மண்டோ அவர்களின் எழுத்துக்கள் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் தாக்கத்தையும் துயரத்தையும் சுற்றியே இருந்தது. அவர் கண்டிட்ட காட்சிகள் அவரை நிலைகுலையச்செய்தன. அந்த நிகழ்வுகள் அவர் எழுதுகின்ற தாள்களோடு முடிந்துபோய்விடவில்லை. அவர் அதனை தனது மனதிலும் ஏறிக்கொள்ள அனுமதி தந்தார். சம்பவங்கள் தன் மனதை பலவீனப்படுத்த அனுமதி தந்தார். அதனாலேயே பல சமயங்களில் அவர் நிலைகுலைந்தவர் ஆனார்.

இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த நள்ளிரவில் பம்பாயில் இருந்தார் மண்டோ. அவர் தனது மனைவி மற்றும் மகளை எழுப்பி விடுதலைகொண்டாட்டத்தில் ஈடுபடுமாறு சொன்னார். அப்போது மண்டோவின் கைகளில் தயாராக இரண்டு தொப்பிகள் இருந்தன. ஒன்று இந்து மதத்தை குறிக்கின்ற தொப்பி மற்றொன்று முஸ்லீம் மதத்தை குறிக்கின்ற தொப்பி. சுதந்திர கொண்டாட்டத்தை விட பிரிவினையின் தாக்கம் உச்சத்தில் இருந்த அந்த சூழ்நிலையில் தொப்பிகள் தங்களைக் காக்கும் என நம்பியிருந்தார். ‘மனதில் இருக்க வேண்டிய மதம் தலைக்கு ஏறிவிட்டால் தொப்பிகள் என் உயிரைக்காப்பாற்றும்’ என சொன்னார் மண்டோ. இந்த சூழ்நிலையில் மண்டோவின் நண்பர் ஒருவர் நீயும் முஸ்லிம்தான். நீ மட்டும் என் நண்பனாக இல்லாவிட்டால் உன்னையும் கொல்வேன்” என்று சொன்னது பெரும்பாதிப்பை ஏற்படுத்தியது தன் நண்பன் மன்டோவிடம் எவ்வளவு கெஞ்சியும், மன்டோ பாகிஸ்தான் செல்லும் முடிவைக் கைவிடவேயில்லை. “இதோ இங்கு இருக்கும் பான் கடையில் ஒரு ரூபாய் பாக்கி இருக்கிறது” என்று பம்பாய் நகரைவிட்டு வெளியேறும் தருணத்தில் மன்டோ கூற, அவர் நண்பர் தான் அந்தப் பாக்கியை அடைத்துவிடுவதாகக் கூறுகிறார். “வேண்டாம். நான் இந்த நகரத்துக்கு என்றென்றும் கடன்பட்டவனாக இருக்க விரும்புகிறேன்” என்றார் மன்டோ.

அண்ணா தமிழில் உரை ஆற்றினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம் என்பார்கள். நேர்த்தியான கருத்துக்களை அளவான சொற்களை பயன்படுத்தி எளிய மக்களுக்கும் புரியும் விதமாக பேசுவதில் வல்லவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அவரது அடுக்குமொழி அழகுதமிழுக்கு தமிழகம் அடிபணிந்து தான் ஆட்சிக்கட்டிலில் அவரை அமர வைத்து அழகுபார்த்தது.  தமிழில் மட்டும் அண்ணா மிகப்பெரிய புலமை பெற்றவர் அல்ல, அவர் ஆங்கிலத்திலும் மிகப்பெரிய அளவில் புலமை பெற்றவராக விளங்கினார். உலகை வெல்ல ஆங்கில அறிவு வேண்டும் என அண்ணா அப்போதே கருத்தியதாலோ என்னவோ தான் இருமொழிக்கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். அண்ணா அவர்களின் வாழ்வில் நடந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை காண்போம்.

“என் கதைகளை உங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் நம்முடைய காலத்தினை தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றே அர்த்தம்”

மண்டோவின் புகழ்மிக்க வாசகங்களில் ஒன்று இது. கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பளிக்கும் அற்புதமான வாசகங்களில் ஒன்றாகவே நான் இதை பார்க்கிறேன். கதைகளில் ஆபாசமாக வருகிறது என நீங்கள் சொன்னால், உண்மையாகவே இப்படியொரு அவல நிலை இருக்கிறதே முதலில் அதனை நீக்க முயற்சி செய்திடுங்கள். பிறகு ஏன் நான் எழுதப்போகிறேன் என விவாதம் செய்தார் மண்டோ. உண்மைதானே, விலை மாதரின் வலிகளை பற்றி எழுதும் போது என்ன எழுத முடியும்? அவரிடம் கொடுமையாக நடந்து கொள்ளும் தரகரைப்பற்றியும் வாடிக்கையாளரைப்பற்றியும் அவர்களது செயலைப்பற்றியும் எழுதிதானே ஆக வேண்டும். அதனை ஆபாசம் என்றால் விலை மாதர்கள் இங்கே இருப்பதே ஆபாசம் தானே.

உதாரணத்திற்கு, மண்டோ எழுதிய நூறு விளக்குகளின் வெளிச்சம் என்ற கதையில் பல நாட்கள் தூங்காமல் பலரை இன்பப்படுத்திய விலைமாதர் ஒருத்தி அயர்ந்து படுத்திருக்கிறாள். தூங்கிக்கொள்கிறேன் என பலமுறை கெஞ்சியும் விடாமல் வற்புறுத்துகிறான் தரகர். வண்டியிழுக்கும் மாட்டிற்கு கொடுக்கப்படும் கரிசனம் கூட இப்பெண்களுக்கு கொடுக்கப்படுவது இல்லை என்பது மண்டோவின் எழுத்துக்களில் இருந்து நம்மால் உணர முடியும்.

“நீ எழுந்து கொள்வாயா மாட்டாயா?”. ஒரு பெண்ணின் குரல், “நான் தூங்க வேண்டும்” என்றது. அந்தக் குரல் அமுங்கி இருந்தது. அந்தத் தரகன் மீண்டும் கர்ஜித்தான். “எழுந்திரு. நான் சொல்கிறேன்… இல்லை என்றால் என்ன நடக்கும் என்று…” “கடவுளுக்குப் புண்ணியமாகப் போகட்டும், என் மீது கொஞ்சம் இரக்கம் காட்டு” என்றாள் அந்தப் பெண். அந்தத் தரகன் இப்போது சமாதானப்படுத்தும் தொனியில் “கண்ணே, தயவு செய்து என்னைப் புரிந்து கொள்ள முயற்சி செய். நாம் வாழ்க்கை நடத்தியாக வேண்டும். இவ்வளவு முரண்டு பண்ணாதே” என்றான். அந்தப் பெண், “எல்லாம் நரகத்துக்குப் போகட்டும். நான் பசியால் சாகவும் தயாராக இருக்கிறேன். கடவுளுக்குப் புண்ணியமாகப் போகட்டும். என்னைத் தொந்தரவு செய்யாதே, எனக்குத் தூக்கம் வருகிறது” என்றாள். அந்த மனிதன் மீண்டும் கர்ஜித்தான். “அப்ப, பன்றிக்குப் பிறந்த நீ எழுந்து கொள்ள மாட்டாய்… உன் ஆத்தாளுக்குக் கல்யாணம் ஆகாமலேயே பிறந்தவ தானே நீ…” அந்தப் பெண் கத்தத்தொடங்கினாள், “என்னால் முடியாது… என்னால் முடியாது”. அந்த மனிதன் அமைதியாக, “கடவுளுக்குப் புண்ணியமாகப் போகட்டும் கத்தாதே, யாராவது நீ கத்துவதைக் கேட்டுவிடுவார்கள். வா எழுந்திரு… நீ நாற்பது, ஐம்பது ரூபாய் சம்பாதிக்கலாம்” என்றான். “இங்க பார், நான் கையெடுத்துக் கும்பிட்டு வேண்டிக் கொள்கிறேன். என்னைத் தனியாக விடு” என்று அந்தப் பெண் கெஞ்சினாள். “நான் பல நாட்களாகத் தூங்கவில்லை. தயவு செய்து என்மீது கொஞ்சம் இரக்கம் காட்டு” அவளின் குரல் மிகவும் பணிந்து போய் இருந்தது. “வெறும் இரண்டு மணி நேரம் தான். பிறகு நீ தூங்கலாம். என்னை முரட்டுத்தனமாக நடந்துகொள்ளும்படி செய்யாதே” என்றான் அந்த மனிதன். சிறிது நேரம் எல்லாம் அமைதியாக இருந்தது. அவன் மெதுவாக இன்னும் மேலே ஏறி, பிரகாசமான ஒளிவீசிக் கொண்டிருந்த அந்த அறைக்குள் தலையை நீட்டிப் பார்த்தான். அழுக்கடைந்த சிறு அறையைப் பார்த்தான். தரையில் ஒரு பெண் படுத்திருந்தாள். மூன்று நான்கு பாத்திரங்கள் ஒரு பக்கமாய்க் கிடந்தன. வேறு எதுவும் இல்லை. தரகன் அந்தப் பெண்ணுக்கு அருகில் அமர்ந்து கொண்டு, அவளின் காலைப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தான். சில நிமிஷங்களுக்குப் பிறகு அவன், “இப்ப எழுந்து கொள். இரண்டு மணி நேரத்திற்கு மேல் நிச்சயம் எடுக்காது. பிறகு நீ தூங்கலாம்” என்றான். அந்தப் பெண் எழுந்துகொண்டே “சரி… சரி…” என்று கத்தினாள்.

வற்புறுத்தல் தாங்காமல் வாடிக்கையாளருடன் புறப்படுகிறாள். இவள் சோர்வாக இருப்பதை அறிந்த வாடிக்கையாளர் இவளை மேலும் துன்புறுத்த விரும்பவில்லை. ஹோட்டலில் இருவருக்கும் இடையே வேண்டா வெறுப்பாக ஒரு உரையாடல் நடக்கிறது. தன்னை அழைத்து வந்ததற்கான செயலை சீக்கிரமாக செய்துவிட்டு தன்னை மீதும் அங்கேயே விட்டுவிடும்படி கெஞ்சுகிறாள். தான் தூங்கி நாட்கள் பல ஆயிற்று என கெஞ்சி மன்றாடும் அந்தப்பெண்ணை அங்கேயே தூங்கிக்கொள்ள அறிவுறுத்தியும் அவள் கேட்பதாக இல்லை. அவளை அழைத்துவந்த இடத்திலேயே மீண்டும் விடுகிறான். பிறகு நடந்தவற்றை தனது நண்பனிடம் விவரிக்கிறான்.

நண்பன் அவளைத்தேடி அந்த இடத்திற்கு போகிறான். எப்படியோ தட்டுத்தடுமாறி அந்தப்பெண் இருக்கும் அறைக்கு அருகே சென்று ஜன்னலில் பார்க்கிறான். அவள் அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். இன்னும் சற்று பார்க்கும் போது தலையில் பலத்த அடியோடு தரகர் இறந்து கிடக்கிறார். அருகே ரத்தக் கரையோடு செங்கல் இருக்கிறது. கதை முடிகிறது.

இப்படித்தான் மண்டோவின் பல கதைகள் இருக்கின்றன. நீங்கள் அவமானம் கதையை படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்து படிக்கலாம்.

நாம் ஏற்கனவே சொன்னதுபோல நிகழ்வுகளை மண்டோ தனது எழுத்துக்களை மட்டும் பாதிக்க அனுமதிக்கவில்லை. மாறாக, அவர் தன்னையே அந்த நிகழ்வுகள் பாதிக்க அனுமதித்து விட்டார். தன்னால் தாங்க முடியாத துயர நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள மதுவை நாடினார். ஆனால் அந்த மது, அவரை காப்பாற்றுவதற்குப் பதிலாக அவரை அழிக்கத்துவங்கியது.

[Thanks Hindu Tamil] பிழைக்கவே முடியாத சிரோஸிஸ் எனும் கல்லீரல் பாதிப்பு நோயாலும் மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டு மண்ட்டோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். இன்னும் 2 மணிநேரத்துக்குமேல் தாங்கமாட்டார் என மருத்துவர்கள் நேரம் குறித்தனர். பரிசோதனை முடிவுகள் அவரின் மரணத்தை உறுதிபடுத்தியதால், மருத்துவர்கள் அவருக்கு விதித்த கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் கொண்டார்கள். எலும்புக்கூடாய், மஞ்சள் காமாலை நோயினால் கண்கள் மஞ்சளேறி உள்அமிழ்ந்து கிடந்த நிலையிலும் மருத்துவமனை சவரத் தொழிலாளியை அழைத்து, தனக்கு சவரம் செய்துவிட சொல்கிறார். நினைவற்ற நினைவில் தொழிலாளிக்கு வாகாகத் தன்னுடைய முகத்தைத் திருப்பிக் காட்டு கிறார். பேசுவதற்குத் தெம்பு இல்லாத நிலையில், சைகைகளால் சரியாகச் செய்யவில்லை என்பதை சவரத் தொழிலாளிக்கு உணர்த்துகிறார். துயர நாடகத்தின் அவலச் சுவை நிரம்பிய காட்சியின் கதாபாத்திரங்களாக மண்ட்டோவும் சவரத் தொழிலாளியும் விரிகிறார்கள்.

மருத்துவர்கள் தளர்த்திய கட்டுப்பாட்டினால், மண்ட்டோவுக்குச் சில சொட்டுக்கள் மது கொடுக்கப்படுகிறது. மதுவின் மீது இருந்த தீரா மோகம், மண்ட்டோவை உயிர்ப் பிழைக்க வைக்கிறது. மண்ட்டோ தன்னுடைய நோய்க்கு எதிராகப் போராடி மீண்டுவர வேண்டும் என விரும்பவில்லை. மதுவிடம் போராடித் தோற்றுப்போக மீண்டும் பிழைத்து வருகிறார்.

மாலை நேரங்களில் மட்டும் குடித்துக் கொண்டிருந்த மண்ட்டோ, பிரிவினைக்குப் பின்னால், லாகூர் சென்றவுடன் முழு நேரமும் குடிக்கத் தொடங்கினார். சிரோஸிஸ் நோயிலில் இருந்து மீண்டுவந்த பிறகு மறுபடியும் குடித்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்ற எச்சரிக்கைகள் அவரை அச்சுறுத்தவில்லை.

குடியினால் அவருக்குள் இருந்த சாதத் ஹசனும், மண்ட்டோவும் காணாமல் போனார்கள். எழுத்தின் நுட்பங்களை அறிந்த அவரால், தன்னுடைய மனத்தைத் தேற்றும் நுட்பம் அறிய முடியவில்லை.

மூத்த மகள் கடுமையான டைபாய்ட் காய்ச்சலால் தாக்கப்பட்டிருந்தாள். மதுப் பழக்கமும், தொடர்ந்து எழுத முடியாத சூழலும், திரைப்படங்களில் வேலை பார்ப்பதை விட்டுவிட்டதாலும் மண்ட்டோ பணத்துக்கு மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார். நண்பர்களிடம், மகளின் காய்ச்சலை குணப்படுத்த மருந்து வாங்க வேண்டும் என்று பணம் வாங்கினார். தன்னுடைய மகளின்மேல் உயிரான மண்ட்டோ, மருந்துகளை வாங்குவதற்கு பதில் மது பாட்டிலோடு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

இச்சம்பவத்தால் உண்டான குற்றவுணர்ச்சியில் இருந்து மீள்வதற்காக, குடிப்பதில்லை என்ற விரதம் கொண்டார். குடிக்கு அடிமையானவர்கள் விஷயத்தில், குடியே எப்போதும் வென்றிருக்கிறது. மண்ட்டோவின் உறுதிகளை, ஒவ்வொரு முறையும் குடி, மிக மோசமாக வீழ்த்தியிருக்கிறது.

புகழ்பெற்ற எழுத்தாளர், வெற்றிபெற்ற திரைக்கதையாசிரியர், குடும்பத்தை அதிகம் நேசித்தவர், குழந்தைகளின்மேல் பேரன்பு கொண்டவர், பிறரின் சிறு துயரம்கூட ஆழமாக பாதித்துவிடக்கூடிய மென்மையான மனதுடையவர்… எல்லா உயரிய குணங்களையும் அவரின் மோசமான மதுப் பழக்கம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவரை மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்பியது.

மண்ட்டோ தூய்மையை நேசித்தார். எளிதில் திருப்திகொள்ள முடியாத அளவுக்குத் தூய்மையை நேசித்ததால், எப்போதும் அவர் தன்னைச் சுத்தப்படுத்திக்கொண்டே இருந்தார். கசங்கிய தாள்களில் எழுதுவதை மண்ட்டோ ஒருபோதும் விரும்ப மாட்டார். தான் எழுத உட்காரும்போது, தட்டச்சு இயந்திரத்தின் தூசியைக்கூட துடைத்துவிட்டு எழுத உட்காருபவர், கால்களை மிகத் தூய்மையாக வைத்திருப்பவர், கழிப்பறையின் ‘காம்மோடு’க்குப் பின்னால், மது புட்டியை மறைத்து வைத்துக் குடிக்கும் அளவுக்கு, மது அவரை மாற்றிவிட்டது. ‘‘மண்ட்டோ எத்தனையோ பொறுப்பற்ற செயல்களைச் செய்திருக்கலாம். ஆனால், அவரின் மரணம்தான் அவரின் மிகவும் பொறுப்பற்ற செயல்!’’ என்று அவரின் மைத்துனரும், எழுத்தாளருமான ஹமீத் ஜலால் கூறுகிறார்.

மண்ட்டோவின் மரணத் தருணத்திலும் அவரை மிகவும் பாதித்தது ஒரு கோர சம்பவமே. குஜராத்தில் தன் கை குழந்தையுடன் காத்திருந்த இளம் பெண்ணை ஏழு கொடூர மிருகங்கள், சூறையாடி, உடம்பில் துண்டுத் துணியில்லாமல் சாலையில் ஓடவிட்டிருக்கிறார்கள். மண்ட்டோவால் இந்தச் சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீளமுடியவில்லை. துயரங்களைச் சமூகத்துக்குக் கடத்த வேண்டிய எழுத்தாளர், தனக்குள் கடத்திக்கொண்டால், தன்னையே இழக்க நேரும் என்பதற்கு மண்ட்டோவே உதாரணம்.

இளம்பெண்ணின் சம்பவத்தால் அதிக அளவு உணர்ச்சிப்பெருக்குக்கு ஆளான மண்ட்டோ நாள் முழுக்கக் குடித்திருக்கிறார். குடல் வெந்து போனதால், ரத்த வாந்தி எடுத்திருக்கிறார். உடல்நிலை மோசமான தருணங்களில் எல்லாம் மண்ட்டோ மீண்டு வந்ததைப் போல், இம்முறையும் மீண்டு வந்துவிடுவார் என மருத்துவர்கள் காத்திருந்தார்கள்.

‘‘இப்போது எல்லாம் கடந்துவிட்டது. என்னை இங்கிருந்து அப்புறப்படுத்தாதீர்கள். இந்த மதிப்பற்ற வாழ்க்கை முடிந்து போகட்டும். நான் இங்கேயே அமைதியாக மரணம் கொள்கிறேன்!’’ என்று சொல்லிய மண்ட்டோவைப் பார்த்து, வீட்டில் இருந்த பெண்கள் அழத் தொடங்கியிருக்கிறார்கள்.‘‘யார் அழுவதையும் நான் விரும்பவில்லை!’’ என்று போர்வையால் முகத்தை மூடிக்கொண்ட மண்ட்டோ, தன் மரணத்தை மற்றவர்கள் பார்ப்பதைக்கூட விரும்பவில்லை. தன்னுடைய கோட் பாக்கெட்டில் இருந்த மூன்றரை ரூபாயை எடுத்துக்கொண்டு போய், கொஞ்சம் மது வாங்கி வரச் சொல்லிக் கேட்டிருக்கிறார்.

அவரின் கடைசிப் பார்வை, அவரின் மனைவிக்கோ, மகள்களுக்கோ, அருகில் இருந்த உறவினர் களுக்கோ, அவரின் புத்தகங்களுக்கோ கிடைக்கவில்லை. மதுவிடம் தன்னை ஒப்படைக்கவே தவித்துக் கொண்டிருந்தார்.

மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் வரும்வரை நினைவுடன் இருந்தார். கடைசியாக மீண்டும் அவர் மதுவை கேட்க, ஒரு ஸ்பூன் அளவுக்கு மது கொடுக்கப்பட்டது. ஓரிரு சொட்டுக்கள் மட்டுமே அவரின் தொண்டைக்குள் இறங்கின. அதற்குள் அவர் தலை சரிந்தது. மண்ட்டோவை தான் வீழ்த்திவிட்டதை அறிவிப்பதற்காக, அவரின் வாயில் மீதமிருந்த மது, கடைவாயில் வழிந்தது.

‘‘உண்மைதான் மிகவும் ஆபாசமானது!’’ என்று மண்ட்டோ இப்போதும் மதுக்கோப்பையுடன் கடவுளிடம் ஆக்ரோசமாக விவாதித்துக் கொண்டிருக்கக் கூடும்.

அவமானம் கதை – மண்டோ படைப்புகள்
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *