பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதா? படித்துவிட்டு சொல்லுங்கள்

பகுத்தறிவு என்பது கடவுளுக்கு எதிரான ஒன்று என்ற கருத்தாக்கம் இங்கே விதைக்கப்படுகிறது. இதனாலேயே பகுத்தறிவை பலர் விரும்பாத சொல் போல பார்க்கிறார்கள். இதற்குப் பின்னால் ஒரு மிகப்பெரிய அரசியல் இருக்கிறது. 

அண்ணா அவர்கள் எழுப்பிய பின்வரும் கேள்வியில் இருந்து இந்தக்கட்டுரையை துவங்குவது சரியாக இருக்குமென எண்ணுகிறேன்,

“புகைத் தொடர் வண்டியை கண்டுபிடித்தவர் யார் என்றால் மிரளுவார்கள். நம் வீட்டில் எரிகின்ற மின் விளக்கைக் கண்டறிந்தவர் யார் என்றால் வாய் திறக்க மாட்டார்கள். புற்று நோயைக் குணப்படுத்தும் ரேடியத்தை கண்டறிந்தவர் யார் என்றால் பேசவே மாட்டார்கள். தமிழ்நாட்டை வளப்படுத்தும் காவிரியாற்றின் பிறப்பிடம் எது என்று வினவினால் கவலை கொள்ள மாட்டார்கள். ஆனால் எமதர்மனுடைய வாகனம் எது என என்று கேட்டால் உடனே எருமைக் கடா என்று பதில் சொல்வார்கள். கைலாயம், வைகுந்தம், சொர்க்கம், நரகம் பற்றிக்கேட்டால் சென்று பார்த்து வந்தவர்களைப்போல மட மடவென்று பதில் சொல்லுவார்கள்”

அண்ணாவின் ஆங்கிலப்புலமை

நம்மவர்களின் பகுத்தறிவு குறித்து அறிஞர் அண்ணா அவர்களின் கருத்து இது. நினைத்துப்பாருங்கள், நம் வாழ்வில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு பொருள் பற்றிய அறிவு நம்மிடம் இல்லை. மாறாக, இதுவரைக்கும் உலகில் எவரும் கண்டிடாத எமன் குறித்தும் சொர்க்கம்ம் நரகம் குறித்தும் ஏகப்பட்ட விசயங்களை நாம் தெரிந்துவைத்திருக்கிறோம். இதில் நம்முடைய தவறு பெரிதாக ஒன்றும் இல்லை. இதில் இருக்கும் அரசியல் தான் நம்மை அந்த நிலையில் வைத்திருக்கிறது. நாம் எதனை தெரிந்து வைத்திருக்க வேண்டும், நாம் எதனை தெரிந்து வைத்திருந்தால் நம்மை எளிமையாக கட்டுப்படுத்திட முடியும் என நினைக்கும் நபர்கள் திட்டமிட்டே நம்முடைய கற்பிக்கும் முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

சிறு குழந்தைகளாக நாம் வளரும் போதே நம்மிடம் சிறு கதைகளாக துவங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வரைக்கும் இப்படியான விசயங்கள் நம் மனதில் விதைக்கப்படுகின்றன.

பகுத்தறிவு என்பது கடவுளுக்கு எதிரானது என பலர் நினைக்கிறார்கள். பகுத்தறிவு என்பது அறிவின் உச்சம். ஒரு சராசரி மனிதனுக்கு அவசியமாக இருக்க வேண்டிய ஒன்று. கடவுளையே எடுத்துக்கொள்வோம், கடவுள் நம்பிக்கை கொண்டிருப்பது பிரச்சனையன்று. ஆனால் நான் கடன் வாங்கியாவது கடவுளுக்கு பூஜை செய்தால் தான் நினைத்ததை கடவுள் செய்வார் என நினைப்பது தான் பகுத்தறிவற்ற செயல். அனைவரையும் சமமாக பார்க்கும் ஒருவராக, எதையும் எதிர்பாராமல் நல்லவர்களுக்கு துணை செய்திடும் ஒருவராக கடவுள் கற்பிக்கப்படுகிறார். ஆனால் மறுபுறம் அர்ச்சனை செய்திடுவதும், உடலை வருத்தி நேர்த்திக்கடன் செய்வதும், பூஜை செய்திடுவதும் அவசியமான ஒன்று எனவும் கற்பிக்கப்படுகிறது. இரண்டு கற்பிதங்களுக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை உணர்ந்து கேள்வி எழுப்பினால் அதுவே ‘பகுத்தறிவு’.

படித்தவர்கள் மட்டுமே பகுத்தறிவுவாதிகள் என்றும் படிப்பற்ற மக்களிடையே தான் பகுத்தறிவு அற்ற நிலை நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. இது முற்றிலும் தவறான கூற்று. இன்றளவும் படித்த குடும்பங்களில் இருக்கக்கூடிய பெண்கள் மாதவிடாய் நாட்களில் முக்கியமான நிகழ்வுகளில் பங்கேற்காமல் சமைக்காமல் ஒதுங்கி நிற்கக்கூடிய சூழல் நிலவுகிறது. ஏதேனும் ஒரு சாமியாரிடம் லட்சங்களை கொட்டிக்கொடுத்து கடவுளின் மொத்த அருளையும் தன்னகத்தே ஈர்த்துக்கொள்ள நினைக்கும் பூஜைகளை நடத்தும் பல படித்த குடும்பங்கள் இருக்கின்றன.

அந்த மூன்று நாட்கள் இயல்பான நாட்கள் என எண்ணி பெண்களை மற்ற நாட்கள் போல சமமாக நடத்திடும் பல குடும்பங்கள் கிராமப்புறங்களில் நிறைந்திருக்கின்றன. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையுடன் கடவுளை வேண்டிக்கொள்ளும் மனிதர்கள் பலர் கிராமப்புறங்களில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் படிப்பறிவு கொண்டர்வர்களும் இல்லை. ஆக நாம் ஒன்றை மட்டும் விளங்கிக்கொள்ள வேண்டும், பகுத்தறிவுக்கும் படிப்பறிவுக்கும் பெரிய அளவில் ஒற்றுமை இல்லை. பகுத்தறிவு மனதளவில் ஏற்படுகிற விசயம் என்பதை இதன் மூலமாக தெளிவாக உணர முடிகிறது.

ஒரு விசயத்தை நம்புவதற்கு முன்னால், சில அடிப்படையான கேள்விகளை உங்களுக்குள்ளாக கேட்டுக்கொள்வதே பகுத்தறிவு. நீங்கள் ஏற்கும்படியான பதில்கள் கிடைத்தால் நம்புங்கள், இல்லையேல் நிகாரியுங்கள். அதுவே பகுத்தறிவு. 

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

One thought on “பகுத்தறிவு கடவுளுக்கு எதிரானதா? படித்துவிட்டு சொல்லுங்கள்

  • December 7, 2020 at 12:45 pm
    Permalink

    பகுத்தறிந்தவர்களின் பகுத்தறிவு பெரும்பாலும் இந்து மதத்தை நோக்கியே இருப்பதால் பல்வேறு கேள்விகள் பலரால் எழுப்பப்படுகின்றன. பகுத்தறிந்தவர்களும், “தாங்கள் சார்ந்த மதம் இந்து மதம் என்பதால் இந்து மதத்தை எதிர்க்கிறோம்” என்கிறார்கள். இஃது, தவறில்லை என்ற போதிலும், மாற்று மதத்தில் இருக்கின்ற அனைத்து சாஸ்திரங்களும் சம்பிரதாயங்களும் சரியாகவே உள்ளனவா? ஆதலால்தான் யாரும் அதனை இந்து மதத்தை எதிர்ப்பதை போல் எதிர்க்கவில்லையா? என்ற கேள்விகளும் பலமுறை வந்து செல்கின்றன.

    உண்மையில், நாம் கடைபிடிக்கும் ஒவ்வொரு பாரம்பரிய செயல்களையும் ஆய்ந்து பார்த்தால், ஏதேனும் ஒரு காரணம் அடங்கியிருக்கும். அதற்காக, அவர்கள் கூறிய அனைத்தையும் கடைபிடிக்க வேண்டிய அவசியமும் இல்லை. “நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. அவர்கள் சரியாகதான் கூறியிருப்பார்கள்” என்ற கருத்தையும் பலமுறை கேட்டிருப்போம். உண்மைதான். அவர்கள் முட்டாள்கள் அல்ல ஆனால் எதற்காக கூறினோம் என்ற காரணங்களை (அறிவினை) கூறாமல் சென்றதன் விளைவுகள்தான் [உதாரணத்திற்கு, மஞ்சள் மற்றும் வேப்பிலையை நாம் கிருமிநாசினிக்காக உபயோகப்படுத்துகிறோம் என்று கூறாமல் கடவுளுக்கு உகந்தது என்று கூறியது] பகுத்தறிவிற்கும், ஆன்மீக செயல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் இந்த மோதல்கள்.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *