உலக நாடுகளில் மழைநீர் எப்படி சேமிக்கப்படுகிறது?
அரசாங்கத்தோடு மக்களும் இணைந்து தண்ணீர் சேமிப்பில் ஈடுபட்டால் தான் தண்ணீர் பிரச்சனையை போக்க முடியும். மழைத்துளி உயிர்த்துளி
தண்ணீர் பற்றாக்குறை என்பது உலக நாடுகள் முழுமைக்கும் பெரும் சவாலாக இருந்து வருகிறது. பருவநிலை மாற்றம் மற்றும் மக்கள் தொகை அதிகரிப்பு என பல காரணங்கள் இதற்கு மிக முக்கிய காரணமாக இருக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் தற்போது தான் தண்ணீர் பற்றாக்குறை மிக முக்கியப்பிரச்சனையாக இருந்துவருகிறது. நதிநீர் இணைப்பு பற்றி நெடும் காலமாக பேசிக்கொண்டிருந்தாலும் மழைநீர் சேமிப்பிற்கு பெரிதாக எதுவும் செயலளவில் இந்தியாவில் எதுவும் ஆக்கப்பூர்வமாக செய்திடவில்லை என்றே சொல்லலாம். காரணம் மிகப்பெரிய தண்ணீர் பிரச்சனையை இதுவரை இந்தியா கண்டிருக்கவில்லை என்பதனால் கூட இருக்கலாம். ஆனால் இப்போது நாம் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு வந்துவிட்டோம். இனியும் நாம் இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் மிகப்பெரிய பிரச்சனைக்கு வந்துவிடுவோம்.
உலக நாடுகள் பலவற்றில் பல ஆண்டுகளுக்கு முன்னதாகவே மழைநீர் சேமிப்பிற்கு தயாராகிவிட்டார்கள். நாமும் அதனை நோக்கி பயணிக்கவேண்டும் என்ற அக்கறையில் “உலக நாடுகளில் மழைநீர் எப்படி சேமிக்கப்படுகிறது?” என்ற கட்டுரை உங்களுக்காக…
சிங்கப்ப்பூர்
சென்னையை விட மிகச்சிறிய பரப்பளவு கொண்ட நாடு சிங்கப்பூர். ஆனால் மிக அதிகமாக மக்கள் நெருக்கம் கொண்ட நாடு என்பதுதான் முக்கியமான ஒன்று. ஆரம்பகாலங்களில் எதுவுமே இல்லாத இடம் என்ற அளவில் அறியப்பட்ட சிங்கப்பூர் சீறிய தலைவர்களின் முயற்சியால் மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறியிருக்கிறது. ஆனால் நீரை சேமிக்க மிகப்பெரிய நதிகளோ, குளங்களோ எதுவுமே வைத்துக்கொள்ளமுடியாத அளவிற்கு மிகச்சிறிய பரப்பளவு கொண்ட நாட்டில் எப்படி தண்ணீர் பற்றாக்குறை சரி செய்யப்படுகிறது?
சிங்கப்பூருக்கு தண்ணீர் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் 100 சதவிகித நீரும் மலேசியாவில் இருந்து கொண்டுவரப்படுவது இல்லை. 1977 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் அரசாங்கம் 10 ஆண்டு திட்டமொன்றினை துவங்கியது. அதன்படி ஆற்றுக்கு மிக அருகில் ஆக்கிரமித்து இருக்கக்கூடிய 26000 குடும்பங்களை வேறு இடங்களுக்கு குடியமர்த்தும் பணியினை துவங்கியது. மிகவும் நேர்த்தியாக செய்யப்பட்ட இந்த திட்டத்தின்படி 1987 ஆம் ஆண்டு முதல் அந்த ஏரி மாசுபடுதல் தவிர்க்கப்பட்டது, மழைநீரை சேமிக்க மிகப்பெரிய பேருதவியாக இது இருக்கிறது.
பெரும்பாலான மக்கள் மிகப்பெரிய கட்டிடங்களில் தான் வாழ்கிறார்கள். ஆகவே கட்டிடத்தின் மேற்புறத்தில் நீர் பிடிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. அவற்றில் இருந்து பெறப்படும் நீரானது மிகப்பெரிய தொட்டிகளில் சேமிக்கப்பட்டுகிறது. அந்த நீரானது டாய்லெட் பயன்பாடு மற்றும் பிற பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஷாங்காய் விமான நிலையத்தில் விழும் மழைநீரானது மிகப்பெரிய அளவில் சேமிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக இரண்டு மிகப்பெரிய நீர்த்தேக்கங்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
பிரேசில்
உலக அளவில் 18% நன்நீர் இருக்கும் பிரதேசமாக பிரேசில் அறியப்படுகிறது. ஆனாலும் ஒரு குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு மட்டும் தான் தண்ணீர் பிரச்சனையின்றி கிடைக்கிறது. ஆனால் பிரேசில் இன்னொரு பகுதியினையும் கொண்டிருக்கிறது. அந்தபகுதியில் மழை குறைவாக பெய்யும் சில ஆண்டுகளில் அதிகமாக பெய்யும். இதனை கணிக்கவே இயலாது.
இதனை தவிர்க்க 2003 ஆம் ஆண்டு One Million Cisterns எனும் திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி வறண்ட பகுதியில் இருக்கும் 10 லட்சம் வீடுகளில் மழைநீரை சேமிக்கும் விதத்திலான மிகப்பெரிய தேக்கங்கள் வீட்டில் அமைத்து கொடுக்கப்படும் . வறண்ட காலங்களில் மக்கள் அந்த நீரை பயன்படுத்திக்கொள்ளலாம். மிகப்பெரிய செலவில்லாமல் மிக எளிமையாக செய்திடக்கூடிய இந்த திட்டத்தின் மூலமாக மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. 2015 ஆம் ஆண்டு கணக்கின்படி 578,336 வீடுகளில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஆஸ்திரேலியா
2003 முதல் 2012 வரையிலான காலகட்டங்களில் மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனையினை சந்தித்து இருக்கிறது ஆஸ்திரேலியா .இதிலிருந்து விடுபட “மானியம் வழங்குதல்” எனும் முறையினை கையில் எடுத்தது. அதன்படி வீடுகளில் சிறிய அளவில் தண்ணீர் சேமிப்பு கலன்களை அமைத்தால் Under Water for the Future திட்டத்தின்படி $500 வழங்கப்பட்டது. மிகப்பெரிய அளவிலான அமைப்புகளை உண்டாக்கும் தன்னார்வ குழுக்களுக்கு $10,000 வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் மிகப்பெரிய அளவில் பணம் செலவிடப்பட்டிருந்தாலும் மக்களின் தண்ணீர் பற்றாக்குறையினை தீர்த்துள்ளது.
இதேபோன்று சீனா, ஜப்பான், தாய்லாந்து போன்ற பல நாடுகள் தண்ணீர் சேமிப்பில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதற்க்கு மிகமுக்கிய காரணம் பொதுமக்களும் அரசாங்கத்தோடு சேர்ந்து செயல்பட்டதால் தான்.
இந்தியாவில் செய்யவேண்டியது
உதாரணத்திற்கு நமது சென்னையை எடுத்துக்கொள்வோம். சென்னை நகருக்குள் இருக்கின்ற நீர் தேக்கங்கள், ஓடைகள் அனைத்தும் குப்பைகளால் நிறைந்து காணப்படுகின்றன. மிகப்பெரிய நதிகளும் கூட இந்த பிரச்சனையை சந்திக்கின்றன. இதற்கு மிகமுக்கிய காரணம், அருகில் இருக்கும் குடியிருப்புகள் மற்றும் பொதுமக்களின் அக்கறையின்மை. அவர்களுக்கு நல்ல குடியிருப்புகளை கட்டிக்கொடுத்து பின்னர் அந்த இடங்களை பராமரித்தால் மிகப்பெரிய அளவில் தண்ணீர் தேவையினை பூர்த்தி செய்யலாம்.
மிகப்பெரிய பரப்பளவினை கொண்ட தேசம் இந்தியா. இங்கே குளங்களை ஆழப்படுத்தினால், நதிகளை தூர்வாரினால், குட்டைகளை முறையாக பராமரித்தால் மிகப்பெரிய அளவில் தண்ணீரை சேமிக்கலாம்.
மழைநீர் சேமிப்பு திட்டம் என்ற அருமையான திட்டம் செல்வி ஜெயலலிதா அவர்களால் துவங்கப்பட்டு பெரும்பான்மையான வீடுகளில் சிறப்பாக இருந்துவந்தது. ஆனால் பிற்காலங்களில் அவை கண்டுகொள்ளப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது . இப்படி ஒரு அலட்சியம் இருந்தால் எத்தனை திட்டங்கள் வந்தாலும் வெற்றியடைய முடியாது.
மக்களுக்கு இன்று விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. நீரை சேமிக்கவேண்டும் என்ற அக்கறை ஏற்பட்டு இருக்கிறது. இதனை நல்ல முறையில் அரசாங்கம் கொண்டு செல்ல வேண்டும்.
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!