PTR மாடல் தான் இன்றைய தேவை

திராவிட மாடல்” என்று தானே அவரே பேசுகிறார், நீங்கள் என்ன புதிதாக PTR மாடல் என்கிறீர்கள் என கேட்கலாம். உண்மையிலேயே தற்போது திமுகவில் இருக்கும் மற்றவர்கள் பின்பற்றும் அரசியல் மாடலுக்கும் PTR பின்பற்றும் மாடலுக்கும் குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் இருக்கின்றன. அரசியலை கூர்ந்து கவனிக்கும் நபர்களுக்கு இந்த வித்தியாசம் நன்றாகவே புரியும்.

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் PTR பின்பற்றக்கூடிய மாடல் தான் இன்றைய தமிழக இளைஞர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. இதனை யார் உணர்ந்து பின்பற்றினாலும் அவர்களுக்கு அரசியலில் பெரும் வரவேற்பை பெற்றுத்தரும்.

குறிப்பாக, திமுக பின்பற்றினால் அதன் நீண்டகால வெற்றிப் பயணத்திற்கு உதவும்.

அதென்ன PTR மாடல்?

திமுகவில் PTR பின்பற்றும் சில விசயங்கள் மற்றவர்களாலும் பின்பற்றப்பட வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே பெரிய அளவில் இருக்கிறது. அதற்கான தேவையும் இருக்கிறது.

ஓட்டுக்கு பணம் இல்லா அரசியல்

தான் இதுவரை பங்கேற்ற இரண்டு தேர்தல்களிலும் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் தந்ததில்லை என அண்மையில் பங்கேற்ற ஒரு இன்டர்வியூவில் சொல்லி இருந்தார் PTR. பணம் கொடுக்கவில்லை, ஆகவே தனக்கு அரசியலில் இருந்து சம்பாதிக்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் சேர்த்தே சொல்கிறார்.

இது முற்றிலும் எதார்த்தமான உண்மை. வெறும் வார்டு உறுப்பினர் பதவிக்கே இன்று லஞ்சம் கொடுக்க வேண்டிய பரிதாப நிலை தான் தற்போது நிலவுகிறது. வெற்றி பெற்றவுடன் முதலீடு செய்த பணத்தைவிடவும் பல மடங்கு பணத்தை ஊழல் செய்து சம்பாதித்துக்கொள்கிறார்கள்.

ஒவ்வொரு அரசியல்வாதியும் இப்படி கொள்ளை அடிப்பதனால் தான் மக்களுக்கான நல திட்டங்கள் சரியாக போய் சேர்வது இல்லை.

கொள்கை பேசும் துணிவு

நீங்கள் தவறு ஏதும் செய்திடாதவராக இருந்தால் நீங்கள் யாருக்கும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. உங்களை யாராலும் மிரட்டவும் முடியாது. அண்மைய காலமாக திமுகவின் “திராவிட மாடல்” கொள்கைகளை இந்தியா முழுமைக்கும் கொண்டு சென்றதில் PTR பங்கு மிகவும் அதிகம். 

அதேபோல, இந்திய அளவில் பொருளாதாரம் குறித்தும் வரி குறித்தும் தெளிவாகவும் காரசாரமாகவும் விவாதித்தவர்களில் முக்கியமானவர் PTR. 

இவ்வளவு துணிவுடன் PTR செயல்படக் காரணம் அவரை கட்டுப்படுத்த எதுவும் இல்லை என்பது தான். 

அரசியல் முதன்மை தொழிலாக இல்லாமை

அரசியல்வாதிகளின் மிக முக்கியமான பிரச்சனை அரசியலை வருமானம் வரும் முதன்மை தொழிலாக கருதுவது தான். இப்படி நினைத்துக்கொண்டு அரசியல் செய்வதனால் அவர்கள் வாழ்க்கையை நடத்துவதற்கு அரசியலில் இருந்து தான் வருமானம் ஈட்டிட வேண்டிய தேவை இருக்கிறது. அரசியலில் இருந்து பணம் எடுக்க என்ன செய்வது? ஊழல் தானே ஒரே வழி. அது தான் இன்றைய அரசியல்வாதிகளின் முதன்மையான சிக்கல்.

குறைந்தபட்சம், அரசு ஊதியம் தருகிற பதவிக்கு வருவதற்கு முன்பாகவாவது வேறு ஒரு வேலையில் இருந்து வருமானத்தை பெறும் வகையில் அரசியல்வாதிகள் இருக்க வேண்டும்.

PTR இன்றளவும் துணிவோடு இருக்கக்காரணம் அவருக்கு அரசியல் இல்லை என்றாலும் அவரால் சிறப்பான வாழ்க்கையை நடத்திட முடியும். இன்றும் அவர் எந்தவித பதவியில் இல்லாமல் போனால் கூட அவருக்கு கவலை இல்லை. காரணம், அவர் இதைவிட்டால் வேறு வழியில்லை என்பதெல்லாம் இல்லை. இப்படி மற்ற அரசியல்வாதிகளும் இருந்துவிட்டால் சிக்கல் இல்லை. 

வெளிப்படைத்தன்மை

வெறும் கொள்கைகளை மட்டும் பேசுவோரை எளிதாக மடக்கிவிடலாம். ஆனால், சரியான தகவலோடு பேசுகிறவர்களை கட்டுப்படுத்த முடியாது. அதுதான் PTR ஐ கட்டுப்படுத்த முடியாமல் இருக்கக் காரணம்.

உதாரணத்திற்கு, புதிய கல்விக்கொள்கை தான் சிறந்தது என யாரேனும் வாதாடினால் தமிழ்நாடு எந்த அளவிற்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் எப்படி சிறந்து விளங்குகிறது என புள்ளி விவரங்களை அடுக்குவார்.

வரி விவகாரங்களில் அவர் வெளியிட்ட சில புள்ளி விவரங்கள் சாமானிய மக்களுக்கும் எளிதில் புரியும் விதத்தில் இருந்தது.

மக்கள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்கள். அங்கே நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனிக்கிறார்கள். ஊழலை அறவே வெறுக்கிறார்கள். தங்களுக்கு பிடித்த அரசியல்வாதிகள் கொள்கை சார்ந்து உறுதியோடு இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ஏற்கனவே, அமெரிக்காவில் இருந்ததாலோ என்னவோ அவர் பின்பற்றும் மாடல் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது.

எப்படியும் பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்கி வெற்றி பெற்றுவிடலாம் என அரசியல்வாதிகள் மக்களைப் பற்றி தவறாக கணக்கீடு செய்து வைத்துள்ளார்கள். ஆனால், அது எப்போதும் வேலை செய்யாது என்பதை அவர்கள் உணர வேண்டும். இனிமேலும் பழைய அரசியல் மாடல் வேலை செய்யாது என்பதை உணர்ந்து அதனை பின்பற்றினால் தான் இனிமேலும் அரசியல் செய்ய முடியும்.

PTR மாடல் இப்போதைய கால கட்டத்திற்கு வேலை செய்யக்கூடிய ஒரு மாடல்!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *