தமிழர்களுக்கு பொங்கல் தின சிறப்பு பகிர்வு

பொங்கல் திருநாள் :

தித்திக்கும் திருநாளாம் எங்கள் பொங்கல் திருநாள் என ஒவ்வொரு தமிழனும் பெருமையோடு கொண்டாடக்கூடியது பொங்கல் திருவிழா. ஆடி மாதத்தில் தேடி விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். அந்த தை மாதத்தின் முதல் நாளினை பொங்கல் திருநாளாக நாம் கொண்டாடி மகிழ்கிறோம்.

கழனி உழுது
நன்னீர் பாய்ச்சி
நெல் தூவி
பார்த்து பராமரித்து
தலை சாய்ந்த
நெற்கதிரை அறுத்து
முதல் பங்கை
சூரியனுக்கு பொங்கலாய்
படைக்கும் திருவிழா
பொங்கல் திருவிழா

அடிப்படையில் விவசாயிகளின் திருவிழாவாக இருந்தாலும் அனைத்து தரப்பு மக்களாலும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. புத்தாடை அணிந்து , கட்டு கரும்பு வாங்கி, கோலமிட்டு ,ஆவாரம்பூ பொங்கல் பூ மாவிலை தோரணம் இட்டு வரவேற்பது வழக்கம். இன்னும் கிராமங்களில் தங்களது வயல்தோறும் இந்த பூக்களை இடுவதை நம்மால் காண முடியும்.

பொங்கல் திருநாள் விவசாயிகளுக்கு நன்றி கூறிடும் நன்நாளாகவும் மாறிவருகிறது. அன்பான தமிழ்மக்களே இந்த நன்நாளில் என்றும் விவசாயிகளின் பக்கம் நிற்போம் என உறுதிமொழி எடுத்துக்கொள்ளுங்கள். கிராமப்புற விவசாயிகளிடம் இருந்து பொருள்களை வாங்கிடுங்கள்.

பொங்கல் – மாட்டுப்பொங்கல் :

பொங்கலுக்கு அடுத்த நாள் மாட்டுப்பொங்கல். தங்களுக்கு மிக உதவியாக இருந்த மாடுகளுக்கு நன்றி சொல்லிடும் விழாவே மாட்டுப்பொங்கல். அன்றைய தினம் மாடுகளை அலங்கரித்து மிகச்சிறப்பாக வண்ணமிட்டு பொங்கலிட்டு மாடுகளுக்கு படைப்பார்கள் விவசாய பெருமக்கள்.

பிறகு ஜல்லிக்கட்டு போன்ற வீர விளையாட்டு போட்டிகளும் நடைபெறும். தமிழர்களின் ஆகப்பெரும் போராட்டத்தினால் ஜல்லிக்கட்டு இன்று சாத்தியமாகி இருக்கிறது.ஜல்லிக்கட்டுக்காக நாம் எவ்வாறு ஒற்றுமையோடு குரல் கொடுத்தோமோ அதைப்போலவே விவசாயிகளின் நலனுக்காகவும் தமிழர்களின் நலனுக்காகவும் குரல் கொடுத்திட தயாராக இருக்கவேண்டும்.

ஒற்றுமையே பலம் என்பதை இந்த நல்ல நாளில் நினைவில் கொள்ளுங்கள் அன்பு தமிழ்மக்களே !

நன்றி
பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *