சாமானியர்களின் ஒரே ஆயுதம் ‘வாக்குரிமை’ அதை விற்கலாமா?
சாதிகள், மதங்கள், பொருளாதார வசதிகள், பாலினம் இவற்றின் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அரசியலமைப்பு சட்டம் கொடுத்தது தான் ‘வாக்குரிமை’ எனும் பிரம்மாஸ்திரம். சாமானியர்களின் ஒரே ஆயுதம் வாக்குரிமை தான். அற்ப பணத்திற்கு அதையும் அடகு வைத்துவிட்டால் நம்மை யார் காப்பார்கள்? நமது உரிமைகளை எப்படி பெற முடியும்?
இந்தியாவை பொறுத்தவரைக்கும் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க தகுதி உடையவர்களாக ஆகிறார்கள். எந்தவொரு வேலைக்கும் குறைந்தபட்ச கல்வித்தகுதி என்ற ஒரு கட்டுப்பாடு இருந்தபோதிலும் கூட தேர்தலில் நிற்பதற்கு எந்தவொரு குறைந்தபட்ச கல்வித்தகுதியும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, ஒரு மாநிலத்தின் முதல்வராக, இந்தியாவின் பிரதமராகக்கூட பள்ளிக்கூடமே செல்லாத ஒருவரால் ஆக முடியும். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் கல்வி பயிலாதவர்கள் இல்லை. அவர்கள் நிறைய படித்தவர்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் சட்டம் எப்படி உள்ளது, எப்படி செயல்படுகிறது என்பதையெல்லாம் கரைத்துக்குடித்தவர்கள்.
அப்படிப்பட்ட அறிவாளிகள் அனைவரும் இணைந்து ‘அனைவருக்கும் வாக்குரிமை உண்டு’ எனவும் தேர்தலில் நிற்க ‘கல்வித்தகுதி அவசியம் இல்லை’ எனவும் சொல்கிறார்கள் எனில் அதில் அர்த்தம் இல்லாமலா இருக்கும். ஜனநாயகம் கட்டிக்காக்கப்படுவது இரண்டு விசயங்களில் தான். ஒன்று : யாரெல்லாம் போட்டியிடலாம், இரண்டு : யாரெல்லாம் தேர்ந்தெடுக்கலாம் என்பவை தான் அவை. இந்த இரண்டிலும் கட்டுப்பாடுகளை விதித்தால் அது உண்மையான ஜனநாயகம் ஆகாது என்பதை உணர்ந்திருந்தார்கள். ஆகவே தான் அனைவருக்கும் வாக்குரிமை என சட்டமியற்றினார்கள்.
ஒருவேளை, ஒரு 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்குத்தான் வாக்குரிமை என்றோ, டிகிரி முடித்தவர்கள் தான் தேர்தலில் நிற்கலாம் என்றோ விதிகள் எழுதப்பட்டிருந்தால் கடந்த 70 ஆண்டுகளில் சாமானியர்கள் வெள்ளையர் ஆட்சிக்காலத்தை விடவும் கொடுமையை அனுபவித்து வந்திருப்பார்கள். மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு வேலை செய்திடவே சாமானியர்கள் என்ற நிலை உருவாகி இருக்கும். அனைவருக்கும் வாக்குரிமை என்ற ஒன்று இருப்பதனால் தான் சாமானியர்களையெல்லாம் அரசியல்வாதிகள் கண்டுகொள்கிறார்கள். அடிப்பதில் கொஞ்சத்தையாவது சாமானியர்களுக்கு விட்டுத்தருகிறார்கள்.வாக்குரிமை இல்லையேல் செருப்பில் ஒட்டிய சாணியை தேய்த்துவிட்டு போவது போல நம்மையெல்லாம் இந்த உலகில் இருந்தே தேய்த்துவிட்டு போயிருப்பார்கள்.
நாம் ஒன்று ஓரளவுக்கேனும் அடையாளம் பெற்றவர்களாக வாழுவதற்கு அடிப்படைக்காரணமே நமக்கெல்லாம் இருக்கும் ‘வாக்குரிமை’ தான். ஆனால் நாமெல்லாம் அதனை எப்படி பயன்படுத்துகிறோம் என நினைத்துப்பாருங்கள்.
வாக்கு செலுத்தப்போவதை வேண்டாத வேலையாக நினைத்து அதனை தவிர்ப்பது
பரம்பரை பரம்பரையாக ஒருவருக்கே வாக்கு செலுத்துவது
தேர்தல் சமயத்தில் ரூ500க்கும் குவாட்டருக்கும் வாக்குரிமையை விற்பது
ஊழல்வாதி எனத்தெரிந்தும் அவருக்கே வாக்களிப்பது
– என ஒவ்வொரு முறையும் வாக்குரிமையை தவறாகத்தானே பயன்படுத்தி வருகிறோம்.
படிப்பறிவு இல்லாதவர்கள், சாமானியர்கள், ஏழை எளியவர்கள் தான் இந்த வேலையை செய்கிறார்கள் என சொல்லிவிட முடியாது. பட்டம் பெற்ற, வருமானத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பலரும் கூட இதே வேலையில் தான் ஈடுபடுகிறார்கள். ஓட்டுக்கு பணம், பரிசுப்பொருள் வாங்காத ஏழையையும் கண்டிருக்கிறோம், செல்வமிருந்தும் படித்திருந்தும் ஓட்டுக்கு பணம் வாங்கும் மக்களையும் கண்டிருக்கிறோம். ஆக ஓட்டுக்கு பணம் வாங்குவது பாகுபாடில்லாமல் நடைபெற்று வருகிறது.
வாக்கு நமது அடிப்படை உரிமை எனத்தெரிந்த நமக்கு, வாக்கு செலுத்துவதற்கு பணம் வாங்குவது தவறு என்றும் தெரிய வேண்டும். இலவசங்களுக்கும் லஞ்சங்களுக்கும் நெடுங்காலமாக பழகிவிட்ட நம் மக்களை திருத்தி நல்வழிப்படுத்துவது கொஞ்சம் கடினமானதுதான். ஆனால் புதியவர்களையாவது நல்வழியில் பயணிக்க செய்தே ஆக வேண்டிய நிர்பந்தம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. வாக்குகள் விற்பனைக்கு என்றால் பணக்காரன் எல்லாம் அரசியலை ஒரு வியாபாரம் ஆக்குவான். நமக்கு கிடைக்கவேண்டியதை அவன் அள்ளிக்கொண்டு நமக்கு கிள்ளிக்கொடுத்துவிட்டு போவான்.
பதிவை படித்தவர்கள், வாக்குக்கு லஞ்சம் வாங்க மாட்டேன் என கமெண்டில் பதிவிடுங்கள்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!