மகளின் கனவை சிதைத்த தந்தை | நீங்க இதை செஞ்சுறாதீங்க
அப்பாக்களின் ஆகச்சிறந்த அன்பைப் பெறுகிறவர்கள் மகள்கள் தான். அப்படிப்பட்ட செல்ல மகள்களின் எதிர்காலத்திற்காக பல விசயங்களை தியாகம் செய்திட துணிந்தவர்கள் அப்பாக்கள். ஆனால் ஒரு தந்தை அப்படியொரு துணிவான காரியத்தை செய்யப்போக மகளின் எதிர்காலத்தையே அது கேள்விக்குள்ளாகியுள்ளது.
அண்மையில் நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் நீட் தேர்வில் 610 பெற்றதாக சான்றிதழ் கொடுத்து மருத்துவ இடத்தை தக்கவைத்துக்கொண்டார் பரமக்குடியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரது மகள். இவர் பல்மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது. கலந்தாய்வில் மருத்துவ கல்வி இடங்களை பெற்றவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. அப்போதுதான் குறிப்பிட்ட அந்த மாணவி தவறான நீட் தேர்வு மதிப்பெண்ணை கொடுத்திருப்பது தெரியவந்தது. அந்த மாணவி கொடுத்த சான்றிதழில் நீட் தேர்வு மதிப்பெண் 610 என இருந்தது ஆனால் அந்த மாணவி உண்மையில் பெற்ற மதிப்பெண்ணோ வெறும் 27 தான்.
இதனை அடுத்து மருத்துவ கல்வியகம் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அந்த மாணவி மற்றும் அவரது தந்தை ஆகிய இருவரையும் தேடி வந்தனர். தற்போது அவரது தந்தை கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் விசாரணை வளையத்தில் இருக்கிறார். போலிச்சான்றிதழ் வழக்கு என்பதனால் இதில் அதிகம் பேர் சம்பந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர் காவல்துறையினர்.
மகளுக்கு மருத்துவ இடம் வாங்கிட வேண்டும் என்ற பேராசையில் படித்த அறிவுள்ள தந்தை செய்த காரியம் மாணவியின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாக்கிவிட்டது என்பதே உண்மை. இனிமேல் அந்த மாணவியால் மருத்துவமே படிக்க முடியாது என்ற நிலைக்கு தள்ளவைத்துவிட்டது. மருத்துவம் படிப்பதே லட்சியம் என்றால் அடுத்த ஆண்டு நீட் தேர்வு எழுதிக்கூட அந்த மாணவியால் படித்திருக்க முடியும். ஆனால் அவரது தந்தை செய்திட்ட காரியத்தால் அவரது மகள் குற்றவாளியாக மாறியிருக்கிறார். அவர் அவமானப்பட்டிருக்கிறார். அவர் தந்தை செய்த ஒரு மாபெரும் தவறு மகளின் எதிர்காலத்தை கேள்விக்குள்ளாகிவிட்டது.
நேர்மையை பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள் தான். ஆனால் சமூகத்தில் பல பெற்றோர்கள் பிள்ளைகளின் நலனுக்காக என்றெண்ணி தவறுகளை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். இது எவ்வளவு பெரிய அபத்தம். இங்கே பெற்றோர்கள் எண்ணுவது ஒரே விசயம் தான், பிள்ளைகள் நன்றாக சம்பாதிக்கும் ஒரு வேலையில் சேர்ந்துவிட வேண்டும் அவ்வளவே. நேர்மையான நபராக அவர் இருக்கவேண்டும் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லாமல் போய்விட்டது. இதனால் தான் இங்கே பிள்ளைகளின் எதிர்காலம் அழிந்துபோகிறது. உங்களது பிள்ளைகளுக்கு தயவு செய்து இப்படியொரு தவறை செய்திடாதீர்கள்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!