ஒருநாள் முதல்வர் : யார் அந்த சிருஷ்டி கோஸ்வாமி? | One Day CM Srishti Goswami
தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 கொண்டாடப்படுவதை அடுத்து உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒருநாள் முதல்வராக 19 வயதான சிருஷ்டி கோஸ்வாமி நியமிக்கப்பட்டார். யார் அந்த சிருஷ்டி கோஸ்வாமி? முதல்வருக்கான அனைத்து அதிகாரமும் அவருக்கு கொடுக்கப்பட்டதா? வாருங்கள் பார்க்கலாம்.
சங்கர் இயக்கத்தில் நடிகர் அர்ஜுன் நடித்த முதல்வன் திரைப்படம் வந்தபிறகு தமிழ்நாட்டில் ”ஒருநாள் முதல்வர்” என்ற வார்த்தை பழக்கப்பட்டுப்போனது. அது திரைப்படம் தான் என்றாலும் கூட, தற்போது உண்மையாகவே ஒருநாள் முதல்வர் என்ற சம்பவம் நடந்திருக்கிறது. இந்தக்கட்டுரையை படிப்பதற்கு முன்பு, முதல்வர் படத்தில் வரும் ‘ஒருநாள் முதல்வர்’ பதவிக்கும் இப்போது நாம் பார்க்க இருக்கும் ‘முதல்வர் பதவிக்கும் வித்தியாசம் இருக்கிறது. படத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு ஒருநாள் முதல்வராக அர்ஜுன் இருப்பார். ஆகவே அவரால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடிந்தது. ஆனால் தற்போது சிருஷ்டி கோஸ்வாமி வகிக்கும் முதல்வர் பதவி, பெண்கள் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக அடையாளமாக வழங்கப்பட்டுள்ள முதல்வர் பதவி. இந்தபதவியில் அவரால் உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. மாறாக, இவர் முன்வைக்கும் கோரிக்கைகளை அதிகாரிகள் முதல்வருக்கு பரிந்துரை செய்வார்கள்.
வாருங்கள், கட்டுரைக்குள் நுழைவோம்.
பல்வேறு மாநிலங்களில் குழந்தைகள் சட்டமன்றம், குழந்தைகள் பாராளுமன்றம் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நிஜத்தில் இருக்கும் நாடாளுமன்றம், சட்டமன்றம் போன்றே அனைத்து நிகழ்வுகளும் நடக்கும். பிரதமர், அமைச்சர்கள், முதல்வர், அமைச்சர்கள், கேள்வி நேரம் என அனைத்தும் இருக்கும். உத்தரகாண்ட் மாநிலத்தில் மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இதுபோன்றதொரு குழந்தைகள் சட்டமன்றத்தை [பால் விதான் சபா – Bal Vidhan Sabha] நடத்தி வருகிறது. அதில் தான் சிருஷ்டி கோஸ்வாமி முதல்வராக இருக்கிறார். அந்த ஆணையம் தேசிய பெண் குழந்தைகள் தினம் ஜனவரி 24 கொண்டாடப்படுவதை அடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் சிருஷ்டி கோஸ்வாமியை ஒருநாள் முதல்வராக பணியாற்றிட அனுமதி வாங்கியது. தற்போது முதல்வராக இருக்கும் திரிவேந்திர சிங் ராவத் அவர்களும் இதற்கு ஒப்புக்கொண்டு உடன் இருந்தார்.
ஜனவரி 24 [ஞாயிற்றுக்கிழமை] ஒருநாள் முதல்வராக பணியை துவங்கினார் சிருஷ்டி கோஸ்வாமி. தான் முதல்வராக பணியாற்றிய தருணத்தில் மாநிலத்தில் நடைபெறும் குற்றங்களை எடுத்துரைத்த போது சமூகத்தில் பெண்களுக்கு இழைக்கப்படும் குற்றங்களுக்கு எதிராக கடுமையாக நடவெடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதுதவிர மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார். தனது மகள் புத்திசாலி என்றும் அவர் அனைத்து இடங்களிலும் பெண்களின் நலனுக்காக உழைக்க விரும்புவார் என்றும் பெண் குழந்தைகள் கல்வி பெற ஊக்குவிக்கும் ஒரு சமூகத்தின் அங்கம் அவர் என்றும் பெருமிதம் கொள்கிறார்கள் சிருஷ்டி கோஸ்வாமியின் பெற்றோர். பெண்கள் மேம்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த ஏற்பாடு என உத்தரகாண்ட் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இப்படியொரு மாதிரி சட்டமன்றமோ நாடாளுமன்றமோ நடைபெறுவதாக தெரியவில்லை. இப்படியொரு அமைப்பு இளம் தலைமுறைகளிடம் அரசியல் ஆர்வத்தை தூண்டவும் அரசியலில் அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கான படிப்பினையாகவும் அமையும் என்பது 100% உண்மை. சிருஷ்டி கோஸ்வாமிக்கு ஒருநாள் முதல்வர் பதவி வழங்கியிருப்பது ‘நாமெல்லாம் பெண் குழந்தைகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்’ என்பதை நினைவு படுத்தவே. ஆகவே அதனை ஒவ்வொருவரும் செய்திட வேண்டும்.
நம் வீடுகளில் ஒரு பழக்கம் இருக்கிறது. பெண் குழந்தைகள் ஏதாவது ஒன்றை செய்திடும் போது ‘பொம்பள புள்ள அப்படி செய்யக்கூடாது’ என்பார்கள். செய்யக்கூடாது என்றால் ஆண் குழந்தையும் செய்யக்கூடாது தானே. இங்கிருந்து தான் துவங்குகிறது ஆண் பெண் ஏற்றத்தாழ்வு. நம் வீடுகளில் ஆண் பெண் என பார்க்காமல் சரியான விசயங்களை செய்ய குழந்தைகளை அனுமதிப்போம். அவர்கள் சமூகத்தின் ஏற்ற இறக்கங்களை எளிதாக கடந்து சென்றுவிடுவார்கள்.