என்எல்சி போராட்டம் | வாழ்வாதாரத்தை அழித்து வளர்ச்சியா?
புதிதாக மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காக 26 கிராமங்களை சேர்ந்த 12125 ஏக்கர் நிலத்தினை கையப்படுத்துகின்ற வேலையினை என்எல்சி நிர்வாகம் துவங்கியுள்ளது. ஏற்கனவே இருக்கின்ற சுரங்கங்கள் மூலமாக தேவைக்கும் அதிகமாக நிலக்கரி வெட்டி எடுக்கப்படும் சூழலில் விவசாயமே மிகப்பெரிய ஆதாரமாக விளங்கக்கூடிய கிராமங்களின் நிலத்தினை என்எல்சி நிர்வாகம் பிடுங்க நினைக்கிறது என அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகிறார்கள்.
ஏற்கனவே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம், நெடுவாசல் ஹைடிரோகார்பன் போராட்டம், சேலம் எட்டுவழி சாலை போராட்டம் என தமிழகமே அல்லோலப்பட்டு கொண்டிருக்கக்கூடிய சூழலில் என்எல்சி யின் இத்தகைய செயல்பாடு மீண்டும் ஒரு போராட்டதை உண்டாக்கி விடும் என்றே தெரிகிறது.
தானாக நிலம் வழங்கிய கிராம மக்கள்
1935 ஆம் ஆண்டுவாக்கில் ஜம்புலிங்கம் எனும் விவசாயி, ஆழ்துளை கிணறு தோண்டும் போது கறுப்பு நிற பொருள் வெளிப்பட அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தினார். பின்னர் அது நிலக்கரி என உறுதியானது. 1956 இல் இந்திய அரசால் சுற்றியிருந்த பகுதிகளும் சோதனை செய்யப்பட்டு நிலக்கரி இருப்பது ஊர்ஜிதம் ஆனதால் நிலக்கரி வெட்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதனை வைத்து மின்சாரம் தயாரிக்கவும் என்எல்சி உருவாக்கப்பட்டது.
என்எல்சி அமைக்கவும் அங்கு வேலை செய்வபர்கள் தங்கவும் அடிப்படை கட்டமைப்புகளை மேற்கொள்ள 23 கிராமங்கள் இடம்பெயர்வு செய்யப்பட்டனர். அப்போதைய சமயத்தில் அந்த கிராம மக்கள் எந்தவித எதிர்ப்பும் இன்றி அரசுக்கு நிலத்தினை கொடுத்ததாக கூறப்படுகிறது.
கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 1.வெள்ளையங்குப்பம் 2.பெருமாத்தூர் 3.வேலுடையான் பட்டு 4.கூரைபேட்டை 5.வெண்ணெய்குழி 6.தாண்டவங்குப்பம் 7.நெய்வேலி 8.கெங்கைகொண்டான் 9.பாப்பனம்பட்டு 10.வேப்பங்குறிச்சி 11.தெற்கு வெள்ளூர் 12.வடக்கு வெள்ளூர் 13.மூலக்குப்பம் 14.காரக்குப்பம் 15.ஆதண்டார்கொல்லை 16.மந்தாரக்குப்பம் 17.சாணாரப்பேட்டை 18.அத்திபட்டு 19.வினை சமுட்டிக்குப்பம் 20.தெற்கு மேலூர் 21.இளவரசன் பட்டு 22.விளாங்குளம் 23.நொடுத்தாங்குப்பம்
இவர்களுக்கு விருத்தாசலத்திற்கு வடக்கில் உள்ள விஜயமா நகரம் என்ற ஊரில் மனைகள் வழங்கப்பட்டன.
தற்போது நிலம் அபகரிப்படுகிறது
முன்பு நாட்டு நலத்திட்டங்களுக்கு பொதுமக்களாக மனமுவந்து நிலம் கொடுக்கப்பட்ட நிலைமை போய் இப்போது நிலத்தினை அபகரிக்கும் நிலைக்கு வந்திருக்கிறோம். தற்போது என்எல்சி நிலம் கொடுக்க பின்வரும் காரணங்களை அப்பகுதி வைக்கிறார்கள்,
> ஏற்கனவே நிலம் வழங்கியவர்களுக்கே இன்னும் வேலை, உரிய நிவாரணம் வழங்கப்படவில்லை
> அடிப்படை வாழ்வாதாரமாக விவசாயம் இருக்கும் போது எங்களது நிலத்தினை விட்டுச்செல்ல இயலாது
எது முன்னேற்றம்?
தற்போது வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் பல திட்டங்கள் அரசால் முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் பல அந்த பகுதியில் வாழுகின்ற மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை சிதைப்பதாகவே இருக்கின்றன. குறிப்பிட்ட மக்களின் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டு அதிலிருந்து கிடைப்பதை எப்படி முன்னேற்றம் என சொல்ல முடியுமென்று தெரியவில்லை.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என உறுதியளித்து கொண்டு இருக்கின்ற மத்திய அரசின் கீழ் வரும் திட்டங்கள் தான் விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கக்கூடிய விவசாய நிலத்தினை பிடுங்குகின்றன. விவசாயிகள் தான் தேசத்தின் அடிப்டையானவர்கள், விவசாயம் தான் தேசத்தின் அடிப்படை தொழில் என்பதனை உணர்ந்து இனியாவது அரசு இதுபோன்ற நடவெடிக்கைகளில் இறங்காமல் வாழ்வாதாரம் பாதிக்காதவாறு திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.