என் ஜன்னலுக்கு வெளியே – நிர்மலாதேவி முளைத்தால் கிள்ளி எறிந்து விடு தமிழச்சியே
எத்தனையே விசயங்கள் என் ஜன்னலுக்கு வெளியே நடக்கின்றன . அத்தனை பற்றியும் பெரிய அளவில் அலட்டிக்கொள்ளாத எனக்கு “பெண் பேராசிரியரே (நிர்மலாதேவி) நான்கு மாணவிகளை உயர்பதவி காமுகன்களின் படுக்கைக்கு ஏற்பாடு செய்யும்” அந்த ஆடியோவை கேட்ட பிறகு நெஞ்சு துடிக்க முடியாமல் திணறுகிறது .
பலவற்றை மறந்தவர்கள் கூட வயதான ஆசிரியர் நடந்து போவதை பார்த்தால் ஓடிச்சென்று நம்மை நியாபகம் இல்லாத ஆசிரியருக்கு நியாபகமூட்டி மகிழ்வோம் . அந்த அளவிற்கு ஆசிரியர் மீதான ஒவ்வொருவரின் பற்றும் இருக்கின்றது . காரணம் அவர்களே ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையையும் செதுக்குகிற மாமனிதர்கள் . அதனால் தான் தெய்வத்திற்கு முன்னாலே “குருவை” வைத்தார்கள் .
நிர்மலாதேவி என்னும் கொடூர அரக்கியின் முதல் முயற்சியாக தற்போது வெளியான ஆடியோ இருக்க வாய்ப்பில்லை , இது தொடர்கதையாக நடக்கின்ற அவலம் . இப்போதாவது எம் வீர தமிழச்சிகள் முறையான ஆதாரத்தோடு அந்த அரக்கியின் முகத்திரையை கிழித்து எறிந்ததில் மகிழ்ச்சி .
ஆசைகளை காட்டி
மயக்கி இரையாக்கி
காம இச்சை
தீர்க்க அணுகினால்
கிள்ளி எறிந்து விடு
நீ “தமிழச்சி”
நிர்மலாதேவி இரண்டு பெயர்களை விசாரனையில் சொன்னதாக செய்திகள் வருகின்றன . ஆனால் அவர்கள் இருவர் மட்டுமே இதில் இருக்க வாய்ப்பில்லை . இன்னும் உயர் பதவிகளில் இருக்கும் கயவர்களும் இதில் நிச்சயம் இருப்பார்கள் .
வழக்கம்போல விசாரனையை நீட்டி இழுத்துவிடாமல், சிறையில் தற்கொலை செய்துகொண்டார் என சொல்லி வழக்கை முடித்துவிடாமல் உடனடியாக விசாரித்து பங்குகொண்ட அனைவரையும் மக்களின் முன்னால் நிறுத்திடவேண்டும் . தகுந்த தண்டனையை வழங்கி கல்வித்துறையின் மீதான களங்கத்தை போக்கிட வேண்டும் .
இனி ஒரு நிர்மலாதேவி முளைத்தால் கிள்ளி எறிந்துவிடுங்கள் தமிழச்சிகளே !
பாமரன்