நெல்சன் மண்டேலா வரலாறு : 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த போராளி

ஒருவர் வாழ்வில் தோல்வியே அடையாததால் உலகப் புகழ் பெறுவதில்லை. ஒவ்வொரு தோல்வியிலும் துவளாது
மீண்டும் மீண்டும் எழுவதில் தான் புகழ் பெறுகிறார்கள்.

– நெல்சன் மண்டேலா 


தென்ஆப்பிரிக்காவின் காந்தி, கறுப்பின மக்களின் உரிமை மீட்ட தலைவன் என அனைவராலும் போற்றப்படுகின்ற நெல்சன் மண்டேலா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஓரளவேனும் அறிந்து வைத்திருப்பது வரலாற்றின் பக்கங்களை புரிந்துகொள்வதற்கு உதவும்.

நெல்சன் மண்டேலா : இளமைப்பருவம்

நெல்சன் மண்டேலா 1918 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி அன்று தென்னாப்பிரிக்காவில் உள்ள குலு கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை சோசா பழங்குடி இன மக்கள் தலைவராக இருந்து வந்தார். இவரின் தந்தைக்கு நான்கு மனைவிகள். 4 ஆண்களும் 9 பெண்களுமாக 13 பிள்ளைகள். மூன்றாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தவர் தான் மண்டேலா. இவரின் முழுப்பெயர் ‘நெல்சன் ரோபிசலா மண்டேலா’. நெல்சன் மண்டேலா என்றே பொதுவாக அழைப்பார்கள். இவரது பெயரில் இருக்கும் நெல்சன் என்பது அவரது பள்ளியில் ஆசிரியர் ஒருவர் வைத்த பெயர் என சொல்லப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவின் பெரும்பான்மையான பூர்வகுடி கருப்பின மக்களை, பிரிட்டிஷ், பிரான்ஸ், டச்சு உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறிய சிறுபான்மை வெள்ளையர்கள் அடிமை செய்து ஆளத்தொடங்கினர். சிறும்பான்மையினரான வெள்ளையர்கள் அடக்கி ஆள்வதை இளம் வயதிலேயே கண்டு வெதும்பினார். தென்ஆப்பிரிக்க மக்களின் உரிமைகளோடு அவர்களது உழைப்பையும் வளங்களையும் ஒரு பிரிவினர் வலுக்கட்டாயமாக உறுஞ்சி எடுத்துக்கொண்டு போவது இளம் வயது மண்டேலாவின் மூளைக்குள்ளும் இதயத்திற்குள்ளும் அமைதியின்மையை உண்டாக்கியது. அப்போதே அவர் தன் மக்களுக்கான பயணத்தை ஆரம்பிக்கத் துவங்கிவிட்டார். 

நெல்சன் மண்டேலா : மேற்படிப்பும் அரசியலும்

நெல்சன் மண்டேலாவின் குடும்பத்தில் இருந்து படிப்பதற்காக பள்ளிக்கு சென்றவர் மண்டேலா தான். சில நல்ல உறவினர்களின் உதவியோடு பள்ளிப்படிப்பை முடித்துவிட்ட மண்டேலா 1939-ம் ஆண்டு கல்லூரிப்படிப்புக்காக லண்டனில் இருக்கும் ‘போர்ட்ஹேர்’ (University of Fort Hare) பல்கலைக்கழகத்துக்குச் சென்றார். அந்த ஒரே பல்கலைக்கழகம் தான் தென்னாப்பிரிக்காவின் கறுப்பினத்தவர்களுக்கு மேலைநாட்டுக் கல்வியை வழங்கியது. ஆனால் அந்தக் கல்லூரியிலும் மாணவர்களின் உரிமைப் போராட்டத்தில் பங்கேற்று மண்டேலா முன்னின்று நடத்தியதால், பல்கலைக்கழகத்தால் அவர் வெளியேற்றப்பட்டார். இதனை அடுத்து அவர் தன் நாட்டிற்கே திரும்பி வந்தார். இங்கே திரும்பியதும், அங்குள்ள ஜோகானஸ்பேர்க் பகுதி கல்லூரியில் சேர்ந்து 1941-ம் ஆண்டு சட்டப்படிப்பை முடித்தார். பிறகு நல்ல வழக்கறிஞராகவும் இருந்தார்.

நாம் மக்களின் உரிமைக்காக போராட நினைக்கிறோம். அப்படிப்பட்ட நாம் தனித்து போராடினால் நமது இலட்சியத்தை அடைய முடியாமல் போகலாம். ஆகவே சிறந்த களத்தை தேர்தெடுக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்த நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸை (African National Congress -ANC) தேர்ந்தெடுத்து 1942 இல் சேர்ந்தார். இதற்கிடையில் அவர் நோமதாம் சங்கர் என்ற செவிலியரை மணந்து கொண்டார். ஆனால், நெல்சன் மண்டேலாவின் அரசியல் வாழ்க்கையினால் அவர்கள் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு உண்டாகி இறுதியில் இருவரும் பிரிந்துவிட்டார்கள். 

நெல்சன் மண்டேலா : வழக்குகளும் சிறை வாழ்க்கையும்

நெல்சன் மண்டேலா கட்சியில் இணைந்த பிறகு மிகவும் தீவிரமாக செயல்பட்டார். 1948 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தவர்கள் மேலும் கறுப்பின மக்களின் மீது வன்முறையையும் அடக்குமுறையையும் கட்டவிழ்த்துவிட்டார்கள். [கறுப்பின மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளிட்டவற்றை தடுத்து வைத்திருந்ததால் எளிதாக வெள்ளையர்கள் வெற்றி பெற்றார்கள்]. தொடர்ச்சியாக கறுப்பின மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்த நெல்சன் மண்டேலா தனது கல்லூரி நண்பரான ஒலிவர் ரம்போ என்பவருடன் இணைந்து சட்ட உதவி மையத்தை அமைத்தார்கள். வெள்ளையர்களால் பாதிக்கப்பட்ட கறுப்பின மக்களுக்கு சட்ட உதவியை இந்த மையம் வழங்கும் என அறிவித்தார்கள்.

இது ஒருபுறம் இருக்க, இன்னொருபுறம் தன்னுடைய அரசியல் கட்சியை கறுப்பின மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மக்கள் இயக்கமாக மாற்றுவதில் பெரிய அளவில் உழைத்துவந்தார் நெல்சன் மண்டேலா. மிக இளம் வயதிலேயே, அதிசிறந்த தலைமைப்பண்பைக் கொண்டிருந்த மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.

நெல்சன் மண்டேலா : ஆயுதம் ஏந்திய காந்தி

நெல்சன் மண்டேலாவை ‘தென் ஆப்பிரிக்காவின் காந்தி’ என அடையாளப்படுத்துகிறோம். மஹாத்மா காந்தி எந்த சூழ்நிலையிலும் வன்முறையையோ ஆயுதத்தையோ தனது போராட்டங்களில் அனுமதிக்காதவர். ஆனால் நெல்சன் மண்டேலா ஒருகட்டத்தில் ஆயுத போராளியாகவும் செயல்பட்டவர் என்பதனை நாம் கவனிக்க தவறக்கூடாது.

நெல்சன் மண்டேலா அரசியல் போராட்டங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்று சேர்ந்தன. இதனை கவனித்த அரசாங்கம் அவரை எந்த வழியிலாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என நினைத்தது. இதற்காக, ஒரு வழக்கினை ஜோடித்து 1956 ஆம் ஆண்டு அவரை தேசத்துரோக வழக்கில் கைது செய்தது. அந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டு இருந்தபோது 1958 ஆம் ஆண்டு வின்னி மடிகி லேனா என்பவரை மணந்தார். வின்னி தனது கணவரின் கொள்கைகளுக்காகப் போராடி வந்தார். மண்டேலாவுக்கு முதல் மனைவி மூலம் 3 குழந்தைகளும் 2 வது மனைவி மூலம் 2 குழந்தைகளும் உள்ளனர். நான்கு ஆண்டுகள் கழித்து அவர் விடுதலை செய்யப்பட்டார். சீண்டிய புலி சீறிப்பாயும் என்பது போல சிறையில் இருந்து வெளிவந்த பிறகு இன்னும் சற்று வேகத்தோடு செயல்பட்டார் நெல்சன் மண்டேலா.

1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 21 ஆம் நாள் மாபெரும் அறப்போராட்டத்தை அரசுக்கு எதிராக நடத்தினார் நெல்சன் மண்டேலா. இதனை ஒடுக்க நினைத்த அரசாங்கம் வன்முறையை ஏவிவிட தயாரானது. அறவழியில் போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலில் சுமார் 69 பேர் இறந்துபோனார்கள். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தார்கள். இப்படி அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதல் அரசுக்கு எதிரான மன நிலைக்கு மக்கள் திரும்ப பெரும் காரணமாகிவிட்டது.

இந்த தாக்குதலால் மனம் நொந்துபோன நெல்சன் மண்டேலா ஆயுத தாக்குதலுக்கு தயார் ஆனார். நெல்சன் மண்டேலா ஆரம்பத்தில் குத்துசண்டை வீரராக இருந்தவர், போர் கலைகளும் அவருக்கு தெரியும். 1961-ம் ஆண்டு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் ஒரு அங்கமாக, ‘தேசத்தின் ஈட்டி’ (Spear of the Nation) என்ற ஆயுதபாரி இயக்கத்தைத் தொடங்கினார்.

ஆயுதங்களை மண்டேலா கையில் ஏந்தியது அவரை கைது செய்து சிறையில் அடைக்க நல்ல வழி என்று நினைத்த அரசாங்கம் அவரை சிறைப்படுத்த முயற்சித்தது. ஆனால் அது அவ்வளவு எளிதாக இல்லை. அவர் நடத்திய கொரில்லா தாக்குதல்கள் அரசுக்கு பெரிய பின்னடைவாக இருந்தன. ஒருவழியாக அவர் கைது செய்யப்பட்டார். 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் நாள் ஜோகன்னஸ்பர்க்கின் புறநகர் பகுதியான ரிவோனாவில் தலைமறைவாகத் தங்கியிருந்த மண்டேலாவையும் அவருடன் இருந்த பத்து முக்கிய தலைவர்களையும், மாறுவேடத்தில் நுழைந்த அரசு காவல்துறைனர் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.

நெல்சன் மண்டேலா : நீதிமன்றத்தில் பேச்சு

கைது செய்யப்பட்ட நெல்சன் மண்டேலா மீது குற்றம் சுமத்த அரசுக்கு இப்போது ஏகப்பட்ட விசயங்கள் இருந்தன. அப்படி அவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆனபோது அவர் ஆற்றிய உரை இன்றும் புகழ்மிக்கதாகவும் உணர்ச்சி மிக்கதாகவும்.பார்க்கப்படுகிறது. “நான் ஆப்பிரிக்க மக்களுக்காகப் போராடுவதற்காக என் வாழ்நாளை அர்ப்பணித்திருக்கிறேன். எவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தை எதிர்க்கிறேனோ, அதே அளவு கறுப்பின ஆதிக்கத்தையும் எதிர்க்கிறேன். அனைத்து இன மக்களும் வேறுபாடில்லாமல் ஒருங்கிணைந்து வாழும் ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எனது நோக்கம். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காக நான் எனது உயிரைத் துறக்கவும் தயார்”என்று முழங்கினார். 

நெல்சன் மண்டேலா : விடுதலையும் அதிபர் ஆனதும்

நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அவர் சிறை சென்றார். அங்கே அவருக்கு பல்வேறு விதங்களில் சித்ரவதைகள் செய்யப்பட்டன. நெல்சன் மண்டேலா சிறைக்குள் இருக்க இருக்க அவர் பற்றிய செய்திகள் உலகம் முழுக்க அதே வேகத்தில் பரவ ஆரம்பித்தன. நெல்சன் மண்டேலாவை உடனடியாக விடுதலை செய்திட வேண்டுமென்று உலக நாடுகள் தென்ஆப்பிரிக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தன, கட்டளை இட்டன, பொருளாதார தடைகளை விதித்தன. தென்ஆப்ரிக்காவில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதை அடுத்து மண்டேலா 1990-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் நாள் விடுதலை செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டது. அப்படியே அவர் விடுதலையும் செய்யப்பட்டார்.

ஒரு போராளியின் விடுதலைக்காக உலகம் முழுமையும் மகிழ்ச்சி தெரிவித்தது நெல்சன் மண்டேலாவிற்காகத்தான் இருக்கும். சுமார் 27 ஆண்டுகள் அவர் சிறைவாசம் அனுபவித்து வந்தது தான் அதற்கு காரணம்.

நெல்சன் மண்டேலா 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு அதிபர் ஆனார். அந்தத்தேர்தல் தான் மக்கள் சுதந்திரமாக வாக்களித்து நடைபெற்ற ஜனநாயகத் தேர்தல் என்றும் சொல்லப்படுகிறது. நெல்சன் மண்டேலா இனவெறியை முற்றிலுமாக வெறுத்தார். ஆகவே தான் அவர் அமைத்த அமைச்சரவையில் வெள்ளையர்கள், இந்திய வம்சாவளியினர், கறுப்பினத்தவர்கள் என அனைவர்க்கும் வாய்ப்பளித்து அசத்தினார். 1999-ம் ஆண்டு ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியவர் மக்கள் பணியாற்றிட ஆரம்பித்தார்.

2013-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் நாள் தனது 95-வது வயதில் மரணமடைந்தார். நெல்சன் மண்டேலாவின் தியாகத்தை போற்றும் வகையில், அவர் பிறந்த ஜூலை 18-ம் நாளை, “உலக நெல்சன் மண்டேலா தினமாக” ஐ.நா. சபை அறிவித்து கொண்டாடி வருகிறது.

நெல்சன் மண்டேலா பொன்மொழிகள்

என் வெற்றியை வைத்து என்னை மதிப்பிடாதீர்கள். எத்தனை முறை கீழே விழுந்து மீண்டும் நான் எழுந்தேன் என்பதை வைத்து என்னை மதிப்பிடுங்கள்.

தைரியம் என்பது பயம் இல்லாமல் இருப்பது அல்ல, ஆனால் பயத்தை வெற்றி கொள்வது என்பதை நான் கற்றுக்கொண்டேன், பயமே இல்லாதவர் தைரியமான மனிதர் அல்ல, ஆனால் பயத்தை வென்றவரே தைரியமான மனிதர்.

பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு உதவுவதற்காக ஒருவர் தனது நேரத்தையும் சக்தியையும் கொடுப்பதை விட சிறந்த பரிசு எதுவும் இருக்க முடியாது.

இந்த உலகில் வாழும் அனைவருக்குமான ஒரு சிறந்த உலகை உருவாக்குவது உங்கள் கைகளில் உள்ளது.

ஞானிகள் அமைதியாக இருக்கும்போது முட்டாள்களின் எண்ணிக்கை பெருகும்.

செய்து முடிக்கும் வரை மட்டுமே அது சாத்தியமற்றதாகத் தோன்றும்.

இந்த உலகை மாற்றுவதற்கு உங்களால் பயன்படுத்தக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த ஆயுதம் கல்வி.

அடிமைத்தனம் மற்றும் நிறவெறி போலவே, வறுமையும் இயற்கையானது அல்ல. இது மனிதனால் உருவாக்கப்பட்டதாகும், மேலும் மனிதர்களின் செயல்கள் மூலம் இதை வெல்லவும் மேலும் இல்லாமல் ஒழிக்கப்படவும் முடியும்.

தாங்கள் செய்வதில் அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் இருந்தால், சூழ்நிலைகளைக் கடந்து வந்து அனைவராலும் வெற்றியடைய முடியும்.

நீங்கள் உங்கள் கொள்கைகளை சமரசம் செய்யக்கூடாது, ஆனாலும் உங்கள் எதிராளியை அவமானப்படுத்தக்கூடாது. அவமானப்படுத்தப்பட்டவரை விட ஆபத்தானவர்கள் வேறு யாரும் இல்லை.

ஒரு சமூகத்தின் உண்மையான குணம் அது குழந்தைகளை எவ்வாறு நடத்துகிறது என்பதில் வெளிப்படுகிறது.

நீங்கள் ஒரு மனிதனுடன் அவரால் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில் பேசினால், அது அவருடைய தலைக்குச் செல்லும். நீங்கள் அவருடன் அவருடைய மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்திற்குச் செல்லும்.

பின்னால் இருந்து வழிநடத்துங்கள் – மற்றவர்கள் தாங்கள் முன்னால் இருப்பதாக நம்பட்டும்.

மிகவும் கடினமான விஷயங்களில் ஒன்று சமுதாயத்தை மாற்றுவது அல்ல – உங்களை நீங்களே மாற்றிக் கொள்வது.

நம் உலகில் வறுமை, அநீதி மற்றும் அதிகப்படியான சமத்துவமின்மை நீடிக்கும் வரை, நாம் எவரும் உண்மையிலேயே ஓய்வெடுக்க முடியாது.

குடிமக்கள் கல்வியறிவு பெறாதவரை, எந்தவொரு நாடும் உண்மையில் அபிவிருத்தியடைய முடியாது.

வரலாற்றைப் படைப்பது மன்னர்களும் தளபதிகளும் அல்ல, மாறாக வெகுஜன மக்களே.

மன்னிப்பு இல்லாமல் இங்கே எதிர்காலம் இல்லை.

உடற்பயிற்சி என்பது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன அமைதிக்கும் முக்கியமானதாகும்.

நம்பிக்கை ஒரு சக்திவாய்ந்த ஆயுதம், அதை உங்களிடமிருந்து பறிக்கக்கூடிய சக்தி இந்தப் பூமியில் யாரிடமும் இல்லை.

கடந்த கால விடயங்களை குறை கூறுவதால், அவை சிறந்ததாக மாறிவிடாது.

பெரும் கோபமும் வன்முறையும் ஒருபோதும் ஒரு தேசத்தை உருவாக்காது.

மக்களால் தங்கள் வயிற்றுக்கு உணவிட முடியாவிட்டால், அவர்களுக்கு ஒரு இருப்பிடம் இல்லாவிட்டால், அறியாமை மற்றும் நோய்கள் அவர்களைத் தொடர்ந்து கொண்டே இருந்தால், சுதந்திரம் என்பது அர்த்தமற்றது.

நீங்கள் ஒரு பேச்சுவார்த்தை நடத்துகிறீர்களானால், நீங்கள் அதை நல்லிணக்க மனப்பான்மையுடன் செய்ய வேண்டும், இறுதி எச்சரிக்கை விடுக்கும் கண்ணோட்டத்தில் அல்ல.

உலகை மாற்றும்

ஒரே ஆயுதம் கல்வி.

நல்ல தலைமையும்..

நல்ல இதயமும் எப்போதும்

வல்லமை மிக்க

சேர்க்கையாகும்.

கோபம் விஷம் குடிப்பதை

போன்றது. ஆனால்

நம்பிக்கை உங்கள் எதிரிகளையும்

அழிக்கும் வல்லமை மிக்கது

செய்து முடிக்கும் வரை

செய்ய முடியாது

போல தான் இருக்கும்.

பின்னால் இருந்து கூட்டத்தை

வழிநடத்துங்கள் முன்னால்

செல்பவர்கள் தங்களால் தான்

முன்னேறி நடக்கிறோம்

என்று நம்ப வையுங்கள்.

எனது வெற்றிகள் மூலம்

என்னை மதிப்பிடாதீர்கள்..

எத்தனை முறை நான்

கீழே விழுந்து மீண்டும்

மீண்டும் எழுந்தேன்

என்பதன் மூலம்

என்னை மதிப்பிடுங்கள்.

புத்தக வாசிப்பிற்கு

அனுமதித்தால் போதும்

சிறையும் சுதந்திரமான

இடம் தான்.

சூழ்நிலைகள்

அனுமதிக்கும் போது

அகிம்சை ஒரு

நல்ல கொள்கை.

உயர்ந்த சிந்தனை உயர்ந்த

மனதில் இருந்தே

தோன்றுகின்றது.

வறுமை தொடரும் போது

உண்மையான விடுதலை

இருப்பதில்லை.

நீங்கள் உங்கள் எதிரியுடன்

அமைதியை ஏற்படுத்த

விரும்பினால் அவருடன்

இணைந்து பணியாற்ற வேண்டும்.

பிறகு அவர் உங்கள்

பங்குதாரர் ஆகிவிடுவார்.

நம் வாழ்வு மற்றும்

செயல்களின் ஒவ்வொரு

விவரத்தையும் திட்டமிட்டு

முயற்சி செய்வதன் மூலம்

குறிப்பிடத்தக்க செயல்முறை

எப்போதும் சாத்தியமாகும்.

ஒருவர் வாழ்வில் தோல்வியே

அடையாததால் உலகப் புகழ்

பெறுவதில்லை. ஒவ்வொரு

தோல்வியிலும் துவளாது

மீண்டும் மீண்டும்

எழுவதில் தான் புகழ்

பெறுகிறார்கள்.

எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்



Get Updates in WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *