நான் சந்தோசமா இருக்கனும் அவ்வளவுதான்
அறிவியல் பூர்வமாகவோ அல்லது எதார்த்தமாகவோ சொல்லவேண்டுமெனில் இந்த வாழ்க்கை என்பதும் உறவுமுறைகள் என்பதும் பிரிவுகளின் போது கண்ணீர் என்பதும் அர்த்தமற்றது தான். ஆனால் இந்த உலகம் இவ்வளவு அமைதியாக அழகாக கடந்து போவதற்கு காரணமும் அர்த்தமற்ற அவற்றை பின்பற்றுவதனால் தான்.
சில தினங்களுக்கு முன்பு ஒரு செய்தியை பார்த்தேன். அதில் ஒரு தாய் சந்தோசமாக இருக்க முடியவில்லை எனக்கூறி குழந்தையை கொன்றுவிட்டார் என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதுபோல பல செய்திகள் நமக்கு கிடைக்கின்றன, கள்ளக்காதலனுடன் குழந்தைகளை கொன்ற தாய் என பல பல. ஏன் சில பெற்றோர்கள் மட்டும் இப்படி சிந்திக்கிறார்கள். மற்ற பெற்றோர்கள் இப்படி ஏன் சிந்திப்பது இல்லை.
இயல்பாக யோசித்துப்பாருங்கள், ஒரு பெற்றோர் எதற்க்காக பிள்ளையை நல்ல முறையில் நல்ல பள்ளியில் நல்ல உடைகளோடு நல்ல உணவோடு வளர்க்க வேண்டும்? “அப்போதுதான் வயதான பின்பு குழந்தைகள் சம்பாதித்து பெற்றோர்களை பார்த்துக்கொள்வார்கள்” இந்த பதிலை நீங்கள் கூறியிருக்க மாட்டீர்கள் என நான் நம்புகிறேன். இது அர்த்தமற்ற பதில் நண்பர்களே. இதுதான் காரணமென்றால் ஏன் பணக்காரர்கள் கூட பிள்ளைகளை அன்போடு வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்காக பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டும்? அவர்களிடம் இருக்கின்ற பணத்தைக்கொண்டு சாகும்வரைக்கும் உதவியாட்களோடு சொகுசாக வாழ்ந்துவிட்டு போகலாமே.
இன்னொரு பதிலும் இந்த கேள்விக்கு உண்டு, “தன் இனம் அல்லது வாரிசு இந்த பூமியில் தனக்கு பிறகு இருக்க வேண்டும்” என்பதற்காகவே குழந்தைகளை பெற்றோர்கள் வளர்க்கிறார்கள். இது ஓரளவிற்கு பெற்றோர்களின் மனநிலையோடு ஒத்துப்போகிற பதிலாக இருந்தாலும் கூட எதார்த்தத்திற்கு இது ஒத்துப்போகாது. நீங்கள் யோசித்துப்பாருங்கள், ஒருவர் இறந்துவிட்ட பிறகு அவருக்கு ஏதேனும் நினைவில் இருக்கப்போகிறதா? தங்களுக்கு பின்னால் இந்த உலகில் யார் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன, தன் வாரிசுகளோ அல்லது தன் பிள்ளைகளோ இருப்பதனால் ஒருவருக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது? வாழ்க்கை ஒன்றுதான் எனும்போது அதில் சந்தோசத்தை அனுபவிக்காமல் ஏன் பிள்ளைகளுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க வேண்டும்? இந்தக்கேள்வி எழுந்து தான் ஒரு தாய் தனது பிள்ளையை தனது சந்தோசத்திற்க்காக பிள்ளையை கொன்று இருக்கிறார். இது தவறான புரிதலால் செய்துவிட்ட செயல். ஆனால் இவர் செய்தது போல மற்ற பெற்றோர்களும் ஏன் செய்யவில்லை அவர்களை எது இட்டுச்செல்கிறது?
உண்மையில் பெற்றோர்கள் எதற்காக பிள்ளைகளை வளர்க்கிறார்கள், தங்களது வாழ்க்கையில் சுகபோகங்களை அனுபவிக்காமல் தனது பிள்ளைகள் வாரிசுகள் தங்களை விடவும் மேலான நிலையில் வாழவேண்டும் என ஏன் நினைக்கிறார்கள் என்பதற்கு சரியான காரணமாக என்ன இருக்கமுடியும் என நான் யோசித்துப்பார்த்ததில் ” தியாகம்” என்ற காரணம் தான் மேலோங்கி இருக்கிறது.
ஆமாம் அதுதான் மிகப்பெரிய காரணமாக இருக்க முடியும். ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும் நமக்கு கிடைத்திருக்கும் இந்த வாழ்வானது மீண்டும் கிடைக்கக்கூடியது அல்ல என்பது. இருந்தாலும் அவர்கள் மனம் உவந்து தங்கள் மூலமாக இந்த பூமிக்கு வந்தவர்கள் தங்களைப்போன்று கஷ்டப்படாமல் குறைந்தபட்சமேனும் தங்களை விட உயர்ந்த வாழ்வை வாழ நாம் தியாகம் செய்துதான் தீரவேண்டும் என நினைத்துதான் ஒட்டுமொத்தமாக தங்களை பிள்ளைகளின் வாழ்க்கைக்காக அர்பணிக்கிறார்கள்.பிள்ளைகள் சந்தோசமாக இருந்தால் நாம் சந்தோசமாக இருந்ததைப்போல என நம்புகிறார்கள். உண்மையை சொல்லப்போனால் பெற்றோர்கள் இதுபற்றியெல்லாம் சிந்திப்பது கூட இல்லை. அது அவர்களின் இயல்பாகவே மாறிவிட்டது.
சிலர் இதற்கு மாற்றாக சிந்திக்கும்போது தான் பிரச்சனை எழுகிறது. ஒரு குழந்தை தங்கள் மூலமாக பிறந்துவிட்டது என்பதற்காக அதன் மீது ஆதிக்கம் செலுத்தவோ அதன் உயிரை பறிக்கவோ யாருக்கும் உரிமை இல்லை என சட்டம் தெளிவாக சொல்கிறது. தனது சந்தோசம் தான் பெரிது என நினைக்கும் பெற்றோர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளுதலை தவிர்த்துவிடுவதே சிறந்தது. அப்போது உங்களுக்குள் ஒரு கேள்வியை மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள் “ஒருவேளை உங்களது பெற்றோர் உங்களைப்போலவே நினைத்திருந்தால்?” இந்தக்கேள்வி பல புரிதல்களை மானுடத்தின் இயல்புகளை உங்களுக்கு புரியவைக்கும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!