உண்மையான சுதந்திர தினம் எப்போது? – சுதந்திர தின வாழ்த்துக்கள்
“உண்மையான சுதந்திரத்தை பெறுவதற்கு அனைவரும் இணைந்து செயல்படுவோம்”
இந்தக்கட்டுரையின் தலைப்பினை பார்த்த பிறகு “என்னது உண்மையான சுதந்திரத்தை பெறுவோமா? நாம் தான் ஏற்கனவே சுதந்திரத்தை பெற்றுவிட்டோமே” என கேட்கலாம். அப்படி கேட்பவர்கள் இந்தக்கட்டுரையை தொடர்ந்து படிக்க வேண்டியவர்கள். படித்து முடித்த பின்னர் நாம் உண்மையான சுதந்திரத்தை பெற்று விட்டோமோ என கமெண்டில் பதிவிட வேண்டியவர்கள்.
முதலில் பாமரன் கருத்து வாசகர்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள்.
நம்மை ஆட்சி செய்த அந்நியர்களிடம் இருந்து நமது முன்னோர்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு சுதந்திரம் கிடைத்த நல்ல நாள் ஆகஸ்ட் 15, 1947, 2019 ஆண்டில் 73 வது சுதந்திர தினத்தை நாம் கொண்டாடவிருக்கிறோம். மகிழ்ச்சி தான். என்னைப்பொறுத்தமட்டும் நான் இந்த சுதந்திர நாளை ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற்ற சுதந்திர நாளாகத்தான் நண்பர்களே பார்க்கிறேன். ஆனால் ஒவ்வொரு இந்தியனுக்கும் இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என்பதே என்னுடைய எண்ணம். அதற்கான வலுவான காரணங்கள் இருக்கின்றன. அதனைத்தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
பசி பட்டினி கொடுமை
2018 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி [2018 Global Hunger Index], 119 நாடுகள் கொண்ட அட்டவணையில் இந்தியா 103 ஆவது இடத்தில் இருக்கிறது [https://www.globalhungerindex.org/results/#top-of-page]. 31.1 புள்ளிகளுடன் மிகவும் ஆபத்தான சூழலில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது [https://www.globalhungerindex.org/india.html]. நமது பொருளாதாரம் வளருகிறது, தனி நபர் வருமானம் வளருகிறது, தொழில்நுட்ப பயன்பாடு வளருகிறது, கற்றல் வளருகிறது என எத்தனை விசயங்கள் வளருகின்றன. அதில் எந்தவித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அது அனைவருக்குமான வளர்ச்சியாக இருக்கிறதா என்பதனை கவனியுங்கள் என்று கூறுகிறேன்.
சென்னையில் இருக்கும் ஒரு நபரின் சம்பளம் 1 லட்சமாக உயர்வதை விட தமிழகத்தில் எங்கும் பசியால் இரவு தூங்கப்போகும் நிலைமையில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் எவரும் இல்லை என்பதே உண்மையான சுதந்திரம் என நான் கூறுகிறேன். ஆனால் அப்படி நடப்பதில்லை, பல கோடிக்கணக்கான வயிறுகள் இரவு உணவின்றி உறங்கித்தான் கொண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. இப்போது சொல்லுங்கள், நாம் உண்மையான சுதந்திரத்தை அடைந்துவிட்டோமா?
எந்தவொரு அரசையும் நான் குற்றம் சொல்ல விரும்பவில்லை. இனியாவது நாம் இவற்றை கவனிக்க வேண்டும் என்றுதான் சொல்லுகிறேன்.
வேலை வாய்ப்பின்மை
தற்போதைய சூழலில் படிக்காதவர்கள் கூட மிகக்குறைந்த வயதில் கிடைத்த வேலைக்கு சென்று விடுகிறார்கள். ஆனால் படித்தவர்களின் பாடு திண்டாட்டமாக இருக்கிறது. படிப்பின் தகுதி சில வேலைகளை செய்யவிடாமலும் படிப்பின் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் போவதாலும் பல இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. துப்புரவு பணியாளர் பணிக்கு “பல ஆயிரம்” பட்டதாரிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள் என்பதும் 10 ஆம் வகுப்பு கல்வித்தகுதியை கொண்ட குரூப் 4 பணிக்கு லட்சக்கணக்கில் பட்டதாரிகள் விண்ணப்பிப்பதும் ஆரோக்கியமானதாக ஏற்றுக்கொள்ளுவது எப்படி நண்பர்களே.
பல ஆய்வாளர்களும் துறை வல்லுனர்களும் கூறுவது என்ன தெரியுமா? வேலை வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மாணவர்கள் பட்டம் பெற்றிருக்கிறார்களே தவிர அவர்களுக்கு தகுதி குறைவானதாக இருக்கிறது என்கிறார்கள். இப்படிப்பட்ட தரக்குறைவான கல்விமுறையை இன்னும் வைத்துக்கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை சுமந்துகொண்டிருக்கிறோமே இதுதான் சுதந்திரமா என கேட்கிறேன் நண்பர்களே?
ஊழல் எனும் பெருச்சாளி
ஆங்கிலேயன் சுரண்டினான் அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஏனென்றால் அவன் சுரண்டுவதற்காத்தான் நம்மை அடிமை படுத்தினான். ஆனால் இன்று நம் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஊழல் எனும் பெயரில் சுரண்டுகிறார்களே இது மிகப்பெரிய அநியாயம். ஆமாம், மக்களுக்கு சேவை செய்திடுவேன் என்ற உறுதிமொழியை கொடுத்துவிட்டு, செய்கின்ற வேலைக்கு சம்பளமும் பெற்றுவிட்டு, மக்களின் வரிப்பணத்தில் இன்னும் பல நன்மைகளையும் பெற்றுவிட்டு “ஊழல்” செய்வது என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
நீங்களே சொல்லுங்கள் நண்பர்களே, இன்று எந்த துறையில் ஊழல் இல்லை. இருக்கிறார்கள் சில நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்களை இந்த சமூகமும் அவர்களது குடும்பமும் பிழைக்க தெரியாத முட்டாள் என்று செய்கிற ஏளன பேச்சுக்களையும் பொறுத்துக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.
ஊழல் இருக்கும் தேசம் முழுமையான சுதந்திர தேசம் என்று கூற முடியுமா? ஆகையினால் தான் உண்மையான சுதந்திரத்தை பெற முயற்சிப்போம் என்று சொல்கிறேன்.
நண்பர்களே, நம்மால் முடியாதது எதுவுமில்லை. இன்று சுதந்திரத்திற்க்காக போராடினால் நாளை நாம் கோட்டை கட்டிக்கொண்டு மகிழ்வாக வாழலாம் என நினைத்து எந்தவொரு தியாகியும் சுதந்திர போராட்டத்தில் ரத்தம் சிந்தவில்லை. அதனை நாம் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். இன்று தான் பலர் பண ஆசை பிடித்து தேசப்பற்றை இழந்து செயல்படுகிறார்கள். இதனை மாற்றிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அனைவரும் இணைந்து செயல்பட்டால் இதனை நிச்சயமாக அடைந்திட முடியும்.
என்று பசியற்ற உறக்கம், படித்தவர்களுக்கு வேலை, ஊழலற்ற சமூகம் உருவாகிறதோ அன்றே நாம் உண்மையான சுதந்திரம் பெறுகிற நாள் என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன். நிச்சயம் அந்தநாள் மலரும் என்ற நம்பிக்கையில் “அனைவருக்கும் பாமரன் கருத்து சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவிக்கிறது”
தியாகிகளை போற்றுவோம் !
Join with me :
எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!