கரோனா வைரஸ் க்கு எதிரான “மக்கள் பந்த்” – வெற்றி பெறட்டும்
அண்மையில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்தும் நாம் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவெடிக்கைகள் குறித்தும் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே உரையாற்றினார். குறிப்பாக, மார்ச் 22,2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் இரவு வரைக்கும் பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளிலேயே இருக்க அவர் கேட்டுக்கொண்டார். அவசர தேவைகளின்றி பொதுமக்கள் யாரும் வெளியே நடமாட வேண்டாம் என கூறிய அவர் இந்த இயக்கத்திற்கு “மக்கள் பந்த்” எனவும் பெயரிட்டார். இதன் பொருள், அரசு 144 போன்ற தடை உத்தரவு எதுவும் போடாமல் பொதுமக்கள் தாங்களாகவே அப்படிப்பட்ட கட்டுப்பாட்டுக்குள் தங்களை கொண்டுவந்து கொரோனா வைரஸ் க்கு எதிராக போராட வேண்டும் என்பதுதான்.
பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க அரசு பேருந்துகள் உட்பட பல்வேறு அமைப்புகளும் மக்கள் பந்த்தில் இணைந்திருக்கின்றன. ஞாயிற்றுக்கிழமைக்கு மட்டுமே தற்போதைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது “மக்கள் பந்த்”. இது அடுத்தடுத்த நாட்களுக்கும் தொடரும் என சிலர் புரளிகளை பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள். அது உண்மை அல்ல. அப்படி அரசாங்கமே தடை உத்தரவு போட்டு மக்களை கட்டுப்படுத்த வேண்டும் என நினைத்திருந்தால் 144 என நேரடியாக அறிவிப்பதில் பெரிய தயக்கம் எதுவும் இருந்திருக்காது. மாறாக, தற்போது அரசாங்கம் விரும்புவது என்னவென்றால் மக்கள் தாங்களாக பிரச்சனையின் வீரியத்தை புரிந்துகொண்டு அரசாங்கத்தின் முயற்சிக்கு உதவி புரிய வேண்டும் என்பதுதான்.
அரசுக்கு சாதாரண குடிமகனால் எப்படி உதவ முடியும்?
தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்ப்பதே ஒவ்வொருவரும் அரசுக்கு நாம் செய்கிற பேருதவி தான். ஞாயிற்றுக்கிழமை நாம் செய்யப்போவது ஒரு சோதனை முயற்சி தான். அரசு அதனை அடுத்தடுத்த நாட்களுக்கு கொண்டு சொல்லாவிட்டாலும் கூட நாம் ஒவ்வொருவரும் கட்டுப்பாட்டை தங்களுக்கே விதித்துக்கொண்டு அடுத்தடுத்த நாட்களிலும் வீடுகளில் இருக்க வழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். ஏதோ சில நூறு பேருக்கு தான் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என அலட்சியம் காட்டுதல் மிகவும் ஆபத்தானது. நீங்கள் ஒரு திருவிழாவிலோ அல்லது கல்யாண நிகழ்வுகளிலோ சில நூறு பேருடன் நெருங்கி பழகும் போது கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவ அதிக வாய்ப்பு இருக்கிறது.
நீங்கள் அலட்சியமாக செய்கின்ற எந்தவொரு விசயமும் அரசாங்கம் இதுவரை எடுத்த முயற்சிகளை வீணாக்கிவிடும் என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களின் அலட்சியம் உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தான் முதலில் ஆபத்தை கொண்டு சேர்க்கும் என்பதை புரிந்துகொண்டு செயல்படுங்கள். தற்போது வைரஸ் பரவலை காட்டிலும் வதந்திகள் மிக வேகமாக பரவி வருகின்றன. இவை மனதளவில் பெரிய அச்சத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தி வருகின்றன. ஆகவே ஞாயிற்றுக்கிழமை வீடுகளில் இருக்கப்போகும் ஒவ்வொருவரும் கரோனா வைரஸ் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளை பகிரப்போவது இல்லை என உறுதி எடுத்துக்கொள்ளுங்கள்.
தினக்கூலிகளோடு தோள்கொடுங்கள்
அன்றாடம் வேலை பார்த்து சாப்பிடும் ஏழை எளிய கூலித்தொழிலாளிகள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை அடைந்திருக்கிறார்கள். இந்த சூழலில் அவர்களிடம் இவ்வளவு நாட்கள் வேலை வாங்கிய பெருமக்களும் நிரந்தர மாத சம்பளம் பெரும் நபர்களும் உதவி செய்திட முன்வர வேண்டும். எப்படி வெள்ளம் ஏற்பட்டபோது நாம் தோள்கொடுத்து நின்றோமோ அப்படி நிற்பதற்கு தற்போது அவசியம் ஏற்பட்டு இருக்கிறது. சிலரின் அலட்சியம் பலரின் முயற்சியை வீணாக்கிவிடும். ஆகவே அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட்டால் நிச்சயமாக கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீள முடியும்.
பயம் வேண்டாம்!
விழிப்போடு இருப்போம்!
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!