சப்பாக் திரைப்படத்தின் நிஜ கதாநாயகி – யார் இந்த லட்சுமி அகர்வால்?

 


 

தீபிகா படுகோன் தனது ட்விட்டர் பக்கத்தில் சப்பாக் (chhapaak) திரைப்படத்தின் போஸ்டரை பதிவிட்டு இன்று படப்பிடிப்பு துவங்குகிறது எனவும் திரைப்படம் ஜனவரி 10,2020 இல் வெளியாகும் எனவும் தெரிவித்து இருந்தார். இந்த திரைப்படத்தில் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரம், நிஜ வாழ்வில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டு பின்னர் தனது முயற்சியினால் வெற்றி பெற்ற லட்சுமி அகர்வால் (laxmi agarwal) என்ற நிஜ பெண்மணியின் கதாபாத்திரம். தீபிகா படுகோனின் மேக்கப் தத்ரூபமாக இருக்கிறது, நிச்சயமாக லட்சுமி அகர்வால் அவர்களின் வலியினை இந்த சமூகத்தின் முன்னால் இந்த திரைப்படம் வைக்கும் என நம்புகிறோம்.

 

யார் இந்த லட்சுமி அகர்வால்?

 

மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த பெண் தான் லட்சுமி அகர்வால். ஏழையாக இருந்தாலும் தோற்றத்தில் செல்வம் பொருந்தியவள். சராசரி குடும்பத்தில் பிறந்த ஒவ்வொரு பெண்ணின் கனவுகளை போலவும் நன்றாக படித்து குடும்பத்தை காப்பாற்றிட வேண்டும் என்ற நோக்கத்தோடு படித்து வந்தாள். 15 வயதில் குட்டு என்கிற நஹிம் கான் ரூபத்தில் அபாயம் வந்து சேர்ந்தது லட்சுமி அகர்வாலுக்கு.

 

 

ஒருதலைக்காதல் கொண்ட நஹிம் கான் லட்சுமிக்கு தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்துவர அதனை நிராகரித்துக்கொண்டே வந்தார் லட்சுமி. இதனால் கோபமடைந்த குட்டு, பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது லட்சுமியை தாக்கி அவரது முகத்தில் அமிலத்தை வீசினார். சில நொடிகளில் எரிச்சல், தேய்த்தால் தோல் உரிதல் என ரண கொடூரத்தை அனுபவித்தாள் லட்சுமி என்ற சிறுமி.

 

பின்னர் மருத்துவமனை சிகிச்சை தொடர்ந்தது, குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கப்பட்டது. இவை இதற்க்கு முன்னர் அமில வீச்சினால் பெண்கள் பாதிக்கப்பட்டபோதும் நடந்தவை தான். ஆனால் லட்சுமி அகர்வால் அனைத்து தடைகளையும் தாண்டி பலருக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறார் என்பதுதான் மற்றவர்களிடமிருந்து அவரை பிரித்துக்காட்டுகிறது.

 

லட்சுமி அகர்வால் செய்த சாதனைகள்

 

மனித மிருகத்தின் கொடிய எண்ணத்தினால் வீசப்பட்ட ஆசிட்டில் உருகி ஓய்ந்துவிடாமல் மீண்டு எழுந்து வந்ததே மிகப்பெரிய சாதனை தான். ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை விதைத்தவர் லட்சுமி அகர்வால்.

ரூபா என்ற இன்னொரு ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் இணைந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். “ஆசிட் எளிமையாக கிடைக்க கூடாது என்பதற்காகவும் ஆசிட் விற்பதற்கான வழிமுறைகள் வேண்டும் என்பதற்காகவும் தொடரப்பட்ட வழக்கில் இவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்து வழிமுறைகளை வகுத்தது நீதிமன்றம்.

பின்னாளில் திருமணம் (லிவ்விங் டுகெதர்) செய்துகொண்ட அலோக் தீட்ஷித் மற்றும் பலருடன் இணைந்து ‘Stop Acid Attacks’ எனும் இயக்கத்தினை முன்னெடுத்தார். அதனை தொடர்ந்து பெண்களின் மீதான ஆசிட் வீச்சு குற்றமாக அறிவிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு குறைந்தது 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும் , ஆசிட் தாக்குதலை எதிர்த்து பெண்கள் நடத்தும் தாக்குதல் தற்காப்பாக கருதப்படும் என அறிவிக்கப்பட்டது.

International ‘Unsung Hero of the Year’, International Women of Courage Award என பல விருதுகள் தன்னை தழுவிக்கொண்டாலும் இன்றும் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தளராமல் போராடி வருகிறார் லட்சுமி அகர்வால்.

திரைப்படங்கள் சமூகத்தில் மிகப்பெரிய தாக்கங்களை ஏற்படுத்திடக்கூடியவை அந்த வகையில் சப்பாக் திரைப்படம் பல லட்சுமி அகர்வால் களின் வலிநிறைந்த வாழ்க்கையையும் சோதனையை வென்று செய்த சாதனையையும் பேசும் என நம்புகிறது பாமரன் கருத்து.

 

லட்சுமி அகர்வால் நம்பிக்கையின் ஒளி !

 


பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *