காமராஜர் ஏன் இன்னும் உயர்ந்தவராகவே இருக்கின்றார்?

காமராஜரின் பிறந்த தினம் ஜூலை 15 . கல்விக்கண் திறந்தவர் , சத்துணவை அறிமுகப்படுத்தியவர் தன்னலமற்ற தலைவர் என பல பரிமாணங்களை கொண்ட தலைவராக இருந்திருக்கின்றார் காமராசர். இன்றும் தூய்மையான அரசியல்வாதி யாரென்றால் காமராசர் என பதிலளிக்கும் பலரை காண முடிகின்றது.
அவருடைய வாழ்க்கையில் நடந்த சில நிகழ்வுகளை இந்த தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

அரசு அதிகாரி எப்படி இருக்க வேண்டும். ஒரு நல்ல அரசியல்வாதி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்த நிகழ்வு மிகச்சிறந்த உதாரணம்.

ஒருமுறை காமராஜர் அவர்கள் நாங்குநேரி MLA அவர்களின் தியேட்டரை திறந்து வைப்பதற்காக அங்கு வந்தார். ஆனால் அதற்க்கு முந்தைய நாளே அந்த பகுதியின் மாவட்ட ஆட்சியர் பசுபதி அவர்கள் சோதனை செய்துவிட்டு பெயிண்ட் மின் இணைப்பு சரியாக இல்லை என்று கூறி அனுமதி மறுத்துவிட்டார். முதல்வர் திறந்து வைக்க போவது தெரிந்தும் அவர் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். இன்று எத்தனை அரசு அதிகாரிகள் இப்படி இருக்கிறார்கள்.அடுத்தநாள் வந்த காமராஜர் அவர்களிடம் ஆட்சியர் பசுபதி அனுமதி தர மறுத்ததை அவரிடம் சொல்ல அவரோ ‘சரி அதில் என்ன!!! இன்று நான் திறந்து வைத்துவிட்டு போகிறேன்.

நீங்கள் அனைத்தையும் சரி செய்துவிட்டு அனுமதி பெற்று தியேட்டரை நடத்துங்கள்’ என்று சாதரணமாக சொல்லிவிட்டார். நிகழ்ச்சி முடிந்ததும் காமராஜர் கட்சியை சேர்ந்த ஒருவர் காமராஜர் அருகில் வந்தார். அவரை கண்டதுமே ஏதோ சொல்லப்போகிறார் என்பதை உணர்ந்த காமராஜர் ‘சொல்லுப்பா’ என்றார். வந்தவர் “ஐயா பசுபதி அவர்கள் அனுமதி மறுத்தாலும் பரவாயில்லை. அவர் சொல்கிறார் என்னால் முதல் அமைச்சர் ஆக முடியும். உங்கள் தலைவரால் மாவட்ட ஆட்சியர் ஆக முடியுமா??? என்று கேட்டார்” என்று திரித்து சொன்னார் வந்தவர்.

Kamarajar at office
Kamarajar at office

இப்படி ஒரு நிகழ்வு இந்த காலகட்டத்தில் நடந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் காமராஜர் என்ன சொன்னார் தெரியுமா ” அடே என் மானத்த அங்கேயும் போய் வாங்கிடீங்கலா!!! பசுபதி சொன்னதுல தப்பு எதுவும் இல்லையே!! என்னால ஆட்சியர் ஆக முடியாது” என்று சொல்லி வாய் விட்டு சிரித்தார்.

அடுத்தநாள் காலை காமராஜர் கார் பசுபதி வீட்டை நோக்கி சென்றது.பசுபதியோ அவசர அவசரமாக வீட்டை விட்டு வெளியில் வந்தார். காரில் இருந்து இறங்கிய காமராஜர் அவர்கள் “வணக்கம் வணக்கம்” என்று அவரது பாணியில் கும்பிட்டு கொண்டே வந்தார். ஆனால் பசுபதி அவர்களோ ஒருவித தயக்கத்துடனும் பயத்துடனும் “அய்யா” என்று கும்பிட்டார். உடனே காமராஜர் அவர்கள் “வேண்டாம்னே! இதுக்காகதான உங்கள படிக்க வச்சோம். இதுக்காக தானே நாங்க ஜெயிலுக்கு போனோம். நீ அப்புடி தானையா இருக்க!!” என்று கூறுகிறார். ஆனால் அதற்கும் மேலாக “உன்னை கும்பிடுதன்யா” என்று தலைக்கு மேலே கை வைத்து கும்பிட்டார். 

பசுபதி கண் கலங்கிற்று. இதை உணர்ந்த காமராஜர் அவர்கள் “பசுபதி மனைவியை அழைத்து உங்கள் பிள்ளையையும் உங்கள் கணவரை போன்றே வளருங்கள்” என்றார். மேலும் அவரது மனைவி தயங்குவதை உணர்ந்த காமராஜர் “ஒரு காப்பி குடுங்களேன்” என்று வாங்கி குடித்து தர்மசங்கடம் போக்கினார்.

நினைத்து பாருங்கள் இன்று நடக்கும் அனைத்து ஊழல்களுக்கும் MLA, MP, CM,PM மட்டும் தான் காரணமா. இல்லவே இல்லை நம் நாட்டில் நடக்கும் அனைத்து ஊழல்களுக்கும் அரசு அதிகாரிகளே முக்கிய காரணம். இடமாற்றம் போன்ற காரணங்களுக்காக பயந்து போன பண ஆசையில் திளைக்க நினைக்கும் அதிகாரிகள் தான் முக்கிய காரணம். அனைத்து அதிகாரிகளும் ஒரு சேர நின்றால் அரசியல் வாதி என்ன செய்வான்.


அதிகாரிகள் பசுபதியாகவும் அரசியல்வாதிகள் காமராஜராகவும் இருந்தால் நம் நாடு முன்னேறும்.

பாமரன் கருத்து


 

Share with your friends !

One thought on “காமராஜர் ஏன் இன்னும் உயர்ந்தவராகவே இருக்கின்றார்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *