தொடர் தற்கொலைக்கு காரணம் மீடியாவா? கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தை மீடியா சரியாக கையாண்டதா?
கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் அடைந்த சில நாட்களில் அவரைப்போன்றே மாடியில் இருந்து குதித்து சில மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட செய்திகளை நாம் கேட்டிருப்போம். இதற்கு மீடியாவின் தவறான அணுகுமுறையும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா?
மீடியாக்கள் தங்களது இருப்பை நிலை நிறுத்திக்கொள்ள வேகமாகவும் சுவாரஷ்யமாகவும் செய்திகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல முயற்சி செய்கின்றன. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் போன்றதொரு செய்திகளை அவசர கதியில் மக்களிடத்தில் கொண்டு செல்லும் போது அதனால் சமூகத்தில் குழப்பமும், ஒத்த வயதுடைய இளையோர் அதே போன்றதொரு தவறான முடிவுகளை எடுப்பதற்கும் காரணமாக அமைந்து விடுகிறது. கள்ளக்குறிச்சி மாணவி மரணம் அடைந்த அதற்கடுத்த ஒரு வாரத்தில் அதே போன்றதொரு தற்கொலை முயற்சிகளை பிற மாணவர்கள் மேற்கொண்டது நமக்கு நினைவு இருக்கலாம். அப்படியாக மாணவர்கள் செயல்பட்டதற்கு மீடியாவின் பங்கும் உள்ளது என பல மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆங்கிலத்தில் “Copycat Suicide” என்று சொல்லப்படும் தொடர் தற்கொலைகளுக்கு பல சமயங்களில் மீடியா செய்திகளும் காரணமாக அமைவதாக மனநல வல்லுநர்கள் கூறுகிறார்கள். ஒரு செய்தியை செய்தியாக மட்டும் மீடியாக்கள் கடந்து செல்லும் போது இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவது இல்லை. மாறாக, ஒரு செய்தியை அளவுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பும் போது தான் அத்தகைய சிக்கல்கள் எழுகின்றன.
அதிகமாக பேசப்படும் தற்கொலை செய்திகளில் உள்ளவர்களின் காரணத்தோடு அல்லது அவர்களோடு தாங்களும் ஒத்துப்போகிறோம் என நினைக்கக்கூடியவர்கள் அதே முடிவை எடுக்க துணிவதாக மனநல ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
2015 ஆம் ஆண்டில் தென் கொரியாவில் செய்யப்பட்ட ஆய்வில் “பிரபலங்களின் மரணம் பற்றிய அதீத செய்திகளுக்கும் அதற்கடுத்து நடக்கும் தற்கொலைகளுக்கும் அதிக நெருக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது”
கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில் மிகப்பெரிய கலவரம் மூண்டதற்கும், அதற்கடுத்த சில தற்கொலை முயற்சிகளுக்கும் மிக முக்கியக்காரணம் மீடியாக்களின் தவறான அணுகுமுறை தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போதைய சூழலில் முக்கிய தொலைக்காட்சி சேனல்களை காட்டிலும் யூடியூப் மற்றும் சமூக வலைதள சேனல்கள் அதிக தாக்கத்தை மக்களிடத்தில் ஏற்படுத்துகின்றன. அவைகளுக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை என்கிற காரணத்தால் அவை வியூஸ் ஐ அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் சிலரை அழைத்து வந்து அவர்களது கருத்துக்களை பதிவு செய்கின்றன. அந்த நபர்கள் தாங்கள் அறிந்த விசயங்களை எந்தவித ஆதாரமும் இல்லை என்றாலும் கூட யூகமாக சொல்லிவிட்டு போகிறார்கள். யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் ஆர்மபிக்கலாம் என்ற சூழலில் போதிய மீடியா அனுபவம் இல்லாதவர்கள் கூட வந்துவிடுகிறார்கள். அவர்களது முக்கிய நோக்கமாக இருப்பது வியூஸ் மட்டுமே.
ஆகவே, எந்தவித நெறிமுறைகளையும் பின்பற்றாமல் வெறுமனே மக்களை ஈர்க்கக்கூடிய விதத்தில் செய்திகளை அவர்கள் பகிர்கிறார்கள். தாங்கள் கொடுக்கும் செய்தி எப்படி சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்ற அக்கறை எல்லாம் அவர்களுக்கு கிடையவே கிடையாது. அப்படிப்பட்ட செய்திகள் தான் கள்ளக்குறிச்சி மாணவி விசயத்தில் நடந்தது.
எந்தவொரு தொலைக்காட்சி ஊடகமோ அல்லது யூடியூப் ஊடகமோ கள்ளக்குறிச்சி மாணவி மரணம் விசயத்தில் கள ஆய்வு செய்து உண்மையை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரியவில்லை. மாறாக, அவை மக்களிடத்தில் பொதுவாக பேசப்படும் ஊகங்களை மட்டுமே பேசின.
அப்படியானால், முன்னனி தொலைக்காட்சி சேனல்கள் மட்டும் தான் செய்திகளை சொல்ல வேண்டுமா என கேட்கலாம். நிச்சயமாக அப்படி நான் சொல்லவில்லை. மாறாக பொறுப்புணர்வோடு செய்திகளை பகிர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். புலனாய்வு செய்து ஆதாரம் இருந்தால் நிச்சயமாக எவ்வளவு சிறிய சேனலாக இருந்தாலும் உண்மையை மக்களிடத்தில் சொல்லலாம். அதில் தவறு இல்லை. ஆனால், எந்தவித ஆதாரமும் இல்லாமல் சிலரை அழைத்துவந்து அவர்களை பேசச்சொல்லி கருத்துக்களை பரப்புவது கூடாது என்பது எனது கருத்து. குறிப்பாக, உணர்வு பூர்வமான விசயங்களில் அப்படி செய்திடும் போது அது சமூகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறது என்பதே உண்மை. அதை அனைவரும் உணர வேண்டியது அவசியம்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!