ஜோதிமணி – கரு.நாகராஜன் – யார் பேசியது தவறு?
பிரதமர் உட்பட பொது நபர்களின் மீது விமர்சனங்களை வைக்க இந்தியக்குடிமகனாகிய அனைவருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால் அந்த விமர்சனம் நேர்மையானதாகவும் பயன்படுத்தக்கூடிய வார்த்தைகள் உணவில் கலந்திடும் உப்பின் அளவை போல சரியாகவும் இருக்க வேண்டும்
நியூஸ் 7 தொலைக்காட்சியில் “புலம்பெயர் தொழிலாளர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு கைகொடுக்க மறுக்கின்றவா எதிர்க்கட்சிகள்” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வில் பாஜவின் சார்பாக திரு கரு.நாகராஜன் அவர்களும் காங்கிரஸ் சார்பாக திருமதி ஜோதிமணி அவர்களும் இன்னும் பிறரும் கலந்துகொண்டார்கள். இந்த விவாத நிகழ்வில் தான் ஜோதிமணி அவர்களை கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்துவிட்டார் கரு.நாகராஜன் என கூறப்படுகிறது. இதனை அடுத்து நிகழ்வில் இருந்து ஜோதிமணி அவர்கள் வெளியேறினார்.
ஜோதிமணி அவர்களின் மீது கரு நாகராஜன் அவர்கள் வைத்த விமர்சனம் பொது வெளியில் மிகுந்த எதிர்ப்பை உண்டாக்கியது. மறுபக்கமோ ஜோதிமணி அவர்களும் பிரதமருக்கு எதிராக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருக்க கூடாது என பலர் கூறி வருகிறார்கள்.
நிகழ்வில் நடந்தது என்ன?
விவாதத்தின் தொடக்கத்தில், ஊரடங்கு காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது கருணையற்று, இரக்கமின்றி நரேந்திர மோதி அரசு நடந்துகொண்டதாகவும், தொழிலாளர்கள் விவகாரம் கை கழுவப்பட்டதாகவும் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார்.
ஜோதிமணியின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்து பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், “கொரோனா பாதிப்பு காலத்தில்கூட தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியும் என்ற நிலை பாஜக அரசால்தான் முடியும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள் என்றும், இரக்கம் பற்றி பேசும் ஜோதிமணி அவர் சார்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சி இந்நாளில்தான் இலங்கையில் தமிழ் மக்களை கொன்றுகுவிக்க துணை போனது,” என்றும் குற்றஞ்சாட்டினார்.
பின்னர் மீண்டும் ஜோதிமணி பேசிய போது, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்து வேலை செய்வதால்தான் இன்னும் மக்கள் பிரதமரை கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள்,” என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து நிகழ்வின் இறுதிக்கட்டத்தில் பேசிய கரு நாகராஜன், ஜோதி மணி அவர்களை தனிப்பட்ட வகையில் தாக்கிப்பேசினார். அதற்கு ஜோதிமணி அவர்கள் “பாஜக மாதிரியான கேவலமான கட்சியையோ அல்லது நாகராஜன் மாதிரியான கேவலமான ஆளையோ பார்த்தது கிடையாது என்றும், இதுமாதிர கேவலமான மனிதர்களை விவாதத்துக்கு அழைக்காதீர்கள்” என்று கூறிவிட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.
யார் மீது தவறு?
அரசியலில் பெண்கள் உயர்ந்த நிலைக்கு வருவது மிகவும் சவாலான ஒன்று. அப்படிப்பட்ட சூழலில் ஜோதிமணி அவர்களைப்போன்ற பெண்கள் வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களை நாம் போற்றி பாராட்ட வேண்டும். வழக்கம் போல அவர்களின் மீது தனிப்பட்ட தாக்குதலை தொடுத்து அவர்களை நிலைகுலைய செய்துவிடலாம் என நினைத்து பேசுவது என்பது, குறிப்பாக பொதுமக்கள் பார்க்கக்கூடிய பொது விவாத நிகழ்வில் பேசுவதென்பது எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இப்படி பேசிய கரு நாகராஜன் அவர்களின் மீது மிகப்பெரிய தவறு.
அதேசமயத்தில் ஜோதிமணி அவர்கள் பிரதமர் மீது ஒரு விமர்சனத்தை வைத்தார். “”நாடாளுமன்ற உறுப்பினர்கள் களத்தில் இருந்து வேலை செய்வதால்தான் இன்னும் மக்கள் பிரதமரை கல்லால் அடிக்காமல் இருக்கிறார்கள்”. பிரதமர் மீதோ அவரின் செயல்பாட்டின் மீதோ கடுமையான விமர்சனங்களை வைக்க ஒவ்வொரு இந்தியக்குடிமகனுக்கும் முழு உரிமை உண்டு. ஆனால் இந்தியாவின் மிக உயரிய பொறுப்பில் இருக்கும் பிரதமரை “கல்லால் அடிப்பார்கள்” என்று விமர்சனம் செய்வது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல.நிச்சயமாக இந்த வார்த்தை பிரயோகத்தை நாம் தவறென்றே சொல்ல முடியும். காரணம், இன்று பொறுப்பு வாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்தினால் நாளை சாதாரண நபர்கள் சமூக வலைதளங்களில் இன்னும் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்திட ஊக்கமளிக்கும்.
விமர்சனம் எந்த அளவிற்கு இருக்க வேண்டும்?
இப்போது ஒரு பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. நீ செய்தால் நானும் செய்வேன், என்னை சொல்லிறாயே உன் ஆள் முன்னே செய்ததை பார் என சொல்லும் பழக்கம் தான் அது. பாஜகவில் இருக்கக்கூடிய திருமதி வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் மிகவும் பிடித்தமான நபர்களில் ஒருவர். ஆனால் அவரே கரு நாகராஜன் அவர்கள் பேசிய பேச்சிற்கு நேரடியாக எதிர்ப்பை பதிவு செய்யாமல் கருணாநிதி தவறாக பேசியதாக வெளிவந்த செய்திகளை இணைத்து ஒரு பதிவை ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார். இது ஏமாற்றத்தையே அளித்தது.
தரந்தாழ்ந்த தனிமனித தாக்குதல் யார் செய்தாலும்
தவறுதான் .அடுத்தவரை குறை சொல்லும் முன் …..@BJP4TamilNadu@Murugan_TNBJP @KanimozhiDMK pic.twitter.com/mrMaq8F28y
— Vanathi Srinivasan (@VanathiBJP) May 19, 2020
எவர் செய்தாலும் தவறு தவறுதான் என்ற மன பக்குவம் ஏற்பட வேண்டும். அதனை வேறொரு தவறுடன் ஒப்பிட்டு எந்த விதத்திலும் அதற்கு ஆதாயம் தேடுதல் என்பது மிகப்பெரிய தவறு. சமூக வலைதளங்களில் கேவலமான வார்த்தைகளால் உயர் பதவிகளில் இருப்பவர்களை விமர்சனம் செய்திடும் போக்கு நடைபெற்று வருகிறது. வெறும் லைக் ஷேர் போன்றவைகளுக்காக பலர் இதனை மீண்டும் மீண்டும் செய்துவருகிறார்கள். அனைத்துமே தவறுதான். சொந்தக்காட்சிக்காரர்களே அவர்களை தடுத்து நேர்மைப்படுத்தினால் ஒழிய இந்த தவறுகளை தடுக்க முடியாது.
மீண்டும் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். பொதுத்தலைவர்களை விமர்சனம் செய்திடுங்கள். அதில் தவறில்லை ஆனால் நேர்மையாக தகுந்த வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்திடுங்கள். அதுவே சிறந்த விமர்சனம்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!