ஊரடங்கை தளர்த்துவது சரியானதா? கரோனா வைரஸ் பரவாதா?
ஆரம்பத்தில் மிக சிறப்பாக கடைபிடிக்கப்பட்டுவந்த ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. மே 17 க்கு பிறகு இன்னும் கூடுதலாக தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி ஊரடங்கை தளர்த்தினால் வைரஸ் பரவல் எப்படி கட்டுக்குள் நிற்கும் என்ற கேள்வியும் எழுகிறது.
இந்தப்பதிவை நான் எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் [மே 14,2020] உலகம் முழுமைக்கும் 44 லட்சத்து 29 ஆயிரத்து 744 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதில் இறப்பு 2 லட்சத்து 98 ஆயிரத்து 174 ஆகவும் வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவர்கள் 16 லட்சத்து 59 ஆயிரத்து 791 பேராகவும் இருக்கிறது. எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகிற சூழலில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரிக்கும் சூழலில் இப்படி ஊரடங்கை தளர்த்துவது சரியானதாக இருக்குமா என்ற அச்சமும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது? ஏன் ஊரடங்கு தளர்த்தப்படுகிறது என்பதற்கு சிலர் முன்வைக்கும் காரணங்கள் என்ன என்பது குறித்து இந்தப்பதிவில் நாம் பார்ப்போம்.
தமிழகத்தில் பாதிப்பு எப்படி இருக்கிறது?
தமிழகத்தில் இதுவரைக்கும் 9,227 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. அதில் 64 பேர் இறந்து இருக்கிறார்கள். 2,176 பேர் சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பி இருக்கிறார்கள். தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விடவும் அதிகப்படியாக கொரோனா வைரஸ் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. ஆகவே தான் எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுவதாக சொல்லப்படுகிறது. இதில் உண்மையும் இருக்கவே செய்கிறது. மற்ற மாநிலங்களைக்காட்டிலும் தமிழகத்தில் சுகாதாரத்துறை மிகவும் வேகமாக செயலாற்றி வருகிறது என்பதை மறுத்துவிடவும் முடியாது.
இந்திய அளவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இறந்தவர்களின் சதவிகிதம் 3.3% இதுவே தமிழகத்தில் 0.7% என்ற அளவிலேயே இருக்கிறது. தொடர்ச்சியாக தமிழகத்தில் தொற்றில் இருந்து மீண்டு வீடு செல்கிறவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது.
ஊரடங்கை தளர்த்துவது நல்லதா?
ஆனால் தற்போது பெரிய அளவில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு வருகிறது. கடுமையான ஊரடங்கு இருக்கும்போதே தனி மனித இடைவெளியை கடைபிடிக்காத பொதுமக்கள் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு எப்படி தனி மனித இடைவெளியை கடைபிடிப்பார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆரம்பத்தில் வைரஸ் பரவல் யாரிடமிருந்து பரவியது, வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நபர் யாரிடம் தொடர்பு வைத்திருந்தார் என்ற தகவல்களை சுகாதாரத்துறை கண்டறிந்து அவர்களையும் தனிமைப்படுத்தி வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியது நம் அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் ஊரடங்கை தளர்த்திய பிறகு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால் அது யாரிடமிருந்து பரவியது என்பதை கண்டறிவது சாத்தியமற்ற ஒன்றாக மாறிவிடும் அபாயம் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் தொற்று கண்டறியப்பட்ட நபர் ஏராளமான நபர்களுடன் தொடர்பு வைத்திருக்கும் அபாயமுமம் இருக்கிறது. இதுவரைக்கும் சமூகப்பரவல் தமிழகத்தில் ஏற்படாத சூழலில் ஊரடங்கை தளர்த்தினால் அந்த நிலைக்கு நாம் செல்லும் ஆபத்தும் இருப்பதாகவே தெரிகிறது.
உலக சுகாதார நிறுவனம் என்ன சொல்கிறது?
உலக சுகாதார அமைப்பின் அவசரகால திட்டங்களின் இயக்குநர், மருத்துவர் மைக்கேல் ரேயன் ஜெனிவா நகரில் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர் “மனித சமூகத்துக்குள் முதன்முறையாக ஒரு புதிய வைரஸ் நுழைந்துள்ளது. இந்த வைரஸ் எப்போது அழிக்கப்படும், ஒழிக்கப்படும், முடியும் என கணிப்பதே சவாலாக இருக்கிறது. இந்த நேரத்தில் நான் முக்கிய விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
கரோனா வைரஸ் நமது மனித சமூகத்தைவிட்டுச் செல்லாது, அது காலப்போக்கில் மற்றொரு பெருந்தொற்று வைரஸாக மாறக்கூடுமே தவிர ஒருபோதும் இங்கிருந்து செல்லாத நிலைகூட ஏற்படலாம். நாம் இதை உணர்ந்து கொள்வது முக்கியம். இந்த வைரஸ் எப்போது மறையும் என்று ஒருவராலும் கணிக்க முடியாது என நான் நினைக்கிறேன் தடுப்பு மருந்து மூலம் இந்த வைரஸை நாம் அழிக்க வழி இருக்கிறது.ஆனால், அந்த தடுப்பு மருந்து மிகுந்த வீரியமாக இருத்தல் அவசியம், அனைத்து மக்களுக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும்.
அதை நாம் அதிக அளவு பயன்படுத்த வேண்டும். கவலை தரக்கூடிய கரோனா பெருந்தொற்றுநோயை எதிர்காலத்திற்கான நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாற்ற உலகிற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். ஆதலால் உலக நாடுகள் அனைத்தும் கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நம்பிக்கையின் அடிப்படையி்ல் பிரச்சினைக்கு தீர்வு கண்டால் மனித சமூகத்துக்கு உதவும். இந்த முயற்சியில் நாம் வெற்றி பெற அரசியல் ரீதியாக, நிதிரீதியாக, செயல்பாட்டு வகையில், தொழில்நுட்ப வகையில், அனைவரும் ஆதரவு அளித்தால்மட்டுமே வெற்றி பெற முடியும்” என மைக்கேல் ரேயன் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வேன் கெர்கோவ் கூறுகையில் “ கரோனா வைரஸை பல நாடுகள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதை பார்க்கிறோம். கடுமையாக சுகாதார நடவடிக்கைகள், மக்களிடம் விழிப்புணர்வு, தொற்றுநோய் பிரிவி்ல் கவனம் செலுத்தி இதை கட்டுப்படுத்தியுள்ளார்கள். ஆனால், மக்கள் மீண்டும் வேலைக்குச் செல்லும் போது, வெளியே நடமாடும் போது கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கிவிடும் என்பதை மட்டும் மறந்துவிடக்கூடாது.
ஆதலால் கரோனா வைரஸ் தனது இயல்பிலேேய கட்டுப்பட சிறிது காலம் ஆகும், அவசரப்பட்டு லாக்டவுனைத் தளர்த்துதல், மக்களிடையே சுகாதார விழிப்புண்ரவு குறைதல் ஆபத்தை விளைவிக்கும்” எனத் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கையை நமது அரசு செவி கொடுத்து கேட்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை, வைரஸ் பரவல் தொடர்ந்து நடக்கிறது இப்படிப்பட்ட சூழலில் ஊரடங்கை தளர்த்திட நாம் நடவடிக்கை எடுக்கிறோம் என்றால் வைரஸ் பரவல் குறைவாக இருக்கின்ற நேரத்தில் மட்டும் ஏன் ஊரடங்கை கடைபிடித்திருக்க வேண்டும். அப்போதே விட்டிருக்கலாமே என்ற அடிப்படை கேள்வியும் எழவே செய்கிறது.
சமூகத்தொற்று ஏற்பட்டால் இருப்பவர்கள் சிறந்த சிகிச்சையை பெற்று உயிர்பிழைத்துக்கொள்வார்கள். சவால்களை சந்திக்கபோகிறவர்கள் ஏழைகளே. அரசு ஏழைகளின் பக்கம் நிற்க வேண்டும் என்பதே அனைவரது விருப்பமும் நம்பிக்கையும்.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!