சர்வதேச மகளிர் தினம் – சமத்துவமின்மையை உடைக்க போராட வேண்டும்
பெண் என்பதாலேயே வீட்டில், பணியிடத்தில், பொது இடங்களில், சமூகத்தில் மறுக்கப்படும் வாய்ப்புகளும் உரிமைகளும் ஏராளம். அதனை களைவதற்கான முயற்சியில் பெண்கள் கடுமையாக போராட வேண்டும், ஆண்கள் அவர்களுக்கு துணை நிற்க வேண்டும்.
ஆட்டோ ஓட்டும் துணிச்சல் பெண், பேருந்து ஓட்டுநராக அசத்தும் இளம் பெண், பிசினஸில் கோடிகள் சம்பாதிக்கும் பெண், போர் விமானத்தை இயக்கிய பெண் என பெண்களின் வெற்றி பற்றிய எந்த செய்தி வந்தாலும் அது ஒவ்வொருவருக்குள்ளும் ஒருவித மகிழ்ச்சியை இயல்பாக ஏற்படுத்துவதை அனைவருமே உணர்ந்திருப்போம். ஒரு ஆண் அதனை செய்ததாக வந்திருந்தால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியைக்காட்டிலும் பெண் செய்திருப்பதால் ஏற்படும் மகிழ்ச்சி அதிகம். இந்த மாறுபாடு ஏன் ஏற்படுகிறது என தெரியுமா? ஒரு பெண் இவ்வளவு பெரிய வெற்றியை பெற வேண்டுமானால் எவ்வளவு கஷ்டத்தை சவால்களை சந்தித்து இருக்க வேண்டும் என்பது நமக்குத் தெரிந்தபடியால் தான் நாம் அதற்காக அதிக அளவில் மகிழ்ச்சி அடைகிறோம்.
ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கான சம உரிமை குறித்து அதிக அளவில் பேசப்படுகிறது. ஆனால், அது எதார்த்தத்தில் எந்த அளவில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது குறித்த எந்த ஆய்வும் நடத்தப்படுவது இல்லை. ஆனாலும், அனைத்து தடைகளையும் உடைத்து பெண்கள் முன்னேறிக்கொண்டு தான் இருக்கிறார்கள், அதற்கு பல ஆண்களும் உறுதுணையாக இருக்கிறார்கள். இதில் இன்னும் அதிக முன்னேற்றம் வேண்டும்.
ஆரம்பக்கல்வியில்….
ஒரு பெண்ணுக்கான சவால் அவளது படிக்கும் பருவத்திலேயே துவங்கி விடுகிறது. தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்களில் பெண்களுக்கு இயல்பாக ஆரம்பக் கல்வி கிடைத்துவிடுகிறது என்றாலும் கூட உயர்கல்வி என்று வரும் போது ஆண் குழந்தைக்கே இன்றளவும் பல குடும்பங்களில் முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. இதற்கு முக்கியக்காரணம், பல பட்டம் பெற்ற பெண்கள் கூட எதோ ஒரு கட்டாயத்தால் விரும்பியோ அல்லது விரும்பாமலோ தங்களது படிப்பை பயன்படுத்தாமல் வீட்டிற்குள்ளேயே இருப்பதும் தான். திருமணத்திற்கு பிறகான இந்த சூழ்நிலை பல பெற்றோர்களை பெண் குழந்தைகளின் கல்விக்கு செலவிடுவதை ஊக்குவிப்பது இல்லை.
அண்மைய காலங்களில் பெண் குழந்தைகளுக்கு ஆண் குழந்தைகளுக்கு நிகரான முக்கியத்துவம் கொடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இது பரந்த சமூகத்தில் ஏற்பட வேண்டிய மாற்றம். பெண்களின் கல்வி, திறமை அவர்களது திருமணத்திற்கு பிறகு குழந்தை வளர்ப்போடு நின்றுவிடாமல் பொருளாதார வாய்ப்புக்கு வழிதேடித் தந்தால் அவர்களும் முன்னேறுவார்கள், அதேபோல தேசமும் முன்னேறும். இதற்கு அரசு ஆவண செய்திட வேண்டும். பயன்படுத்தப்படாமல் இருக்கும் பெண்களின் சக்தியை பயன்படுத்த திட்டம் வகுக்க வேண்டும்.
வேலைவாய்ப்பில் ….
வேலைவாய்ப்பில் அரசு நிறுவனத்தில் பெண் பாகுபாடு அவ்வளவு பார்க்கப்பட வாய்ப்பு இல்லை. ஆனால், பெரும்பான்மையான தனியார் நிறுவனங்களில் அது பார்க்கப்படுகிறது. ஒரு பெண்ணை வேலைக்கு எடுப்பதற்கு முன்னதாக பல்வேறு விசயங்கள் கணக்கில் எடுக்கப்படுகின்றன. அதற்காக அவர்களை குறை சொல்லவும் முடியாது.
பெரிய பெரிய தனியார் நிறுவனங்களில் ஆண் – பெண் சமத்துவ வேறுபாடு களையப்பட்டு வருகிறது. பெண்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புகள், உரிமைகள் அனைத்தும் எந்தவித சமரசமும் இன்றி தரப்படுகிறது. பெரிய நிறுவனங்களில் தரப்படும் சம்பளத்தோடு தரப்படும் மகப்பேறு விடுமுறை எத்தனை சிறு நிறுவனங்களில் சிரமமின்றி கொடுக்கப்படுகிறது? இதனை யார் ஆய்வு செய்கிறார்கள்? அனைத்து நிறுவனங்களிலும் பெண்களுக்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
சமூகத்தில்….
சமூகத்தின் பார்வையில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. பெண்கள் வெற்றி அடைவதை சமூகம் கொண்டாடும் போக்கு என்பது அதிகரித்து வருகிறது. இது பல பெண்களை ஊக்கப்படுத்தி வருகிறது. ஆனால், இந்த மாற்றம் குடும்ப அளவிலும் ஏற்பட வேண்டும். தங்களது குடும்பப் பெண்கள் வெற்றி அடைவதற்கு அவர்களது கனவுகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான ஆதரவு என்பது குடும்ப அளவிலும் ஏற்பட வேண்டும். ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கு பின்னாலும் குடும்பத்தின் ஆதரவு என்பது நிச்சயமான ஒன்றாக இருக்கிறது.
தன்னிடத்தில்….
புற உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை விட தன்னிடத்தில் ஏற்படும் மாற்றம் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம். பெண்களுக்கோ அது மிக மிக அவசியம். இப்போது தான் தனது பார்வையை மாற்றிக்கொண்டு வருகிற சமூகத்தில் தனக்கான வாய்ப்பு கொடுக்கப்படும் காலம் வரைக்கும் காத்திருக்காமல் தனது கனவுகளை நோக்கி பெண்கள் பயணப்பட வேண்டும். தனக்குள்ளே கனவுகளை ஆசைகளை திறமைகளை புதைக்கும் போக்கை விட்டு புறப்பட்டால் வெற்றி நிச்சயம்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!