கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா – இது வரலாறு
உலக அளவில் புகழ்மிக்க பல்கலைக்கழகங்களின் வரிசையில் அமெரிக்காவின் ஹார்வேர்டு, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் இடம்பெறுகின்றன. ஆனால் இந்தப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே மாபெரும் பல்கலைக்கழகங்கள் இந்தியாவில் இருந்துள்ளன. இன்னும் சரியாக சொல்லப்போனால் கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா என்பது தான் எதார்த்தமான உண்மை.
நாம் எதனை உயர்வு என குழந்தைகளுக்கு அறிமுகம் செய்கிறோமோ அதைத்தான் அவர்கள் உயர்வானதாக கருதுவார்கள்.உதாரணத்திற்கு, தற்போதைய தலைமுறையில் வாழும் குழந்தைகளுக்கு ஆங்கிலம் தான் மேலான மொழி என்ற எண்ணத்தை தெரிந்தோ தெரியாமலோ போதித்துக்கொண்டு இருப்பதனால் அதனை நோக்கிய ஒரு படையெடுப்பு நடக்கிறதே அப்படித்தான். உலக அளவிலான சிறந்த கல்லூரிகளை வரிசைப்படுத்தினால் தற்போது இந்தியாவில் இயங்கிவரும் ஒரு சில கல்லூரிகள் அந்த வரிசையிலே இடம் பெறுகின்றன. சிறந்த கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டில் தான் இருக்கின்றன என்ற எண்ணவோட்டம் வெகுசன புத்தியாக இங்கே மாறியுள்ளது. அதற்கு முக்கியக்காரணம், நமது ஆட்சியாளர்களின் அக்கறை இன்மை, கல்விக்கொள்கையில் பின்னடைவு என்பது போன்றவை காரணமாக இருந்தாலும் நமது பொது புத்தியும் ஒரு காரணமாக இருக்கிறது.
ஆனால், வரலாற்றை நாம் கவனித்துப்பார்த்தால் அமெரிக்காவின் ஹார்வேர்டு, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் போன்ற பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பே நமது இந்தியாவில் நாளந்தா, விக்ரமசீலம், உடைந்தாபுரி, சோமபுரம், ஜகத்தாலம், வல்லடி ஆகிய ஆறு பௌத்த பல்கலைக்கழகங்கள் இருந்துள்ளன. இதுபோன்ற பல கல்வி கற்கும் நிலையங்கள் பலவற்றை பல வெளிநாடுகளுக்கு முன்னதாகவே இந்தியா கொண்டிருந்தது. பல்வேறு படையெடுப்புகள், அந்நியர்களின் ஆட்சி, சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களின் தொய்வு உள்ளிட்ட காரணங்களால் தான் நாம் இந்த நிலையில் இருக்கிறோம்.
எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதி இருக்கும் “எனது இந்தியா” புத்தகத்தில் வராகமித்திரர் என்ற தலைப்பில் எழுதி இருக்கும் கட்டுரையில் இந்தியா எப்படி கல்வியில் மேம்பட்டு இருந்தது என்பதனை விரிவாக எழுதி இருக்கிறார். அவற்றில் சிலவற்றை உங்களுக்கு இங்கே சொல்லப்போகிறேன்.
கல்வியில் இங்கிலாந்துக்கு முன்னோடி இந்தியா
வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஒன்பது கிரகங்களை கண்டறிவதற்கு முன்னதாகவே நவ கிரகங்கள் வைத்து வழிபாடு நடத்திய அறிஞர்கள் வாழ்ந்த இந்தியா இது. உஜ்ஜனியில் 505 ஆம் ஆண்டு பிறந்த வராகமித்திரர் என்ற வானசாஸ்திர அறிஞர் கிரகணம் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து கூறும் எளிய நடைமுறையை கண்டறிந்து இருக்கிறார். எண்ணெய் கிண்ணம் ஒன்றில் கீரையை மிதக்கவிடும் செயல்முறை மூலமாக கிரகணம் எப்போது தோன்றும் என சொல்லி இருக்கிறார்.
நாம் மேற்சொன்ன சில பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்ட ஆண்டுகளை இப்போது பார்ப்போம். அதன்படி, ஹார்வேர்டு பல்கலைக்கழகம் 1636 ஆம் ஆண்டும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் 1096 ஆம் ஆண்டும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் 1209 ஆம் ஆண்டும் உருவாக்கப்பட்டுள்ளன. இதிலே ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ் ஆகிய இரண்டு பல்கலைக்கழகங்களும் இங்கிலாந்தில் இருக்கின்றன. 1546 ஆம் ஆண்டில் ஆக்ஸ்போர்டில் வேலை பார்த்த பேராசியர்களின் எண்ணிக்கையே வெறும் ஐந்து தானாம்.
இந்தியாவில் இருந்த பழமையான மற்றும் புகழ்மிக்க பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகம் 427 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. நாலந்தா பல்கலைக்கழகம் சரியாக செயல்பட்டுக்கொண்டிருக்கும் போது அங்கே 1510 ஆசிரியர்கள் வேலையில் இருந்துள்ளார்கள். ஆசிரியர்களின் எண்ணிக்கையே இவ்வளவு என்றால் மாணவர்களின் எண்ணிக்கையை யோசித்துப்பாருங்கள். இன்னொரு சிறப்பு என்னவென்றால், அங்கே படித்த மாணவர்களிடம் கல்விக்கட்டணம் என்பது வசூல் செய்யப்படவே இல்லை என்பது தான். அருகே இருந்த கிராமங்களில் இருந்து கொடுக்கப்பட்ட வரியைக்கொண்டு தான் கல்லூரி நடத்தப்பட்டு இருக்கிறது. கிபி 1037 இல் நடந்த படையெடுப்பில் தான் நாலந்தா பல்கலைக்கழகம் எரிக்கப்பட்டது.
இந்தியாவில் அடிப்படை கல்வி கட்டமைப்பும் மிக சிறப்பானதாக இருந்துள்ளது. 1812 இல் இந்தியாவில் பணியாற்றிய கிறிஸ்தவ மெஷினரியை சேர்ந்த ஹாவல் என்பவர் இங்கிலாந்து திரும்பி தனது சொந்தக் கிராமத்தில், இந்தியாவில் உள்ளது போல ஏழை எளிய மக்களுக்கும் கல்வித்தரப்பட வேண்டும் என பிரச்சாரம் செய்தார். பிரபுக்களுக்கு கொடுக்கப்படும் கல்வி எப்படி ஏழை எளிய மக்களுக்கு கொடுக்கப்பட முடியும் என மதச் சபையே அவர் மீது நடவெடிக்கை எடுத்தது.
அதுபோலவே, இன்று பல்வேறு கல்லூரிகளில் பின்பற்றப்பட்டுவரும் வகுப்பறை, நூலகம், பாடப்பிரிவு, பாட நேரம்,பயிற்றுவிக்கும் சிறப்பு ஆசிரியர்கள், தங்கிப்படிக்கும் முறை என அத்தனையும் அப்போதைய காலகட்டத்திலேயே இந்தியாவில் பின்பற்றப்பட்டு வந்துள்ளன. இன்று சிறை போன்ற வகுப்பறைக்குள் பாடங்களை கற்பிக்காமல் இயற்கையோடு இணைந்து கல்வியை போதிப்பதற்காகத்தான் மலை மீது, காடுகளின் அமைதியான பகுதிகளில் கல்வி நிலையங்கள் அமைக்கப்பட்டு கல்வி போதிக்கப்பட்டது. நமது தமிழகத்திலும் 1000 ஆண்டுகளுக்கு முன்பே மதுரையை சுற்றிலும் இருக்கும் எட்டு மலைகளிலும் சமணர்கள் குகைப்பள்ளிகளை நடத்தியுள்ளார்கள்.
1931 ஆம் நடந்த வட்ட மேசை மாநாட்டில் “இந்தியாவின் ஆயிரமாண்டு கால இந்தியக் கல்விமுறை ஒழிக்கப்பட்டு புதிய கல்விமுறை புகுத்தப்பட்டதால் முன்பைவிடவும் அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள் உருவாகிறார்கள்” என்று குறிப்பிட்டு பேசினார் மஹாத்மா காந்தி.
வெறும் மனப்பாடம் செய்து எழுதும் திறனை வைத்துமட்டும் மாணவர்களின் திறனை எடைபோடுவது தவறு. பேச்சு, தர்க்கம் செய்தல் போன்ற பலவற்றையும் கருத்திலே கொண்டு தான் மாணவர்களின் திறனை எடைபோட வேண்டும் என்பதனை இந்தியாவில் நமது முன்னோர்களே பின்பற்றி இருக்கிறார்கள்.
இந்தியாவின் பிரச்சனை என்ன?
எப்படி இங்கிலாந்தில் பிரபுக்கள் மட்டுமே கல்வி கற்க வேண்டும் என சொன்னார்களோ அதனைப்போலவே இந்தியாவில் குறிப்பிட்ட சாதியினர் தான் கல்வி கற்க வேண்டும் என சொன்னார்கள். சூத்திரர்கள், பெண்களுக்கு கல்வி கற்க அனுமதி தரப்படவில்லை. இந்த கட்டுப்பாடு எதிர்காலத்தில் உடைக்கப்பட்டது என்பது வரலாறு.
இந்தியர்களை தன்வயப்படுத்தும் கல்விமுறையை மெக்காலே அறிமுகப்படுத்தி இந்தியாவின் அடிப்படை கல்வி அமைப்பையே சிதைத்தபோது அவர்களை எதிர்த்து நிற்க நம்மிடம் வலு இல்லை. ஆனால் சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட மெக்காலேவை தூக்கிப்பிடிக்கும் போக்கு இங்கு இருக்கவே செய்கிறது. பழைய பழக்கவழக்கங்களில் சிறந்தவையும் உண்டு, தீயவையும் உண்டு. தீயவற்றை ஒதுக்கிவிட்டு சிறந்தவற்றை நாம் எடுத்துக்கொண்டு செயல்படத்துவங்கினால் நமக்கென ஒரு தனித்துவம் உருவாகும்.
எது எப்படி ஆயினும் இங்கிலாந்து உள்ளிட்ட பல வெளிநாடுகளுக்கு முன்பே ஆரம்பக்கல்வியையும், சிறந்த பல பல்கலைக்கழகங்களையும் இந்தியா கொண்டிருந்தது என்பது மறுக்க முடியாது வரலாறு.
இதுபோன்ற கட்டுரைகளை தொடர்ந்து வாசியுங்கள்.
பாமரன் கருத்து [ஸ்ரீதரன் பாஸ்கரன்]