கட்சி சார்பில்லாத செய்தி நிறுவனத்தை உருவாக்க முடியாதா?

பத்திரிகை மற்றும் செய்தி சேனல்களைக்கூறி அவர்கள் எந்த கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என கேட்டால் கிட்டத்தட்ட அனைத்து நிறுவனங்களையும் ஏதோ ஒரு கட்சியோடு இணைத்துப்பேசும் அவல நிலைதான் இங்கு இருக்கிறது.
கட்சி சார்பில்லாத செய்தி நிறுவனத்தை உருவாக்க முடியாதா?

தற்போது பத்திரிகையாளராக இருக்கும் ஒவ்வொருவரும் இளம் வயதில் “நேர்மையாக செயல்பட்டு உண்மையை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு நேர்மையான பத்திரிகையாளராக நாம் இருக்க வேண்டும்” என்ற விருப்பத்தின் பெயரிலேயே இந்தப்பணிக்கு சேர்ந்தவர்கள். ஆனால் அதன்படி நடக்காமல் போகும்போது அரசியல்வாதிகள் சொல்லும் அதே அப்பட்டமான காரணத்தைத்தான் தவறாக நடுநிலை தவறி நடக்கும் பத்திரிகையாளரும் சொல்கிறார். அது என்னவெனில் “எங்க சார் நம்மள நல்லவனா இருக்க விடுறாங்க” என்பதுதான். இவர்கள் சாக்குப்போக்கு சந்தர்ப்பவாதிகள், வேறென்ன சொல்ல முடியும். ஆனால் எத்தகைய சூழல் வந்தாலும் நடுநிலை தவறாமல் செயல்படும் பத்திரிகையாளர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஆனால் அவர்களின் மேல் வெளிச்சம் படுவதே இல்லை, மாறாக அவர்கள் வெறுத்து ஒடுக்கப்படுகிறார்கள். 

நான் விரும்பும் ஒரு பத்திரிக்கை எப்படி இருக்க வேண்டும்?

பேனாவால் எழுதும் புகைப்படம்

பத்திரிகையாளர்களின் கைகளுக்கு கை விலங்கு போடாத, பத்திரிகையாளர்களின் வாய்களுக்கு வாய்ப்பூட்டு போடாத சுதந்திரமான நிறுவனமாக இருக்க வேண்டும்

ஆளும் கட்சி எப்போது தவறு செய்யும் என கண்காணிப்பது எதிர்க்கட்சி மட்டுமல்ல. எந்தவொரு சிறந்த பத்திரிக்கையுமே அதையே தான் செய்யும். சரியாக சொல்லவேண்டும் என்றால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உட்பட அனைத்து அதிகார மையங்களையுமே எப்போதும் கண்காணித்துக்கொண்டு இருப்பது தான் ஒரு சிறந்த பத்திரிகையின் பணி. அவர்களில் எவர் தவறு செய்தாலும் அதை அப்படியே மக்களிடம் கொண்டு சேர்ப்பது தான் சிறந்த பத்திரிக்கையின் பணி. 

 

ஆனால் இங்கு என்ன நடக்கிறது? A என்கிற பத்திரிக்கையோ செய்தி சேனலோ அரசு நல்ல விதமாக செயல்பட்டால் அது குறித்து விரிவாக செய்தி போடுகிறது. கூடவே எதிர்க்கட்சிகள் தவறு செய்தால் அதை பெரிதுபடுத்தி போடுகிறது. B என்கிற பத்திரிக்கையோ செய்தி சேனலோ எதிர்க்கட்சி நல்ல விதமாக செயல்பட்டால் அதை செய்தியாக்குகிறது. அரசு தவறு செய்தால் அதை பெரிதுபடுத்தி போடுகிறது.

 

இப்படி ஒரு பக்கமாக செயல்படும் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக தற்போது இருக்கிறது. இதற்குள் எந்த பத்திரிக்கை நேர்மையாக செயல்பட்டாலும் கூட அது மக்களின் பார்வைக்கு புலப்படுவது இல்லை. மாறாக, எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சி ஆகிய இரண்டின் எதிர்ப்பையும் சம்பாதித்துக்கொண்டு அல்லல் படுகிறது. 

ஆனால் ஒரு சிறந்த பத்திரிக்கை – எந்தவித பாகுபாடும் இல்லாமல் குறைகளை சுட்டிக்காட்டி நிறைகளை பாராட்டிட வேண்டும். குறிப்பாக குற்றங்களை வெளிக்கொண்டுவரும் போது எந்தவித பாகுபாடும் இல்லாமல் நாம் மக்களின் பிரதிநிதி என்ற ஒற்றை உணர்வோடு செயல்பட வேண்டும். இதைத்தான் நான் எதிர்பார்க்கிறேன். 

ஆனால் ஏன் முடியவில்லை?

கட்சி சார்பில்லாத செய்தி நிறுவனத்தை உருவாக்க முடியாதா?

சில ஆயிரங்கள் மற்றும் லட்சங்களை வைத்துக்கொண்டு சுதந்திரமாக பத்திரிக்கை நடத்திய காலம் மலையேறிவிட்டது. இன்று பத்திரிக்கை நடத்தவும், தொலைக்காட்சி சேனல்கள் நடத்தவும் சில நூறு கோடிகளாவது தேவைப்படுகின்றன. இப்போது பொதுமக்களுக்கு நேரடியாகவும் விரைவாகவும் பிரமிப்பாகவும் செய்திகளை காட்டுகிற சேனல்களைத்தான் பிடித்திருக்கிறது. அப்படியொரு செய்தி சேனலையோ பத்திரிகையையோ சில ஆயிரங்களில் சம்பளம் வாங்கும் நேர்மையான நடுத்தர பத்திரிகையாளனால் நடத்திட முடியுமா? முடியாது. 

 

யாரோ ஒரு தொழில் அதிபரோ அல்லது கட்சிகளை சேர்ந்தவர்களோ தான் செய்தி சேனல்களை நடத்துகிறார்கள். அவர்கள் ஏதாவது ஒரு சூழலில் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக நடக்க வேண்டிய சூழல் வரும் போது செய்தி நிறுவனங்களின் நேர்மைத்தன்மை அடியோடு மாய்ந்துபோகிறது. அங்கு வேலைபார்க்கும் நபர்கள் நேர்மையாக இருந்தாலும் கூட வேர் நேர்மையாக இல்லாதபட்சத்தில் கிளைகள் எப்படி நேர்மையாக இருக்க முடியும். 

சில நேரங்களில் வளைந்துகொடுக்க வேண்டி தான் இருக்கிறது என்று சொல்லும் பல செய்தியாளர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களை நாம் பெரிய இடத்தில் நம்பிக்கையோடு வைத்திருக்கிறோம். ஆனால் உண்மை அவர்களுக்கு மட்டுமே தெரியும். 

என்ன செய்யலாம்?

planning and will power success

பணம் இன்று ஒரு பிரதானமான விசயமாக மாறிவிட்டது. ஆனால் அதை பெரிய முதலாளிகளிடம் இருந்து பெறுவதற்கு பதிலாக, ஒரு நேர்மையான பத்திரிகையாளர் மக்களிடம் பணம் பெற்று அதன் மூலமாக செய்தி நிறுவனத்தை நடத்திட முடியும். இன்று பல நாளிதழ்கள் அப்படித்தான் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. நேர்மையாக செயல்படும் பட்சத்தில் நிச்சயமாக மக்கள் அதற்கு ஆதரவாக நிற்பார்கள். இணையம், சமூக வலைதளம், இளைஞர்களின் திறமை இவற்றை ஒருங்கிணைத்து ஒரு நேர்மையான பத்திரிகையாளர் செயல்படுவாராயின் அவரால் அதை செய்துமுடிக்க முடியும். 

 

மிகப்பெரிய சேனலில் யாரோ ஒரு பணக்காரரின் கீழ் நேர்மையற்ற முறையில் அடங்கி ஒடுங்கிய பத்திரிகையாளராக இருப்பதைவிடவும் சுதந்திரமான பத்திரிகையாளராக சின்னஞ்சிறிய நிறுவனத்தில் வேலை பார்ப்பதே மேல். அதுவே பெருமை. 

ஒரு நேர்மையான பத்திரிகையாளரால் தானே ஒரு பத்திரிகையை துவங்கி நடத்திட முடியும், அதற்கு மக்கள் ஆதரவு அளிப்பார்கள் என்ற நம்பிக்கையை கொடுக்கும் விதமாக முன்னனி பத்திரிகையாளரக்ள் செயல்பட்டால் எதிர்கால இளைஞர்களுக்கு புது நம்பிக்கையை அது அளிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.


Get updates via WhatsApp






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *