மேதகு பிரபாகரன் ஆயுதமேந்தியது ஏன்?


காந்தியின் அகிம்சை வழிமுறையை பின்பற்றி வாழ்ந்த குடும்பத்தில் பிறந்த பிரபாகரன் ஆயுதமேந்தி மக்களின் நலன் காக்க போர் செய்திடுவார் என யாரும் கணித்திடவில்லை. ஆனால் நடந்த சம்பவங்களும் அவரின் மன உறுதியும் அவரை அந்த வழிநோக்கி நகரத்தின.

‘பிரபாகரன் ஒரு வாழ்க்கை’ எனும் புத்தகத்தில் திரு செல்லமுத்து குப்புசாமி அவர்கள் எழுதிய முன்னுரை தொகுதிப்பில் குறிப்பிட்டுள்ள ஒரு விசயத்தில் இருந்து பிரபாகரன் குறித்த கட்டுரையை எழுதுவது சரியானதாக இருக்குமென கருதுகிறேன். பிரபாகரன் அவர்களை சிலர் தீவிரவாதி என்பார், சிலர் ராஜிவ் காந்தியை கொன்ற கொலையாளி என்பார், சிலர் அவரை புரட்சிக்காரன் என்பார், சிலர் அவரை விடுதலைப்போராளி எனக் கொண்டாடுவார். ஆக எந்தவொரு விசயத்தையும் அவரவர் சார்பாக பார்ப்பதென்பது வழக்கமான ஒன்று. பலர் இப்படி பலவகையில் பிரபாகரன் அவர்களைப் பார்த்தாலும் உண்மையில் பிரபாகரன் யார் என்பதற்குமான விளக்கத்தை செல்லமுத்து குப்புசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அதன்படி, இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் நடத்திய நீண்டதொரு உரிமைப் போராட்டத்தில் மிகவும் காத்திரமான அத்தியாயத்தை எழுதியவர் பிரபாகரன்.

அவரை ஆதரிப்பவர்களாகட்டும் எதிர்ப்பவர்களாகட்டும் அவரது வாழ்க்கைப் பாதையை அந்தப்பாதையை அவர் தேர்ந்தெடுக்க தூண்டிய வரலாற்றுப் பின்னனியை எந்த அளவிற்கு தெரிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக்குறியாக இருப்பதாக செல்லமுத்து அவர்கள் கூறியிருந்தார்.

சிறுவனாக இருந்த போது பிரபாகரன் எப்படி இருந்திருப்பார்? அவரது குடும்பம் அகிம்சை வழிகளை கடைபிடிக்கும் குடும்பம் என கேள்விப்பட்டிருக்கிறோமே, அதிலிருந்து பூத்த பிரபாகரன் ஆயுதமே தீர்வு தரும் என நம்பியது எப்படி? என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென எனக்கு மிக ஆவலாக இருந்தது. நான் கண்டைந்த விவரங்களையே இங்கு பார்க்கவிருக்கிறோம்.

எழில் கொழிக்கும் நாடுகள் சிலவற்றில் இலங்கைத்தீவும் ஒன்று. இயற்கை, புத்தமதம் என அமைதிக்கு அதிக வாய்ப்புள்ள அந்த நாடு அமைதியாக இருந்திடவில்லை. மொழி, இனம், கலாச்சாரம் இவற்றால் வேறுபட்ட இரண்டு இனங்களுக்கு இடையிலான குடியுரிமைப் பிரச்சனையால் சிக்கித்தவித்தது. அப்போது தமிழ் மக்களுக்கு ஆதரவாக கட்சிகள் இருந்து அவை செயல்பட்டாலும் கூட தாக்குதல்கள் தொடர்ந்து வந்தன. பொதுமக்களின் அறவழி போராட்டங்கள் அவ்வப்போது நடைபெற்றாலும் கூட கொடுமை தீர்ந்தபாடில்லை.

நவம்பர் 26, 1954 ஆம் நாள் திரு வல்வெட்டித்துறை திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களுக்கும் பார்வதி அம்மாளுக்கும் 4 வது பிள்ளையாக பிறந்தார் பிரபாகரன். கடைசிப்பிள்ளை என்பதனால் வீட்டில் துரை என செல்லமாக அழைக்கப்பட்டுள்ளார். பிரபாகரன் அவர்களின் குடும்பம் கோவில்கள் கட்டிய பாரம்பரியம் உடையது. வேலுப்பிள்ளை உள்ளிட்ட பலரும் காந்தியின் அகிம்சை வழிமுறையில் பெரிதும் நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது.

மாலை நேரங்களில் வேலுப்பிள்ளை தனது வீட்டில் நண்பர்களுடன் தமிழர்கள் மீது நடத்தப்படுகின்ற தாக்குதல் குறித்து பேசுவார்கள். அவர்கள் மொழிப்பிரச்சனை, இனப்பிரச்சனை என பல விசயங்களை அலசுவார்கள். அப்போது ஐந்து வயது சிறுவனாக இருந்து வந்த பிரபாகரன் இவர்களின் பேச்சை அருகிலே இருந்து உன்னிப்பாக கவனித்துக்கேட்கும் இயல்பினைக் கொண்டிருந்தார். ஒருநாள் இரண்டு நாள்கள் இல்லை, இப்படி கவனிக்கும் வழக்கம் அடிக்கடி தொடர்ந்தது. சில சமயங்களில் வேலுப்பிள்ளை கேட்டே விடுவார்,

“தம்பி இங்கே வா, பெரியவர்கள் நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போது அமைதியாக உட்கார்ந்து கவனமாக கேட்கிறாய். உன் வயது பிள்ளைகள் விளையாடும் போது நீ மட்டும் இங்கே நாங்கள் பேசுவதை கேட்கிறாயே, உனக்கு என்ன புரிகிறது?”

அப்பா கேட்கும் இந்த கேள்விக்கு பிரபாகரன் எந்தப்பதிலும் அளிப்பது இல்லை. அமைதியாக ஓடிவிடுவார். ஆனால் அடுத்தநாள் அதே வழக்கம் தொடரும். இன்று அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கும் பிரபாகரன் பின்னாளில் தவறிழைத்தவர்களுக்கு பதில் சொல்லப்போகிறார் என எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

பிரபாகரன் மனதில் என்னவிருக்கிறது என எவருக்கும் தெரியவில்லை. அதை கண்டுகொண்டே ஆகவேண்டும் என கட்டாயமும் அப்போது இல்லை, காரணம் அவர் சிறுவயதுப்பிள்ளை. ஆனால் அந்தப்பிள்ளை ஒருநாள் வாய் திறந்தது. அந்தத்தருணம் வேலுப்பிள்ளை உள்ளிட்ட பெரியவர்களை வாயடைத்து நிற்கச்செய்தது.

பனதூரா [Panadura] எனும் இடத்தில் உள்ள கோவிலில் நுழைந்த கலவரக்காரர்கள் அங்கே பூஜை செய்துகொண்டிருந்த குருக்களை மண்ணெண்ணெய் ஊற்றி உயிரோடு கொளுத்திவிட்டார்கள். இந்தக்கொடுமையை வழக்கம் போல வேலுப்பிள்ளை அவர்களின் நண்பர்களோடு விவாதித்துக்கொண்டு இருந்தார். புலம்புவதைத்தவிர வேறு எதையும் செய்திட முடியாத நிலைதான் அப்போது இருந்தது. இவர்களின் புலம்பல்களை கவனித்துக்கொண்டிருந்த பிரபாகரன் எனும் சிறுவன் வாய்திறந்தான்.

‘அப்பா நான் பேசலாமா’ என்று தொடங்கிய பிரபாகரன்….

‘அவர்கள் தாக்க வருகிறார்கள் என குருக்களுக்கு தெரியுமல்லவா? அவர் ஏன் திருப்பித் தாக்கவில்லை?’

வேலுப்பிள்ளை மற்றும் அவரது நண்பர்களுக்கு இந்தக்கேள்வி பெரிய அதிர்ச்சியை அளித்தது. இதுவரைக்கும் இப்படியொரு கேள்வியை எவரும் கேட்டதில்லை, கேட்கவும் முடியாது. இத்தனை நாட்கள் அமைதியாக இவன் கேட்டுக்கொண்டிருக்கும் போது அவன் மனதில் ஓடிய கேள்விகள் இவை தானா என வேலுப்பிள்ளை அதிர்ச்சியாக பார்த்தார்.

குருக்கள் தானே? தினசரி கோவிலில் அர்ச்சனை செய்கிறவர் தானே? கடவுள் ஏன் அவரை காப்பாற்றவில்லை ? நீங்களும் அவரை காப்பாற்றவில்லை? இப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் திருபித்தாக்கியிருக்க வேண்டும். எதிர்ப்புக் காட்டாமல் கட்டுண்டு, பற்றி எரிந்து இறந்தவரைப் பற்றிப் பரிதாபம் பேசுவதனால் என்ன பயன்?- கேள்விகள் தொடர்ந்தன.

ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் மக்களுக்கான அரசியல் கட்சிகளும் ஊர்வலம், போராட்டம், பொதுக்கூட்டம், உண்ணாவிரதம், மறியல், அறிக்கை மற்றும் அழுகை என தங்களது எதிர்ப்புக்களை அகிம்சை வழியில் தொடர்ந்த போது ஆயுதம் பற்றி சிந்திக்கக்கூடிய எவரும் அப்போது இல்லை. அநியாயமாய் தொடரும் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ள, உரிமைகளை மீட்டுக்கொள்ள ஆயுதம் உதவும் என நம்பிய தலைமுறை பிரபாகரன் தலைமுறை தான்.

மகன் இத்தகைய கேள்வியை கேட்டவுடன் வேலுப்பிள்ளை அதிர்ந்துபோய்விட்டார். உடனே இந்தியா பற்றியும் அங்கே அகிம்சை வழியில் போராடி வென்ற மஹாத்மா காந்தி அவர்களின் போராட்ட முறை பற்றியும் பெரிய வகுப்புகளை எடுக்க ஆரம்பித்துவிட்டார். அப்பா சொல்லும் போது காந்தியை பற்றி அமைதியாக கேட்டுக்கொள்ளும் பிரபாகரன் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் பற்றிய புத்தகங்களைத்தான் தேடிப்படித்தார்.

சுபாஷ் செய்த சாதனைகள், வீர சாகசங்கள் பிரபாகரனை ஈர்த்தன. தூக்குக்கயிருக்கும் அஞ்சாத பகத்சிங்கின் வீர செயல்கள் பிரபாகரனை ஈர்த்தன. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து தெரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடை போடலாம்? என வெகுண்டார். பனதூரா எனும் இடத்தில குருக்களை கொழுத்திய நிகழ்வு சிறுவன் பிரபாகரனை வெகுண்டெழ செய்தது என்றால் தனது அத்தையின் கணவர் அடித்தே கொல்லப்பட்ட கதையை அத்தையின் வாயாலேயே கேட்டது மேலும் ஆத்திரம்கொள்ளச் செய்தது.

நம் தலைமுறை அல்ல இது, புதிய தலைமுறை புதிதாகவே சிந்திக்கும் என்பதை அறிந்திருந்தார் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை. புரிந்தாலும் கூட கவலையாகவே இருந்தது. ஆபத்தாக எதையும் செய்திடாவரையில் பிரச்சனையில்லை என அவரை அவரே தேற்றிக்கொண்டாலும் கூட சற்று கவலையும் இருக்கவே செய்தது. காரணம், பிரபாகரன் படிக்கும் புத்தகங்கள், செல்லும் இடங்கள், பழகும் ஆட்களால் அத்தனையும் வேறுமாதிரியானதாக இருந்தது.

1972 ஆம் ஆண்டு பிரபாகரனுக்கு வயது பதினாறு. அப்போது பிரபாகரன் அவர்களின் அக்காவின் திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்விற்கு ஊரே கூடியிருந்த போதும் பிரபாகரன் எங்கோ சென்றுவிட்டு தாமதமாகவே வந்து சேர்ந்தார். நண்பர்களுடன் வெறுமனே ஊர் சுற்றும் சிறு பிள்ளையென்றால் பரவாயில்லை, ஆனால் பிரபாகரன் ஏதோ ஒரு காரணத்தோடு தான் ஊர் சுற்றுகிறார் என்பது தெரிந்தபடியால் வேலுப்பிள்ளை கவலையாகவே இருந்தார்.

திருமணம் முடிந்து அனைவரும் பேசிவிட்டு படுத்திருந்தார்கள். பிரபாகரன் அம்மாவின் அருகிலும் வேலுப்பிள்ளை அவர்களுக்கு அருகேயும் படுத்திருந்தார். அதிகாலை யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டது. வேலுப்பிள்ளை மெதுவாக சென்று யாரென்று பார்த்தார். பத்துப் பதினைந்து காவல்துறை ஆட்கள் நின்றிருந்தார்கள். அப்போதுவரைக்கும் பிரபாகரன் அம்மாவின் அருகே படுத்திருந்தார்.வேலுப்பிள்ளை கதவை திறந்து யார் வேண்டும் எனக் கேட்டபோது இன்ஸ்பெக்டர் சொன்னார்

‘எங்கே உங்களது பிள்ளை பிரபாகரன்?’

‘இதோ உள்ளே படுத்திருக்கிறான்’ என யோசித்து சொன்னார் வேலுப்பிள்ளை

காவலர்கள் திடுதிடுவென காட்டிய அறைக்குள் நுழைந்தார்கள்.

அங்கே பாயும் தலையணையும் இருந்தது. பிரபாகரன் இல்லை.

அன்று வீட்டை விட்டு தேசத்துக்காக புறப்பட்ட பிரபாகரன் வீடு திரும்பவே இல்லை.

எண்ணற்ற தந்தைகள், தாய்கள், சகோதரிகள், சகோதரர்கள் பிரபாகரனுக்கு கிடைத்தார்கள்.

இளம் வயதில் பிரபாகரன் தொடர்ந்து கேட்ட கொடுமையான விசயங்களும் அவர் படித்த புத்தகங்களும் இவ்வளவு நாட்கள் அகிம்சை வழிமுறையைத்தானே நம்மவர்கள் பின்பற்றினார்கள் ஆனாலும் தீர்வு கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தினாலும் ஆயுதம் தான் தன் இனத்தைக் காக்க உதவும் என முடிவெடுத்தார் பிரபாகரன்.

பிரபாகரன் அவர்கள் பற்றி நான் புரிந்துகொண்ட விசயங்கள் கொண்ட கட்டுரைகள் தொடரும்

அம்மாவால் எடிசன் என்ற மாபெரும் அறிஞன் உருவான கதை
ஏன் நீங்கள் எப்போதும் பெரிதாக சிந்திக்க வேண்டும்?






எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *