அத்திவரதரும் கிரவுட் திங்க்கிங்கும் | Crowd Thinking | குழுவாக சிந்தித்தல்
நாள்தோறும் மிகப்பெரிய அளவிலான மக்கள் கூட்டம் அத்திவரதர் சாமியை தரிசிக்க செல்கிறார்கள். யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய மக்கள் கூட்டம் செல்லாக்காரணம் என்ன?
காஞ்சிபுரத்தில் இருக்கக்கூடிய அத்திவரதர் சாமி தரிசனத்திற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் குவிகிறார்கள். அத்திவரதர் சாமி தரிசனத்திற்கு லட்சக்கணக்கில் மக்கள் குவிவதனால் சிலர் அதனை தங்களது கருத்துக்களை பகிர்வதற்கு ஆதாரமாக பயன்படுத்தத் துவங்கி இருக்கிறார்கள். “பெரியார் பூமி இன்று என்னாச்சு?” “கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களின் கருத்துக்கள் என்னாச்சு?”. என்பவை சில. இப்படி பேசுபவர்களின் கேள்விகளுக்கான பதிலாக இந்தக்கட்டுரை அமையும். பெரும்பாலானவர்களை அத்திவரதர் ஈர்த்தது எப்படி என்பதற்கான உளவியல் சார்ந்த விசயத்தை தான் பார்க்க இருக்கிறோம்.
இந்த கட்டுரையில் கடவுள் நம்பிக்கை குறித்தோ, அத்திவரதர் குறித்தோ நான் பேசப்போவது இல்லை. மாறாக நம் பல்வேறு கேள்விகளுக்கு விடை தரக்கூடிய “கூட்டமாக சிந்தித்தல்” [Crowd Thinking] குறித்து தான் இங்கே சில கருத்துக்களை முன்வைக்க இருக்கிறேன். அதற்க்கு ஒரு உதாரணமாக அத்திவரதர் விசயத்தை வைத்துக்கொள்வோம்.
தவறாமல் உங்களது கருத்தை கமெண்டில் பதிவிடுங்கள், அதைப்போலவே பிறருக்கும் பகிருங்கள்.
Crowd Thinking என்றால் என்ன?
எந்தவொரு நிகழ்விலும் தான் அறிந்தவற்றை வைத்துக்கொண்டு ஒவ்வொரு மனிதரும் ஒரு முடிவை எடுத்து வைத்திருப்பார். அப்படி தனித்தனி முடிவுகளை எடுத்துவைத்திருக்கின்ற தனிநபர்கள் குழுவாக இணைந்திடும் போது, ஒரு குழுவாக ஒரு முடிவினை எடுப்பது தான் “கிரவுட் திங்க்கிங்”.
Crowd Thinking க்கு மிகச்சிறந்த உதாரணம், அரசியல் முடிவுகள் தான். பல சமயங்கள் ஒன்று சொன்னதைப்போலவே பெரும்பாலான மக்கள் ஒரே பக்கம் சாய்வதனை நம்மால் பார்க்க முடியும்.
அத்திவரதர் சாமி தரிசனம்
அத்தி மரத்தினாலேயே செய்யப்பட்டதனால் இந்த பெருமாளுக்கு அத்திவரதர் என பெயர் வந்தது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீருக்குள் இருக்கும் பெருமாள் வெளியே வந்து மக்களுக்கு தரிசனம் தருவார். வாய்ப்பிருந்தால் அதிகபட்சமாக ஒருவரால் தன்னுடைய வாழ்நாளில் 3 முறை அத்திவரதர் பெருமாளை தரிசிக்க முடியும் எனவும் கூறுகிறார்கள்.
ஜூலை 28, ஞாயிற்றுக்கிழமை அன்று அத்திவரதர் பெருமாளை பார்த்தேன். அதிக அளவிலான கூட்ட நெரிசலுக்கு மத்தியில் சாமி தரிசனம் செய்தது மிகப்பெரிய சாதனையை செய்ததுபோல ஆகிவிட்டது.
“40 ஆண்டுக்கு ஒருமுறை” திரட்டிய கூட்டம்
எப்படி அத்திவரதரை காண இப்படி மக்கள் வெள்ளம் வெள்ளமாக செல்கிறார்கள் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அப்போது தான் கிரவுட் திங்க்கிங் தான் இதற்க்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை அறிந்தேன். சரி கிரவுட் திங்க்கிங் இதில் வலுவாக வேலை செய்திட வலுவான காரணம் ஏதாவது ஒன்று இருக்கவேண்டுமே என தேடினேன். அத்திவரதர் பெருமாள் மிகவும் பிரசித்தி அடைய மிக முக்கிய காரண பொருளாக அமைந்தது “40 ஆண்டுக்கு ஒருமுறை” என்ற பேசுபொருள் தான்.
அடுத்தமுறை பார்க்க முடியுமா, அடுத்தது பார்க்க 40 ஆண்டுகள் ஆகும் என்ற இரண்டு மூலக்காரணங்களும் தான் பெரும்பாலான மக்களின் தனிப்பட்ட எண்ணங்களை ஒருங்கிணைத்து “சாமி தரிசனத்திற்கு நாமும் செல்வோம்” என்ற ஒருமித்த முடிவிற்கு செல்லக்காரணம். இந்த முடிவிற்குள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை குறைவாக உள்ளவர்கள், கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் என அனைவரின் பெரும்பாலான முடிவாக “சாமி தரிசனம் செய்யலாம், தவறில்லை” என மாறிப்போனது
கிரவுட் திங்க்கிங் சில உதாரணங்கள்
கிரவுட் திங்க்கிங் என்பது உளவியல் சார்ந்த ஒரு விசயம். இதனை உணர்ந்தவர்கள் நிச்சயமாக அதனை பயன்படுத்திக்கொள்ள முடியும். கிரவுட் திங்க்கிங் மூலமாக ஏற்கனவே வேறொரு முடிவினை எடுத்திருந்தவரின் முடிவினையும் மாற்ற முடியும்.
உதாரணத்திற்கு, நாடாளுமன்ற தேர்தலில் “நாம் தமிழர் கட்சிக்கு” வாக்களிக்க போகிறேன் என ஒருவர் முடிவெடுத்து வைத்திருக்கிறார். பின்னர் பிறருடன் கலந்துரையாடும் போது நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதைவிட திமுகவிற்கு வாக்களிப்பது மேலானது, சட்டமன்ற தேர்தலில் வேண்டுமானால் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கலாம் என்ற கருத்து மேலோங்குகிறது. அதுவரைக்கும் தனி நபராக வேறொரு முடிவினை எடுத்து வைத்திருந்தவரின் முடிவு மாறுவதற்கு அதிகப்படியான வாய்ப்பு இங்கே இருக்கிறது. இப்படித்தான் குழுவாக ஒரு முடிவு மேலெழும்புகிறது.
இப்படிப்பட்ட குழு முடிவுகளால் தான் மிகப்பெரிய வெற்றியை, மிகப்பெரிய தோல்வியை நம்மால் காண முடிகிறது. நீங்கள் மேற்கூறிய எடுத்துக்காட்டை எந்தவொரு முடிவோடும் ஒப்பிட்டு பார்க்கலாம்.
கிரவுட் திங்க்கிங் முடிவு சரியாக இருக்குமா?
இந்தக்கேள்வியினை முன்வைத்து பல ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் சிலர் கிரவுட் திங்க்கிங் முடிவுகள் பெரும்பாலான நேரங்களில் சரியானதாக இருப்பதாகவும் சிலர் கிரவுட் திங்க்கிங் முடிவுகள் பெரும்பாலான நேரங்களில் தவறாகவே முடிவதாகவும் கூறியிருக்கிறார்கள். எப்போது கிரவுட் திங்க்கிங் முடிவுகள் சரியானதாக இருக்குமெனில் அந்த விசயம் குறித்த உண்மை தகவல்கள் பெரும்பாலான தனி நபர்களுக்கு தெரிந்திருக்குமாயின் அங்கே எடுக்கப்படும் முடிவுகள் சரியானதாக இருக்கும். 2ஜி ஊழல் நடந்ததாக நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை, ஆனால் அந்த குற்றச்சாட்டு ஆட்சி மாற்றத்தையே ஏற்படுத்தியது என்பது நினைவில் இருக்கட்டும்.
அத்திவரதர் சாமி தரிசன விசயத்தில் நம்மால் சில முடிவுக்கு வர முடிகிறது,
அனைவருமே பக்தியில் மூழ்கியவர்கள் இல்லை – சிலர் சொல்வதைப்போல அனைவருமே பக்தியாளர்கள் இல்லை என்பதுதான் உண்மை. நாமும் ஒருமுறை சென்று பார்த்துவிட்டு வரலாமே என்கிற நோக்கத்தில் வந்தவர்களும் விருப்பத்தின் பேரில் வந்தவர்களும் தான் அங்கே ஏராளம் என்பதனை அங்கு நேரில் சென்றால் உணர முடியும்.
இங்கே அத்திவரதர் ஒரு உதாரணத்திற்க்காகவே பயன்படுத்தி உள்ளேன். அண்மையில் நடக்கின்ற அரசியல் முடிவுகள் தொட்டு அனைத்திலும் கிரவுட் திங்க்கிங் என்ற ஒன்று இருக்கிறது என்பதனை உங்களுக்கு தெரிவிக்கவே இந்தக்கட்டுரை. தங்களுக்கு தேவையான முடிவுகளை மக்களிடத்தில் ஏற்படுத்திட சமூகவலைதளங்களை தற்போது பெரும்பாலானவர்கள் பயன்படுத்த துவங்கி இருக்கிறார்கள் என்பதும் நீங்கள் அறிய வேண்டும்.
உங்களது கருத்துக்களை பதிவிடுங்கள் !
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!