3 அடி உயரம் ஒரு குறையல்ல | சாதித்த ஹர்விந்தர் கவுர் ஜனகல் கதை
பெயர் ஹர்விந்தர் கவுர் ஜனகல், உயரம் 3 அடி 11 இன்ச். பள்ளி, கல்லூரி உட்பட எங்கு சென்றாலும் உயரத்திற்காக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்கப்பட்ட ஹர்விந்தர் இன்று ஒரு வெற்றிகரமான வழக்கறிஞர், பல நிறுவனங்கள் இவரை விளம்பரத்திற்காக அணுகுகின்றன, இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பல ஆயிரம் பேர் இவரை பாலோ செய்கிறார்கள். ஹர்விந்தர் கவுர் ஜனகல் மீண்டு வந்து சாதித்த கதை உங்களை உத்வேகப்படுத்தலாம்.
சிறுவயதில் விமானப் பணிப்பெண்ணாக விருப்பம் கொண்டிருந்தார் ஹர்விந்தர். ஆனால் அவரது கனவுக்கு அவரது உடல் உயரம் பெரும் தடையாக இருந்தது. அவரது தந்தை ஷம்ஷேர் சிங், பில்லூர் போக்குவரத்து காவல்துறையில் ASI ஆகவும், தாய் சுக்தீப் கவுர் ஒரு இல்லத்தரசியாகவும் உள்ளார். ஹர்விந்தருக்கு ஒரு சகோதரன் இருக்கிறார். அவர்களின் குடும்பத்தில் மற்றவர்களுக்கு இந்தக்குறைபாடு இல்லை என்பதனால் அவரை பல மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர், மருத்துவர்கள் கொடுத்த எந்த சிகிச்சையும் பலன் அளிக்கவில்லை. இதனால் அவரது ஆசையை கைவிட வேண்டியதாயிற்று. இதனால் மிகவும் மன அழுத்தத்திற்கு உள்ளானார்.
தன்னுடைய நிலை குறித்து அவர் பேசும்போது “ஒரு காலத்தில் நான் என் வாழ்க்கையில் சோர்வாக இருந்தேன். கடவுள் என்னை ஏன் இப்படி ஆக்கினார் என்று அழுதுகொண்டே இருந்தேன். மக்கள் என் உடல் உயரத்தை குறிவைத்து சொன்ன மோசமான விஷயங்கள் என்னை மிகவும் பாதித்தன. பிறகு ஊக்கமூட்டும் வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன். அது உண்மையில் எனக்கு உதவியது. சோகங்களில் இருந்து நான் மீண்டுவர ஆரம்பித்தேன், நான் நம்பிக்கையைப் பெற ஆரம்பித்தேன். இப்போது கடவுளின் மீது எனக்கு கோவமில்லை. கடவுள் என்னைப் படைத்திருந்தால், அவர் எனக்காக ஒரு நோக்கத்தை வைத்திருக்கிறார், அதை நான் நிறைவேற்ற வேண்டும் என்று நான் நம்பத் தொடங்கினேன், ”என்று ஹர்விந்தர் கூறுகிறார்.
12 ஆம் வகுப்பு முடித்த பிறகு, சட்டத்தின் மூலம் தேசத்திற்கு நிறைய செய்ய முடியும் என்பதை உணர்ந்த அவர் சட்டம் பயில முடிவு செய்தார். ஆனால் எல்லோரும் அவரை கேலி செய்வதும், கேள்வி எழுப்புவதும், அவர் செய்வதை கைவிடும்படி வற்புறுத்துவதும் வழக்கம். ஆனால் அவர் எதற்கும் சளைக்கவில்லை.
“சட்டம் எனக்கானது அல்ல என்று சொன்னவர்களால் நான் கேலி செய்யப்பட்டேன். நான் எப்படி ஒரு வழக்கை எதிர்த்துப் போராடுவேன்? நான் எப்படி நீதிபதி முன் நிற்க முடியும்? அவர்கள் என்னைப் பார்த்து சிரித்தனர். ஆனால் எனது உயரம் என்னை ஒரு வெற்றிகரமான வழக்கறிஞராவதைத் எப்படி தடுக்க முடியும்? என நானே கேட்டுக்கொண்டேன். ஏனென்றால், வழக்கறிஞர் துறைக்கு உடல் தோற்றம் முக்கியமில்லை, அறிவும் கல்வியும்தான் முக்கியம்,” என்று கூறுகிறார் ஹர்விந்தர்.
கேலி கிண்டல் அனைத்தையும் தாண்டி வெற்றிகரமாக படிப்பை முடித்தார். நவம்பர் 23, 2020 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா பார் கவுன்சில் உரிமம் மற்றும் பதிவு வாடிக்கையாளர் சான்றிதழைப் பெற்றார். இப்போதைக்கு இந்தியாவிலேயே உயரம் குறைவான வழக்கறிஞர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
“நான் நீதிமன்றத்தில் இருக்கும்போது, குற்றவாளிகள், சாட்சிகள் போன்றவர்கள் என்னை மிகவும் வித்தியாசமாகப் பார்த்து கிசுகிசுக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் என்னை அசௌகரியப்படுத்த முயற்சிக்கிறார்கள், ஆனால் நான் அதையெல்லாம் புறக்கணித்துவிட்டு என் வேலையில் கவனம் செலுத்துகிறேன். நான் வெறுமனே சிரித்துவிட்டு என் வழியில் செல்கிறேன், ”என்று தைரியமான பெண்ணாக பேசுகிறார் ஹர்விந்தர்.
ஒரு வழக்கறிஞராக மட்டுமல்லாமல், இன்று அவர் ஆயிரக்கணக்கான பாலோயர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டு அசத்துகிறார். பல பிராண்டுகளுக்கு இன்று அவர் விளம்பரத்திற்காக அழைக்கப்படுகிறார். அவரது பதிவுகள் பல ஆயிரம் லைக்குகளை அள்ளுகிறது.
“எங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதை முழுமையாக வாழ வேண்டும். நாம் எவ்வளவு நேர்மறையாக இருக்கிறோமோ, அவ்வளவு நேர்மறையான விஷயங்கள் நடக்கும். 100 பேரில், 99 பேர் என்னைப் பிடிக்கவில்லை என்றால், என்னைப் பார்த்து மகிழ்ச்சியடைபவர் ஒருவர் மட்டுமே இருந்தால், அந்த அன்பில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை எல்லா வகையிலும் ஆதரிக்குமாறு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். என் பெற்றோர் செய்தார்கள். என் கனவுகளைப் பின்பற்றுவதை அவர்கள் ஒருபோதும் தடுக்கவில்லை. உங்களில் இப்போது தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள், நீங்கள் உங்களை ஏற்றுக்கொண்டு நேசிக்க வேண்டும். குறைகளைத் தாண்டி, உங்களுக்கு முன்னால் இருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் தருணத்தில், நீங்கள் இன்னும் அதிகமாக சாதிக்க முடியும் என தனது வாதத்தை நிறைவு செய்கிறார் வக்கீல் ஹர்விந்தர்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்