காந்தி ஜெயந்தி – சில சுவாரஸ்யமான தகவல்கள் (Gandhi Jeyandi)

அக்டோபர் 02 – உலக மக்களால் விரும்பப்படும் மஹாத்மா காந்தி அவர்களினுடைய பிறந்த தினம். ஒவ்வொரு பிறந்த தினத்தன்றும் மஹாத்மா தவறாமல் நினைவுகூறப்படுகிறார். இந்தப்பதிவில் காந்தி அவர்களைப்பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை பார்க்கலாம்.

இன்று மஹாத்மா காந்தி அவர்களின் 151 வது பிறந்த தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தை கட்டமைத்தவர் என்ற பெருமைக்கு உரியவர் காந்தி.

நோபல் பரிசு பெற்றவரும் வங்க புலவருமான ரவீந்திரநாத் தாகூர் தான் காந்தி அவர்களுக்கு மஹாத்மா என்ற பட்டத்தை வழங்கியவர்.

1917 முதல் 1930 வரைக்குமான கால கட்டங்களில் சபர்மதி ஆசிரமம் தான் காந்தி அவர்களுக்கு வீடாக இருந்தது. இந்தக் காலகட்டங்களில் சுதந்திர போராட்டத்தின் மைய இடமாக சபர்மதி ஆசிரமம் விளங்கியது.

1930 ஆம் ஆண்டு டைம் பத்திரிக்கையின் சிறந்த மனிதராக தெரிவு செய்யப்பட்டார். மிகச்சிறந்த எழுத்தாளராக விளங்கிய காந்தி அவர்கள் கிட்டத்தட்ட 50,000 பக்கங்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

காந்தி அவர்களின் 70 வது பிறந்த தினத்தின் போது ‘வன்முறையும் ரத்தக்கறைகளும் படிந்த இந்த பூமியில் இத்தகைய மனிதர் வாழ்ந்தார் என்பதனை வரும் தலைமுறைகள் நம்புவதற்கு கடினப்படும்’ என புகழாரம் சூட்டியிருந்தார் புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின்.

அக்டோபர் 02, 1869 ஆம் நாள் குஜராத் மாநிலத்தில் இருக்கும் போர்பந்தர் எனும் பகுதியில் பிறந்தார். பிறக்கும் போது குடும்பத்தினரால் கொண்டாடப்பட்ட காந்தி பின்னாளில் மஹாத்மா என உலகால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

உலகம் முழுமைக்கும் அகிம்சைக்கு உதாரணமாக காந்தி அவர்களே மேற்கோள் காட்டப்படுகிறார். உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள் சிலரே, அவர்களில் முக்கியத்துவம் வாய்ந்தவர் மஹாத்மா.

இந்திய விடுதலைக்கு அரும்பாடுபட்ட மகாத்மா காந்தி அவர்கள் ஜனவரி 30,1948 ஆம் ஆண்டு கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார். சுதந்திர இந்தியா சந்தித்த மிக முக்கிய வழக்குகளில் ஒன்றாக கோட்சே வழக்கு பார்க்கப்படுகிறது.



சாதாரண வழக்கறிஞராக பணியாற்றிட தென் ஆப்பிரிக்கா சென்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி அவர்களுக்கு நடைபெற்ற ஒரு சம்பவம் தான் அவருக்குள் இருந்த போராட்ட குணத்தை வெளிக்கொண்டு வந்தது. அவரை வரலாற்றின் பெரும் நாயகராக உருவாக்கிட வழி செய்தது.



காந்தி மற்றும் அவரது மனைவி இருவரும் தங்கியிருந்த ஆசிரமத்திற்கு வருபவர்கள் கொடுக்கின்ற அன்பளிப்பு , நன்கொடை அனைத்தையுமே ஆசிரமத்திடம் ஒப்புவிக்கவேண்டும் என்பது விதி . அப்படி கொடுக்கப்பட்ட 4 ரூபாயை காந்தியின் மனைவி ஆசிரமத்திடம் ஒப்படைக்காமல் தானே வைத்துக்கொண்டார் . இதனை அறிந்த காந்தி அவரை கடுமையாக கடிந்துகொண்டதோடு ஒரு பத்திரிக்கையில் தன்னுடைய மனைவியின் செயல்பாட்டை ‘திருட்டு’ என சொல்வேன் என எழுதியிருந்தார் .



மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எனும் இயற்பெயருக்கு மாற்றாக பாபு, தேசப்பிதா, தேசத்தந்தை என புகழ்மணம் பறக்கும் அடைமொழிகளால் அழைக்கப்பட்டார்.

வன்முறைகளும் ரத்தமும் தான் தீர்வென கருதி ஆயுதங்களை நம்பி ஒவ்வொருவரும் நம்பி செல்ல முற்படும்போது ‘அகிம்சை’ என்றவொரு பேராயுதம் இருக்கிறது, நான் அதை சோதித்து வெற்றிகண்டவன் என காந்திஜியின் ஆத்மா சொல்லிக்கொண்டே இருக்கும்.

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *