கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்தின் குறைபாடு இதுதான். அரசு கவனத்தில் கொள்ள வேண்டியவை என்ன?

அமைச்சர் பொன்முடி அவர்கள் பெண்களுக்கான கட்டணமில்லா பயண திட்டம் குறித்து பேசும் போது பயன்படுத்திய “ஓசி” என்ற வார்த்தை பெரிய தாக்கத்தை தமிழகத்தில் ஏற்படுத்தி உள்ளது. மாபெரும் திட்டங்களின் வரிசையில் திமுகவிற்கு பெரிய ஆதரவை பெற்றுத்தரும் என நம்பப்பட்ட இந்தத் திட்டம் அதற்கு மாறான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கு அமைச்சரின் ஓசி கருத்து மட்டுமே காரணம் அல்ல, அதையும் தாண்டி சில காரணங்கள் உள்ளன. அவை என்ன? அரசு செய்ய வேண்டியது என்ன?

இந்தியாவில் இருக்கக்கூடிய மாநிலங்களில் தமிழகம் எப்போதுமே தனித்துவமானது. அதற்கு முக்கியக்காரணம், இங்கே அமையும் அரசாங்கங்கள் தொடர்ச்சியாக நிறைவேற்றும் சமூகநல திட்டங்கள் தான். தமிழகத்தில் பெரும்பான்மையாக ஆட்சி செய்திட்ட இருபெரும் திராவிட கட்சிகளுமே சமூகநல திட்டங்களை செயல்படுத்துவதில் முனைப்பு காட்டியே வந்திருக்கின்றன. ஆகவே தான், பெண்கள் கல்வி துவங்கி அடிப்படை மருத்துவ வசதி என பல நிலைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருந்து வருகிறது. பல திட்டங்கள் மக்கள் வரவேற்பை பெற்றாலும் கூட சில திட்டங்கள் விமர்சனத்தை பெறவும் தவறியது இல்லை. அப்படி, அண்மையில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளான ஒரு திட்டம் தான் “மகளிருக்கு அரசுப்பேருந்தில் கட்டணமில்லா பயணம்” என்கிற திட்டம். 

பெண்களுக்கு அரசுப் பேருந்தில் கட்டணமில்லா பயணம் என்கிற அறிவிப்பு “கட்டணமில்லா அரிசி” “கட்டணமில்லா கணினி” “கட்டணமில்லா தொலைக்காட்சிப்பெட்டி” போன்ற திட்டங்கள் போல பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வல்ல ஒரு பெரும் திட்டம் என்ற எண்ணத்திலேயே திரு ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்டது. அறிவிக்கப்பட்டபோது இந்தத்திட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது உண்மை தான். அதேபோல, பெண்கள் பலரும் இந்த திட்டத்தால் பலன் அடைந்தனர் என்பதும் உண்மையே. ஆனால், இந்தத்திட்டத்திற்கு துவக்ககாலத்தில் இருந்த வரவேற்பு மெல்ல மெல்ல குறையவே ஆரம்பித்து உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பல பெண்கள் இது வேண்டாம் என்றே கூறுகிறார்கள். இதற்கு பல காரணங்கள் உண்டு. அவை குறித்து விரிவாக பேசலாம். 

பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம்

தமிழகத்தில் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் பெண்கள் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் வசதியை தமிழக முதல்வர் திரு ஸ்டாலின் அவர்கள் அறிவித்து தற்போது அந்தத்திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு குறிப்பிட்ட நிதியை அரசு போக்குவரத்து கழகங்களுக்கு வழங்கி வருகிறது. (அண்மையில் ரூ 115 கோடியை அரசு ஒதுக்கீடு செய்திருந்தது). இந்தத்திட்டம் ஏன் கொண்டுவரப்படுகிறது என்ற விளக்கத்தில் சமூக நலத்துறைச் செயலா் தயானந்த் கட்டாரியா தெரிவித்த கருத்துக்கள் இவை தான். 

ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். தற்போது மாறி வரும் சமூக, பொருளாதார சூழலில், பெண்கள் உயா்கல்வி பெறுவதற்கும், குடும்பத்தின் பொருளாதார தேவையை நிறைவேற்றும் பொருட்டு பணிகளுக்குச் செல்வதற்கும், சுயதொழில் புரிவதற்கும் போக்குவரத்துத் தேவை இன்றியமையாதது ஆகும்.

பெண்களின் பங்களிப்பை உயா்த்துவது அவசியம்: தமிழகத்தில் பணிபுரியும் ஆண்களின் விகிதத்தைக் கணக்கில் கொள்ளும்போது பணிபுரியும் பெண்களின் விகிதம் பெருமளவு குறைவாகவே உள்ளது.

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பணிகளில் பெண்களின் பங்களிப்பு 31.8 சதவீதமாகவும், ஆண்களின் பங்களிப்பு 59.3 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

பொருளாதார வளா்ச்சிக்குப் பெண்களும் சிறப்பான பங்களிப்பை நல்க இயலும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், பணிகளில் பெண்களின் பங்களிப்பு சதவீதத்தை உயா்த்த வேண்டியது அவசியமாகிறது.

பொருளாதார தேவைக்கு உகந்தது: உயா்கல்வி கற்பதற்காகவும், பணிநிமித்தமாகவும், பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பாதுகாப்பான பயணங்களை அமைத்துக் கொடுப்பதும், பொதுப் போக்குவரத்து பயணங்களை ஊக்குவிப்பதும், பெண்களின் சமூகப் பொருளாதாரத் தேவைக்கு உகந்ததாக அமையும்.

இந்தத்திட்டம் விமர்சனத்தை பெற காரணங்கள் என்ன? 

இந்தத்திட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கங்கள் குறித்து செயலர் குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்தும் உண்மையானவை. சாமானிய குடும்பத்தை சேர்ந்த பல பெண்கள் தினசரி வேலைக்கு சென்று தான் குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார்கள். இவர்கள் பயண செலவுக்கு மட்டுமே குறைந்தது 1000 ரூபாயை மாதம் செலவு செய்கிறார்கள். அந்த செலவை அரசே ஏற்கும் போது அவர்கள் அந்தப்பணத்தை குடும்பத்தின் நலனுக்கோ, குழந்தைகளின் படிப்பிற்கோ, சேமிப்பிற்கோ தான் செலவு செய்வார்கள். அதுபோலவே, கட்டணமில்லா பேருந்து வசதி இருந்தால் பெண்கள் தயக்கம் இல்லாமல் தொலைவில் உள்ள ஊர்களுக்கும் சென்று வேலை செய்வார்கள். இதுபோன்ற ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டு தான் அரசு இந்தத்திட்டத்தை கொண்டுவந்துள்ளது. ஆனால் இந்தத்திட்டம் சில குறைபாடுகளைக் கொண்டுள்ளது என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். 

அனைத்து பெண்களுக்கும் கட்டணமில்லா பயணம் : இந்தத்திட்டம் அனைத்து பெண்களுக்கும் கட்டணமில்லா பயணம் மேற்கொள்ள வாய்ப்பினை வழங்குகிறது. இது மிகப்பெரிய குறைபாடாக பெண்களிடத்திலேயே பார்க்கப்படுகிறது. மாதம் 1 லட்சம் சம்பளம் வாங்கும் ஒரு பெண்ணும் இந்தத்திட்டத்தில் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறார், தினசரி 200 ரூபாய் சம்பளம் பெரும் ஒரு பெண்ணும் கட்டணமில்லாமல் பயணம் செய்கிறார். இது மிகப்பெரிய குறைபாடாக பார்க்கப்படுகிறது. கட்டணம் செலுத்தி செல்ல விரும்புவோர்/தகுதி உடையோருக்கு கூட கட்டணம் செலுத்த வாய்ப்பு இல்லை. 

பேருந்து ஊழியர்களின் அலட்சிய போக்கு : பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அனுமதி உள்ள பேருந்துகளை இயக்கும் ஊழியர்கள், பெண் பயணிகளை நடத்தும் விதம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. பெண்கள் நிற்கும் பேருந்து நிறுத்தங்களில் தள்ளி பேருந்தை நிறுத்துவது, அலட்சியமாக பேசுவது என அவர்கள் நடந்துகொள்ளும் விதம் “நாங்களா இலவசமாக செல்வதற்கு கேட்டோம்” என அவர்களே கேட்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது. 

ஆட்சியாளர்களின் அலட்சிய பேச்சு : பெண்களுக்கு இலவச பேருந்து அனுமதி திட்டம் மெல்ல மெல்ல எதிர்ப்பை உருவாக்கிக்கொண்டு வந்த சூழலில், அண்மையில் இந்தத்திட்டத்தை “ஓசி” என குறிப்பிட்டு பேசிய அமைச்சர் பொன்முடி அவர்களின் பேச்சு எரிகிற நெருப்பில் எண்ணையை ஊற்றியது போல பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அமைச்சர் பொன்முடி அவர்கள் பேசிய “ஓசி” பேச்சு, யாரோ சில எதிர்கட்சியினரால் திட்டமிட்டு பரப்பப்படவில்லை. அதற்கு உண்டான எதிர்ப்பு அலை என்பது மக்களிடத்தில் இவ்வளவு நாட்களாக இருந்த எதிர்ப்பு அலை என்பதை அரசு உணர வேண்டும். 

ஓசி இல்லை 

கட்டணம் இல்லா இலவச பேருந்து பயணம் உட்பட அனைத்து அரசு திட்டங்களுமே மக்கள் வரிப்பணத்தில் தான் நிறைவேற்றப்படுகிறது. இதனை மக்கள் எப்போதும் உணர வேண்டும். அரசு வழங்கும் கட்டணம் இல்லா சேவையை நீங்கள் பயன்படுத்தும் சூழலில் உங்களை அரசு ஊழியர்கள் அல்லது பிறர் கிண்டல் கேலி செய்தால் அதனை எதிர்த்து நீங்கள் கேள்வி கேட்க வேண்டும். அதற்கு, அரசின் திட்டங்கள் அனைத்தும் உங்கள் பணத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்பதை உணர வேண்டும். 

அரசு என்ன செய்ய வேண்டும்?

மக்கள் மட்டுமல்ல, ஆட்சியாளர்களும் மக்கள் வரிப்பணத்தை கொண்டு தான் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது என்பதை உணர வேண்டும். அமைச்சர் பொன்முடி அவர்கள் கட்டணமில்லா பேருந்து பயணத்தை “ஓசி” என குறிப்பிட்டது ஆட்சியாளர்களின் அலட்சிய போக்கையே வெளிப்படுத்துகிறது. இதுபோன்ற மக்களின் நிலையை கொச்சை படுத்தும் ரீதியிலான பேச்சுக்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

அரசு அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு அதிகாரிகளுக்கு உண்டு. இலவச பஸ் பாஸ் உள்ளபோது மாணவர்களை எப்படி போக்குவரத்து பணியாளர்கள் அலட்சியமாக கையாலுவார்களோ அதைப்போலவே பல இடங்களில் பெண்களை போக்குவரத்து பணியாளர்கள் கையாளுகிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டும். பெண்கள் பயணம் செய்ய அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து போக்குவரத்து கழகங்களுக்கு பணம் செலுத்துகிறது. ஆகவே, பெண்கள் செய்வது இலவச பயணம் அல்ல என்பதை முதலில் அந்தப் பணியாளர்கள் உணரும்படி செய்திட வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லையேல் திமுக இந்த மாபெரும் திட்டத்தின் பலனை அறுவடை செய்வதில் பெரும் சிக்கல் உண்டாகும்.

உச்சநீதிமன்ற வழக்கு ஆட்சியாளர்கள்  கவனத்திற்கு….

தேர்தல் காலங்களில் கட்சிகள் அறிவிக்கும் இலவச திட்டங்களுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. நீதிபதிகள் இலவச திட்டத்திற்கும் சமூகநல திட்டத்திற்கும் உள்ள வேறுபாட்டை உணர்திருப்பது இந்த வழக்கில் நமக்கு சாதகமான ஒன்றாக இருந்தாலும் இலவசத்திற்கு எதிரான மனநிலைக்கு மக்களை கொண்டு செல்வது மிகவும் ஆபத்தானது. கட்டணம் இல்லாமல் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்கள் அனைத்தும் தேவைப்படும் மக்களுக்குத்தான் வழங்கப்படுகிறது என்பதை உறுதி செய்திட வேண்டியது அவசியமான ஒன்றாக உள்ளது. அப்படி உறுதி செய்யப்படும் பட்சத்தில் அந்த கட்டணமில்லா திட்டங்களை மக்களும் வெறுக்க மாட்டார்கள், நீதிமன்றமும் அவற்றை விமர்சிக்காது.

சரியான நபர்களுக்கு, தேவையான நபர்களுக்கு அரசின் சேவை திட்டங்கள் சென்று சேருகின்றன என்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அரசின் ஒவ்வொரு திட்டமும் மக்கள் வரிப்பணத்தில் தான் செய்யப்படுகிறது என்பதை மக்களும் ஆட்சியாளர்களும் உணர வேண்டும்.

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *