3 வேளாண் சட்டங்கள் – என்ன சொல்கின்றன? : FarmersBill 2020
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்கள் என்னென்ன? அரசு அதற்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் போராடுவது ஏன்?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 3 வேளாண் மசோதாக்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் அந்த 3 வேளாண் மசோதாக்களும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்பட்டன. இந்திய குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களும் இந்த மூன்று மசோதாக்களுக்கும் ஒப்புதல் அழிந்துவிட்டார். இதன் காரணமாக இந்த மூன்று மசோதாக்களும் தற்போது சட்டமாகி இருக்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் 3 வேளாண் சட்டங்கள் என்னென்ன? அரசு அதற்கு ஆதரவாக தெரிவிக்கும் கருத்துக்கள் என்ன? விவசாயிகளும் எதிர்க்கட்சிகளும் போராடுவது ஏன்? என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
3 வேளாண் சட்டங்கள் :
1. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 [Essential Commodities (Amendment) Act 2020]
2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 [Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020]
3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 [The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020]
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 [Essential Commodities (Amendment) Act 2020]
அத்தியாவசிய பொருள்களின் விற்பனையை கட்டுப்படுத்துவதில் சில மாறுபாடுகளை கொண்டுவருவதற்கு இந்த சட்டம் வழிவகை செய்கிறது. முன்னர் அத்தியாவசிய பொருள்களுக்கான [உதாரணத்திற்கு வெங்காயம், பருப்பு] தட்டுப்பாடு ஏற்படும் போது குறிப்பிட்ட பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கு அரசு தடை விதிக்கும். தற்போது இதில் சற்று விலக்கு அளிக்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த சட்டதிட்டத்தின்படி, அரசு நினைத்த மாத்திரத்தில் உடனடியாக தடை விதிக்க முடியாது. அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100 சதவீதம் அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50 சதவீதம் அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. [பாமரன் கருத்து : இப்படி அனுமதிக்கும் போது உள்நாட்டில் பொருள்களின் விலை உயர்வு ஏற்படுமே என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது]
இந்த சட்டத்தின்படி, வேளாண் விளைபொருட்களை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விற்பனை செய்யவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது.
2. விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 [Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020]
விவசாயப்பொருள்களை எந்த இடத்தில் வேண்டுமானாலும் விற்றுக்கொள்ள அனுமதி வழங்குகிறது இந்த சட்டம். தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் விவசாய ஒழுங்குமுறைக் கூடாரம் போன்றதொரு அமைப்பு செயல்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து வேளாண் பொருள்களை வாங்க வரும் வியாபாரிகள் இங்கு தான் வந்து வாங்க இயலும்.
விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களைக் குறிக்கிறது. விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் விற்கவும் முறைப்படுத்தவும் தமிழ்நாடு அராசல் உருவாக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டத்தை பிறப்பித்து இந்த ஒழுங்கு முறைக் கூடங்களை உருவாக்கியது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும் 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகளும் 108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டுவருகின்றன. நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த ஒழுங்கு முறை விற்பனைக் கூட முறையானது தமிழ்நாட்டைவிட, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிகவும் கட்டுப்பாட்டுடன் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று, மறுபடி விற்கும் வர்த்தகர்களுக்கு பொருளின் மதிப்பில் 1-2 சதவீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
தற்போதைய சட்டத்தின்படி, மாநில அரசுகளால் நடத்தப்படும் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுக்கு அப்பாலும் விவசாய பொருள்களை விற்கவோ வாங்கவோ முடியும்.
3. விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020
இந்த சட்டமானது விவசாயிகள் மூன்றாவது தனி நபர் ஒருவரிடம் ஒப்பந்தம் செய்துகொள்ள அனுமதி அளிக்கிறது. விவசாய ஒப்பந்ததாரர்களுக்கு இதன் மூலமாக சட்டப்பாதுகாப்பு கிடைக்கிறது.
ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜிநாமா
I have resigned from Union Cabinet in protest against anti-farmer ordinances and legislation. Proud to stand with farmers as their daughter & sister.
— Harsimrat Kaur Badal (@HarsimratBadal_) September 17, 2020
மேற்கூறிய மூன்று சட்டங்களுக்கு எதிரான போராட்டம் நாடு முழுவதும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்படும் போதே “மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல்” தனது பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு அவர் அளித்த காரணம் “ஆயிரக்கணக்கான விவசாயிகள் வீதிகளில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். விவசாயிகளின் அச்சங்களுக்கு தீர்வு காணாமல் சபைகளில் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக நான் இருக்க விரும்பவில்லை, அதனால்தான் நான் ராஜினாமா செய்தேன்!”
தற்போது அமைந்திருக்கும் திரு நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த கட்சியை [ஷிரோமணி அகாலிதளம் கட்சி] சேர்ந்தவர் தான் ஹர்சிம்ரத் கவுர் பாதல். மத்திய அரசில் அங்கம் வகிக்கின்ற ஒரு அமைச்சரே இந்த சட்டத்திற்கு எதிராக ராஜினாமா செய்தது பெரும் பேசுபொருளாக அமைந்தது.
தமிழக கட்சிகள் என்ன சொல்கின்றன
தமிழகத்தில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய அதிமுக சில மாறுதல்களைகோருவோம் என்ற அடிப்படையில் இந்த 3 சட்டங்களுக்கும் ஆதரவு தெரிவித்து இருக்கிறது. திமுக உட்பட எதிர்க்கட்சிகள் தற்போது போராட்டங்களை முன்னெடுத்து நடத்துகின்றன. எதிர்க்கட்சியான திமுகவின் தலைவராக இருக்கக்கூடிய ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வரும் விசயங்களை விளக்கி எதிர்ப்பை பதிவு செய்து இருக்கிறார்.
#AntiFarmerBills-ஐ ஆதரித்திருப்பதுதான் @CMOTamilNadu-வினால் இதுவரை மக்களுக்கு உருவான விளைவுகளிலேயே மிக மோசமானது!
பதவியைக் காக்கவும், ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்கவும் இப்பாதகத்தை செய்ததாக ஒப்புக் கொண்டு விவசாயிகளிடம் மன்னிப்புக் கோருவது மட்டுமே அவருக்கிருக்கும் ஒரே வழி! pic.twitter.com/kByJ2jqzS8
— M.K.Stalin (@mkstalin) September 20, 2020
இந்தி நடிகை கங்கனா ராவத் தனது ட்விட்டர் பக்கத்தில் #Farmersbill2020 என்ற ஹேஸ்டேக்குடன் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரையின் பக்கத்தை பகிர்ந்து இருக்கிறார். எளிமையாக புரிந்துகொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ள அந்த கட்டுரையானது 1990 களில் இருந்து துவங்குகிறது. அந்தக்கட்டுரையின் சாராம்சம் இந்த சட்டங்கள் விவசாயிகளின் வாழ்வில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறுகிறது.
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராகுல் காந்தி அவர்களோ “விவசாயிகளுக்கு மரண தண்டனையை அறிவித்து இருக்கிறது” என சாடி இருக்கிறார்.
எங்களது கட்டுரைகளை நீங்கள் தவறாமல் படிக்க விரும்பினால் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்து பின்தொடருங்கள். கூறவே வாட்ஸ்ஆப் பட்டனை அழுத்தி எங்களுடைய குரூப்பில் இணைத்துக்கொண்டு பதிவுகளை பெறுங்கள்
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!
Arumaiyana pathivu bro
Nandri