உங்களுக்கான அரசை அமைத்திடுங்கள் விவசாயிகளே | பொங்கல் திருநாள் செய்தி
விளைவித்த உணவுப்பொருள்களை சூரியனுக்கும் பிற உயிர்களுக்கும் படைத்து நன்றி சொல்லிடும் பெரு விழாவாக கொண்டாடப்படுகிறது தமிழர் திருநாள், பொங்கல் விழா. தை முதல் நாளை பொங்கல் விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம். இந்த நன்னாளில் விவசாயிகள் கொண்டாட்ட மனநிலையில் இருக்க வேண்டும்.
ஆனால் உண்மையில் கொண்டாட்ட மனநிலையில் விவசாயிகள் இருக்கிறார்களா என்றால், அது சந்தேகமே. காரணம் கஜா புயலில் தாண்டவம், விவசாயத்தில் இறக்கம், விவசாய கடன் என பல்முனை போராட்டங்களுக்கு இடையே சிக்கி தவித்து கொண்டிருக்கிறார்கள் விவசாயிகள். ஆனால் இவற்றில் இருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டிய அரசாங்கங்களோ வேறு விசயங்களில் கவனம் செலுத்துக்கொண்டு இருக்கின்றன.
உங்களுக்கான அரசை அமைத்திடுங்கள் விவசாயிகளே
உங்களுக்கான அரசு என்றவுடன் இப்போது இருக்கின்ற அரசை நீக்கிவிட்டு எதிர்க்கட்சியை ஆட்சிக்கு கொண்டுவரவேண்டும் என்பது அல்ல. உங்களுக்கு எந்த அரசு நன்மை செய்கிறதோ அந்த அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டு வாருங்கள் என்பதே இதன் உண்மையான அர்த்தம்.
> உள்நாட்டில் விளைகின்ற உணவுப்பொருள்களுக்கு முன்னுரிமை கொடுத்து, சரியான விலைக்கு அரசாங்கம் கொள்முதல் செய்தாலே பாதி பிரச்னை முடிந்து விடும்.
> பெரிய பெரிய நிறுவனங்களுக்கு மானியங்களை வாரி இறைக்கும் அரசாங்கங்கள், விவசாய உற்பத்திக்கு மானியங்களை கொடுக்காதது பெரிய ஏமாற்றம்.
> தொழில்நிறுவனங்களுக்கு கடன்களை கோடி கோடியாக தள்ளுபடி செய்கின்ற அரசாங்கம், ஏழை விவசாயிகள் புயலினால் தங்களது வாழ்வாதாரங்களை இழந்தாலும் கூட தள்ளுபடியை பெற முடிவதில்லை என்பது எவ்வளவு பெரிய அவலநிலை.
> மற்ற மாநிலங்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்போது, அங்கிருக்கும் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விடும்போது நம்மவர்களுக்கு ஏன் தள்ளுபடி செய்யப்படவில்லை. நாமும் அவர்களை போன்ற இந்திய குடிமக்கள் தானே, அவர்களை போன்று தானே வரி காட்டுகிறோம். இருப்பினும் நாம் மட்டும் இழிநிலையில் இருக்க காரணம் என்ன?
இவை அனைத்திற்குமான தீர்வு, விவசாயிகள் பிரச்சனையை தங்கள் பிரச்சனையாக கொள்ளாத நபர்களை ஆட்சிக்கட்டிலில் அமர வைத்தது தான். உங்களுக்கான கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அரசியல் கட்சிகளுக்கு முழு ஆதரவு கொடுங்கள்.
கரை வேட்டிகளில் பிரிந்துகிடக்காமல் விவசாயி என்ற ஒற்றை புள்ளியில் நிற்க துணிந்திடுங்கள்.
வாக்களிப்பவர்களில் முக்கால்வாசி பேர் விவசாயிகள் தான். அப்படிப்பட்ட சூழலில் நீங்களே புதிதாக ஒரு அரசையே நிறுவலாம். மீண்டும் சொல்கிறேன், உங்களுக்கான ஆட்சியை அமைத்திடுங்கள் என்றால் இப்போதுள்ள ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதோ, வேறு எவரையும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதோ அல்ல. உங்களது கோரிக்கைக்கு செவி சாய்த்து விவசாயிகளின் நலன்களில் முன்னுரிமை தந்து ஆட்சி நடத்திடும் எவர் கையிலும் ஆட்சியை கொடுத்திடுங்கள் அல்லது நீங்களே களம் புகுந்திடுங்கள்.
வெற்றி உங்கள் கைகளிலேயே இருக்கிறது !
உணருங்கள் !
அனைவருக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.