பேஸ்புக்கின் பலம் கூடுவது ஜனநாயகத்திற்கு நல்லதா?
அமெரிக்க தேர்தலில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்திட பல நடவெடிக்கைகளை எடுக்க இருப்பதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இப்படிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டிருப்பதன் மூலமாக அது எவ்வளவு பெரிய ஆதிக்கம் வாய்ந்தது என்பதை உணர முடிகிறது.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நவம்பர் 03 அன்று நடைபெற இருக்கிறது. அதற்காக பேஸ்புக் நிறுவனம் எடுக்கக்கூடிய நடவெடிக்கைகள் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் விரிவாக விளக்கி இருக்கிறார். அதனை நீங்கள் படிக்க வேண்டுமெனில் இங்கே கிளிக் செய்து படிக்கலாம். ஒரு தனியார் நிறுவனம் அமெரிக்க தேர்தலுக்காக இத்தகைய வழிமுறைகளை வெளியிட்டு இருப்பதைக்கண்டு ஒரு சாதாரண மக்களாக ஒவ்வொருவரும் ஆசுவாசம் கொள்ளலாம். ஆனால் இன்னொரு புறத்தை ஆராய நாம் மறக்கக்கூடாது. ஒரு தனியார் நிறுவனம் ‘அமெரிக்க தேர்தலுக்காக நாங்கள் இதனையெல்லாம் செய்யப்போகிறோம்’ என வெளிப்படையாக அறிவித்து இருப்பது அது தன்னை எவ்வளவு சக்தி வாய்ந்த அமைப்பாக நினைத்துக்கொண்டிருக்கிறது என்பதையே காட்டுகிறது. அது உண்மையும் கூட.
பேஸ்புக் அறிவித்திருக்கும் சில அறிவிப்புகள் – மக்கள் பதிவுசெய்து வாக்களிக்க உதவுதல், இந்தத் தேர்தல் எவ்வாறு செயல்படும் என்பது குறித்த குழப்பத்தைத் தீர்ப்பது, வன்முறை மற்றும் அமைதியின்மைக்கான வாய்ப்புகளை குறைக்க நடவடிக்கை எடுப்பது, தேர்தலுக்கு முந்தைய வாரத்தில் அரசியல்ரீதியிலான விளம்பரங்களைத் தடுத்தல், தவறான தகவல்களைக் கொண்டிருக்கும் பதிவுகளை அடையாளம் காட்டுதல், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு அரசியலர்கள் வெற்றியை அறிவிக்கும் பதிவுகளை அடையாளம் காட்டுதல் என பல அறிவிப்புகள் அடங்கும்.
பேஸ்புக்கின் அசுர பலம்
தற்சமயம், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் என்ற மூன்று முக்கிய தகவல் தொடர்பு ஆப்களை கட்டுப்படுத்தி வருகிறார் மார்க் ஜுக்கர்பெர்க். உலகம் முழுமைக்கும் சில நூறு கோடி மக்களால் அன்றாடம் பேஸ்புக் பயன்படுத்தப்படுகிறது. அதுபோலவே மற்ற இரண்டு ஆப்களும் பயன்படுத்தப்படுகின்றன.
சராசரியாக மூன்றில் ஒருவர் பேஸ்புக் ஆப்பை பயன்படுத்துவதாக சொல்லப்படுகிறது. செய்தி சேனல்களில் செய்திகளை பார்த்து தெரிந்துகொள்வதைக்காட்டிலும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பார்த்தே தகவல்களை மக்கள் பெறுகின்றனர். பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மூலமாக ஒருவரை சென்றடையும் செய்தியானது வெறும் செய்தியாக மட்டும் அல்லாமல் அவரின் வாக்களிக்கும் நிலைப்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லதாக இருக்கிறது.
பேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு கோடிக்கணக்கான பதிவுகள் பதிவிடப்படுகின்றன. நீங்கள் சார்ந்த நண்பர்கள், குரூப்கள், பக்கங்கள், நீங்கள் ஏற்கனவே பார்த்த விசயங்கள் உள்ளிட்டவை சார்ந்துதான் பதிவுகள் உங்களுக்கு காட்டப்படும். ஆனாலும் பணம் படைத்த ஒருவரால் பேஸ்புக்கில் விளம்பரம் செய்து உங்களுக்கு பதிவுகளை காண்பிக்க முடியும்.
நீங்கள் நினைப்பது போல வெறுமனே எந்த ஊர், வயது, பாலினம் உள்ளிட்டவற்றை மட்டும் வைத்துக்கொண்டு பேஸ்புக் விளம்பர பதிவுகளை உங்களுக்கு காண்பிப்பது கிடையாது. இதோடு சேர்த்து மிகவும் உன்னிப்பாக உங்களைப்பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு [Micro Targeted] அதன் அடிப்படையில் விளம்பரங்களை காண்பிக்க முடியும். தொடர்ச்சியாக ஒருவருக்கு பதிவுகளை காட்டுவதன் மூலமாக அரசியல் முடிவுகளை மாற்றி அமைக்கும் அதிகாரம் படைத்ததாக பேஸ்புக் இருக்கிறது.
அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதில் பேஸ்புக் பெரிதளவில் பங்காற்றுகிறது என்பதற்கு சான்று ஒவ்வொரு தேர்தலின் போதும் பேஸ்புக் வெளியிடுகின்ற அறிவிப்புகளே சான்று.
அனைத்தையும் கட்டியாலும் மார்க் ஜுக்கர்பெர்க்
பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று முக்கிய தொடர்பு தளங்களை கட்டுப்படுத்தி வருகிறார் மார்க். பேஸ்புக் நிறுவனத்தின் ஆகப்பெரும் முடிவுகளை எடுக்கக்கூடிய சர்வ வல்லமை கொண்டவராக இன்றளவிலும் மார்க் இருக்கிறார் என்கிறார்கள். வாக்களிக்கும் பங்குகளில் கிட்டத்தட்ட 60% த்தை மார்க் தன்னகத்தே வைத்திருப்பதாக கூறும் அவர்கள் பேஸ்புக் அல்காரிதம்களில் மாற்றத்தை ஏற்படுத்திட அவருக்கே அதிகாரம் உண்டு. இதனை வைத்துக்கொண்டு பேஸ்புக் பயன்படுத்திடும் ஒருவருக்கு அவரது Newsfeed இல் என்ன மாதிரியான பதிவுகள் காட்டப்பட வேண்டும் என்பதை அவரால் தீர்மானிக்க முடியும்.
பேஸ்புக்கின் வலிமை குறித்து வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் ஊடகக் கல்விப் பேராசிரியர் சிவா வைத்தியநாதன் அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் என்னுடைய வாதத்திற்கு வலிமை சேர்க்கும் என நம்புகிறேன். ‘‘ஃபேஸ்புக்கின் சக்தியை நாம் தொடர்ந்து குறைத்து மதிப்பிட்டுவந்திருக்கிறோம். இந்த ஊடகத்தின் உண்மையான அளவையும் செல்வாக்கையும் மக்களால் புரிந்துகொள்வது உண்மையில் கடினமே. நம்மில் மூன்றில் ஒருவர் இதைப் பயன்படுத்துகிறோம் – மனித வரலாற்றில் இதைப் போன்று நாம் வேறெதையும் எதிர்கொண்டதில்லை. தனது செல்வாக்கு எத்தகையது என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க ஸக்கர்பெர்க் தயாராக இருக்கிறாரா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. எவ்வளவு சக்தியைத் தான் கொண்டிருக்கிறோம் என்பதை அவர் எப்போதாவது சிந்தித்தால் அவரால் தூங்க முடியுமா என்பதும் எனக்குச் சந்தேகமே.”
இன்னொரு உதாரணம் கூற வேண்டுமெனில் – நான் எழுதக்கூடிய இந்தப்பதிவை பேஸ்புக்கில் தான் பகிர்வேன். அப்படி பகிரப்படும் இந்த பகிர்வு சில நூறு பேருக்கு காட்டப்படலாம், 1 லட்சம் பேருக்கு காட்டப்படலாம் அல்லது நூறுக்கும் குறைவான நபர்களுக்கு கூட காட்டப்படலாம். இதனை நம்மால் அறியவே முடியாது.
செய்தி நிறுவனங்களுக்கு சவால் தரும் பேஸ்புக்
முன்பெல்லாம் ஒரு செய்தியை சேகரிக்கவோ அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கவோ ஒரு ஊடகமும் ஊடகவியலாளரும் தேவைப்பட்டது. ஆனால் சமூக வலைத்தளங்கள் செய்தி ஊடகங்களை விட வேகமானதாக மாறிக்கொண்டு வருகின்றன. ஒருவர் தனது கருத்தை செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தி அதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதம் மாறிவிட்டது. இப்போதெல்லாம் ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தாங்கள் தெரிவிக்க வேண்டிய கருத்துக்களை பகிர்கின்றனர். பின்னர் தான் அது செய்திக்கு போகிறது. பொதுமக்களும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வரக்கூடிய செய்திகளில் தான் நம்பிக்கை கொண்டுள்ளனர்.
ஜனநாயகத்திற்கு பேராபத்தாக பேஸ்புக்
பேஸ்புக் நிறுவனம் எடுக்கக்கூடிய நடவெடிக்கைகளே அது எந்த அளவிற்கு அசுர பலம் தன்னிடம் இருக்கிறது என்பதை வெளிக்காட்டுவதாக இருக்கிறது. அமெரிக்காவில் மட்டுமல்ல உலகின் எந்தப்பகுதியில் எல்லாம் பேஸ்புக் பயன்படுத்தப்பட்டு வருகிறதோ அங்கெல்லாம் அரசியல் ரீதியிலான மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டிருக்கிறது. இதனை சாதாரண பொதுமக்கள் எளிதில் நம்ப மறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.
சார்புடைய தொலைக்காட்சிகள் இருக்கின்றனவே, அவை ஜனநாயகத்திற்கு பேராபத்து இல்லையா? என நீங்கள் கேட்கலாம். ஒரு விசயம் எப்படி மக்களை சென்று அடைகிறது என்பதனை பொறுத்து தான் எது தீங்கானது என்பதனை கூற முடியும். சார்புடைய தொலைக்காட்சிகளை மக்கள் எளிதில் தெரிந்துகொள்கின்றனர். ஆனால் சமூக வலைதளங்களை புரிந்துகொள்வதில் மக்களில் பெரும்பான்மையானோர் தோல்வி அடைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அதுதான் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பலம்.
பேஸ்புக் தன்னை ஜனநாயகத்தை காக்கும் பெரும் பொறுப்பு உள்ளது போல காட்டிக்கொண்டாலும் கூட பேஸ்புக் தொடர்ச்சியாக அசுர வளர்ச்சி அடைவது ஜனநாயகத்திற்கு பெரிய ஆபத்தே.
எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!