போதும் என்ற மனம் தான் நிம்மதியை தரும் -கமலாத்தாள் தான் சிறந்த உதாரணம்

பலர் எதிர்காலத்தைப் பற்றி நிகழ்காலத்தில் கவலைப்பட்டே நிகழ்காலத்தில் அனுபவிக்க வேண்டிய சந்தோசத்தை இழந்து வருகிறோம்
போதும் என்ற மனம் தான் நிம்மதியை தரும் -கமலாத்தாள்

சிறு வயதில் “பணம் இல்லைனா இந்த உலகம் உன்னை மதிக்காதுடா” என சொல்லி சொல்லி வளர்த்ததாலோ என்னவோ “இன்னும் இன்னும் இன்னும் தேவை” என பணத்தை சம்பாதிக்க ஓடிக்கொண்டே இருக்கிறோம். 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம், 1 லட்சம் என சம்பளம் அதிகரித்துக்கொண்டே போனாலும் எந்தவொரு எல்லையிலும் “போதும்” என்ற மன நிறைவை மட்டும் தருவதே இல்லை. அடுத்து எவ்வளவு என்ற எண்ணம் தான் ஏற்படுகிறது. எனக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதுபோன்ற எண்ணம் ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது என நிச்சயமாக சொல்ல முடியும்.

 

கால சூழலும் இன்றைய செலவினங்களும் நம்மை அப்படி ஓட வைக்கின்றன என அதற்க்கு சாக்கு சொன்னாலும் சிலர் அந்தக் காரணங்களை தகர்த்தெறிந்துவிட்டு “எனக்கு இது போதும், போகும் போது நான் எதையும் கொண்டு போகப்போவதில்லையே” என்ற தெளிவோடு மிக அருமையாக வாழ்க்கையை நகர்த்தி செல்லுகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நம்மைப்போல அவர்கள் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தாதவர்களாக இருக்கலாம், மாட மாளிகைகளில் வாழாதவர்களாக இருக்கலாம். ஆனால் 100% அடித்துச்சொல்லலாம் அவர்கள் நிம்மதியாக வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் அனுபவித்து கடத்துகிறார்கள் என்று.

அப்படிப்பட்ட ஒருவர் பற்றிய கட்டுரை கடந்த வாரங்களில் பிபிசி போன்ற நிறுவனங்களின் செய்திகளில் வந்தது.  “ஒரு ரூபாய்க்கு இட்லி விற்கும் கமலாத்தாள்” பற்றிய கட்டுரை தான் அது. 2019 ஆம் ஆண்டில் தரமான, சுவையான இட்லி ஒன்று ஒரு ரூபாய்க்கு கிடைக்கிறது என்பது பலருக்கு நகைச்சுவையாகத்தான் இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட பாட்டி ஒருவர் கோவை மாவட்டத்தில் இருக்கிறார் என்பதனை அறியும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயமாக அவரிடம் இருந்து நாம் கற்றிக்கொள்ளவேண்டிய

போகும் போது எதையும் எடுத்துச்செல்வதில்லை

போதும் என்ற மனம் தான் நிம்மதியை தரும் -கமலாத்தாள்

பணத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பவர்களில் 99% படித்தவர்கள் – அவர்கள் அனைவருமே விவரம் அறிந்தவர்கள், நாம் இறந்த பிறகு நம்முடன் நயா பைசாவைக்கூட போட மாட்டார்கள், வாழ்க்கை ஒருமுறை மட்டுமே வாய்க்கக்கூடியது என்பதை நன்கு அறிந்தவர்கள். [நானும் இந்த பட்டியலில் இருக்கிறேன் என்பதனை வருத்தத்தோடு பதிவிடுகிறேன்.]

 

ஆனால் ஒவ்வொரு ஆண்டும் சம்பள உயர்வு எப்போது வரும், எவ்வளவு வரும், இன்னும் அதிகமாக வாங்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், வேறு நிறுவனத்திற்கு போக வேண்டுமா, இன்னும் அதிகமாக படிக்க வேண்டுமா அல்லது வேறு வேலையையும் கூடுதலாக செய்ய வேண்டுமா என யோசித்துக்கொண்டே இருக்க வேண்டி இருக்கிறது. இதனால் எதிர்காலத்தை நினைத்து நினைத்து நிகழ்காலத்தில் பொய்யாக வாழ்ந்துகொண்டு இருக்கிறோம் என்பதே உண்மை.

 

அரிசி, பருப்பு, தேங்காய், கடலை, எண்ணெய் இதெல்லாம் சேர்த்து, எனக்கு ஒரு நாளைக்கு 300 ரூபாய் செலவாகும். 200 ரூபாய் லாபம் கிடைக்கும். அவ்வளவுதான். சாகும் வரை ஒரு ரூபாய்க்குதான் இட்லி விற்பேன். யார் சொன்னாலும் விலை ஏற்ற மாட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் நான் வாழப்போகிறேன்?” இதுதான் கமலாத்தாள் இந்த வாழ்க்கை குறித்து புரிந்துவைத்துள்ளது.

 

பணம் வாழ்க்கைக்கு தேவையானது தான், ஆனால் எவ்வளவு தேவை என்பது தெரியாமல் போனதன் விளைவு தான் நாம் பணத்தை நோக்கி ஓடிக்கொண்டே இருக்கவேண்டிய சூழலுக்கு நம்மை இட்டுச்செல்கிறது என நான் நினைக்கிறன். வாழ்க்கையை மகிழ்ச்சியாக நடத்துவதற்கு தான் பணம் தேவைப்படுகிறதே தவிர பணம் தேடுவதற்காகத்தான் வாழ்க்கை என்ற நிலைக்கு போவது எவ்வளவு பெரிய தவறு. இதனை தெரியாமல் நாம் செய்யவில்லை நண்பர்களே தெரிந்தே தான் செய்துகொண்டு இருக்கிறோம்.

இனி ஒரு முடிவிற்கு வந்துவிடுவோம், பணம் தேடுவது முக்கியமானது தான், செய்ய வேண்டியது தான். ஆனால் அதற்காக வாழ்க்கையின் பொன்னான தருணங்களை, இன்பமாக இருக்க வேண்டிய நேரங்களை எதற்காகவும் விட்டுக்கொடுப்பது இல்லை என்ற முடிவிற்கு வந்துவிடுவோம். நிச்சயமாக நீங்களும் இந்த முடிவிற்கு உடன்படுவீர்கள் என நம்புகிறேன். வாருங்கள் வாழ்க்கையை வாழுவோம்.

Join with me :

எங்களுடைய பதிவுகளை நேரடியாக வாட்ஸ்ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்து இணைந்திடுங்கள்_ : https://chat.whatsapp.com/BpBkoxYbAdXLPCC0kZ4Apg





எழுதுவது எனக்கு பிடித்தமான செயல். சமூகத்தில் நடக்கின்ற நிகழ்வுகளின் மீதான என்னுடைய பார்வையையும் புரிதலையும் என் மக்களோடு என் மொழியில் பகிர வேண்டும் என்ற ஆவலால் உருவானதே இந்த இணையதளம். உங்களுடைய ஆதரவு கிட்டும் என நம்புகிறேன்! தமிழ் வாழ்க!

பாமரன் கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *