என் ஜன்னலுக்கு வெளியே – நம்பிக்கையில்லா நீதிமன்றங்கள் ஜனநாயக பேராபத்து

தாய்ப்பாலினும் தூய்மை , நம்பிக்கை
நீதிமான்களின் மேல் இருக்க வேணும்

 

என் வீட்டு ஜன்னலில் இருந்து பார்த்தால் ஆலமரத்தினடியில் நடக்கும் ஊர் பஞ்சாயத்து தெளிவாக தெரியும் . பல நேரங்களில் ஜன்னல் ஓரமாக அமர்ந்து வேடிக்கை பார்ப்பது வழக்கம் .

அவ்வளவு படிப்பறிவு இல்லாத மக்கள் கொண்டுவரும் பிரச்சனைகள் அனைத்திற்கும் தீர்ப்பினை கூறுவார் அந்த ஊர் தலைவர் . எனக்கு ஆச்சரியமாக இருக்கும் எப்படி இவரால் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்ப்பினை கூற முடிகின்றது என பலமுறை நான் எண்ணுவதுண்டு .

அதனை மக்களிடமும் கேட்டுவிட்டேன் , பலரது பதிலாக இருந்தது என்னவெனில் “அவர் சரியாகத்தான் கூறுவார் என்ற நம்பிக்கை இருக்கின்றது ” என்பதுதான் .அந்த நம்பிக்கைதான் அம்மக்களின் நிம்மதியான வாழ்விற்கு காரணம் .

ஆனால் இந்தியாவில் தற்சமயம் நீதிதுறையின் மீதும் தலைமை நீதிபதி உள்ளிட்டவர்களின் மீதும் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருவது தெள்ளத்தெளிவாக தெரிகின்றது . மக்கள் விமர்சிக்க தொடங்கிவிட்டார்கள் . இது
எந்த அமைப்பின் மீதும் மக்களுக்கு நம்பிக்கையில்லாததை ஏற்படுத்தி அசாதாரண சூழ்நிலையை ஏற்படுத்திவிடும் .

தற்சமயம் இந்தியாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர துணைக்குடியரசு தலைவரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள் எதிர்க்கட்சியினர் . இது அசாதாரணமான சூழ்நிலையின் உச்சம் . ஆனால் எதற்காகவோ இது குறித்து பேசாமல் அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள் .

காரணம் இந்தியாவில் உச்சநீதிமன்ற நீதிபதியின் மீது அவ்வளவு எளிதாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர முடியாது . இப்போது கொண்டுவரப்பட்டால் இதுவே முதல்முறையாக இருக்கும் . இது ஏதோ அரசியல் பிரச்சனையாக கருதிவிட முடியாது .

பொதுவாக நீதி வழங்கும் நீதிபதிகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும் . அப்போதுதான் அவர்களின் தீர்ப்பு சரியானதாக இருக்கும் என்கிற நம்பிக்கை இருக்கும் . இல்லையேல் ஒவ்வொரு தீர்ப்பும் சந்தேகத்திற்கு உள்ளாக்கப்பட்டு மக்களால் விமர்சிக்கப்படும் .

ஏற்கனவே நான்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வெளிப்படையாக பொதுமேடைக்கு வந்து , வழக்குகளை தலைமை நீதிபதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டுகிறார் என்பதில் தொடங்கியது , தலைமை நீதிபதி மீதான நம்பிக்கையின்மை . பிறகு நீதிமன்ற தீர்ப்பு ஒவ்வொன்றுமே சந்தேக பார்வையோடு மக்களாலும் அரசியல்வாதிகளாலும் ஊடங்கங்களாலும் விமர்சிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது .

ஜெயலலிதா வழக்கின் தீர்ப்பை தள்ளிப்போட்டது , காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதம் செய்ய ஒத்துழைப்பது என பல வழக்குகளில் மக்கள் எழுப்பும் சந்தேகங்களை மறுக்க பதில் இல்லை .இப்போது மக்கள் நீதிமன்றம் சொன்னால் கட்டுப்படுகிறார்கள் . ஆனால் நம்பிக்கையில்லாமல் போனால் ?

நிச்சயமாக , மிக விரைவாக செயல்பட்டு முடிவுக்கு கொண்டுவரவேண்டிய பிரச்சனை இது . ஜனநாயக தூண்களில் மிக முக்கிய அமைப்பான நீதிமன்றத்தின் மீது மக்களின் நம்பிக்கை குறைய கூடாது . அந்த அளவிற்கு தூய்மையோடு நம்பிக்கையானவர்களாக இருக்கவேண்டிய பொறுப்பு நீதிபதிகளுக்கு இருக்கின்றது .

நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கை மீட்டெடுக்கப்படுமா ?

 

பாமரன்

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *