தேர்தல் பத்திரம் “சட்டவிரோதம்” – பாஜகவிற்கு பெருத்த பின்னடைவா?

2018 ஆம் ஆண்டு முதல் பெரும் எதிர்ப்பையும் மீறி அமலுக்கு வந்தது தான் இந்த தேர்தல் பத்திரம் திட்டம். இதனை எதிர்த்து சில அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்குகளை விசாரித்த 5 நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு “தேர்தல் பத்திரம் திட்டம் சட்டவிரோதம்” என தீர்ப்பு அளித்துள்ளது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தத் தீர்ப்பு வெளியானவுடன், பாஜகவிற்கு இது பெருத்த பின்னடைவு என பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். இது உண்மையா என விரிவாக பார்ப்போம். (Electoral Bond Case Judgment)

தேர்தல் பத்திரம் திட்டம் என்றால் என்ன?

தேர்தல் பத்திரம் சட்டம் என்பது ஒரு கட்சிக்கு தேர்தல் நிதி அளிப்பவர்கள் பற்றிய தகவல்கள் பொது வெளியில் வெளியிடப்படாமல் இருக்க வகை செய்கிறது. இதனால் பணம் கொடுத்தவர்களின் அரசியல் சார்பு பிறருக்கு தெரிய வராது என்பது இந்த சட்டத்தை கொண்டு வந்தவர்களின் கருத்து.

இதில் மூன்று விசயங்கள் மிகவும் முக்கியமானவை.

ஒரு தனி நபரோ அல்லது நிறுவனமோ எவ்வளவு தொகைக்கு வேண்டுமானாலும் தேர்தல் பத்திரம் மூலமாக ஒரு கட்சிக்கு நன்கொடை வழங்க முடியும். SBI வங்கியில் வழங்கப்படும் 1000, 10000, 1 லட்சம், 1 கோடி என பல தேர்தல் பத்திரம் விற்பனைக்கு இருக்கும்.

நீங்கள் ஒரு கட்சிக்கு நன்கொடை தர வேண்டும் என நினைத்தால், அந்தபணத்தை SBI வங்கியில் செலுத்தி தேர்தல் பத்திரம் வாங்க வேண்டும். அந்த பத்திரத்தில் உங்களது பெயர் இருக்காது.

பின்னர் இந்தப் பத்திரம் அரசியல் கட்சியிடம் கொடுக்கப்படும். அரசியல் கட்சி, அடுத்த 15 நாட்களுக்குள் SBI வங்கியில் குறிப்பிட்ட பத்திரத்தை கொடுத்து பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அந்த நபரின் பெயரோ அல்லது அந்த நிறுவனத்தின் பெயரோ பொது வெளியில் எங்கும் வைக்கப்பட மாட்டாது. அரசியல் கட்சிக்கே கூட அந்த அந்த நன்கொடையை யார் வழங்கியது என்று தெரியாது.

குறிப்பு : ஒருவேளை ஒரு நபரோ அல்லது நிறுவனமோ குறிப்பிட்ட அரசியல் கட்சி சொல்லி மிகப்பெரிய தொகையை பத்திரம் மூலமாக கொடுத்துவிட்டு பின்னர் கட்சியிடம் தெரிவித்து விட்டால் குறிப்பிட்ட தொகை கொண்ட பத்திரம் வந்துவிட்டதா என்பதை அரசியல் கட்சியால் அறிந்துகொள்ள முடியும்.

இரண்டாவது மிகமுக்கிய அம்சம், ஒரு நிறுவனம் தனது லாபத்தில் அதிகபட்சமாக 7.5% அளவிற்கு தான் நன்கொடை வழங்க முடியும் என்ற முந்தைய சட்டம் திருத்தப்பட்டது. இதனால் ஒரு நிறுவனம் தனது லாபம் அனைத்தையும் கூட ஒரு கட்சிக்கு நன்கொடையாக வழங்கலாம்.

மூன்றாவது, வெளிநாட்டு நிறுவனம் தனது கிளை ஒன்றினை இந்தியாவில் வைத்திருந்தால் அதுவும் நன்கொடை கொடுக்க முடியும்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு என்ன?

கடந்த 6 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் இப்போது தான் தீர்ப்பு வந்துள்ளது என்ற போதிலும் வந்த தீர்ப்பு மிகவும் சரியான தீர்ப்பாக அமைந்துள்ளது.



உச்சநீதிமன்றம் மிக முக்கியமாக சொன்ன காரணங்கள் இங்கே உங்களுக்காக,

இந்த தேர்தல் பத்திரம் சட்டம் தகவல் அறியும் உரிமை சட்டம், மக்களின் அடிப்படை உரிமை ஆகியவற்றை மீறுவதாக உள்ளது. ஒரு கட்சிக்கு நிதி அளிப்பவர்கள் யார் என்பதை அறிய மக்களுக்கு முழு உரிமை உண்டு என்பது உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு.


மேலும், ஒரு நிறுவனம் எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை கொடுக்கும் வசதி உள்ளது. பொதுவாக, ஒரு நிறுவனம் என்பது லாப நோக்கத்தில் தான் செயல்படும். ஆகவே, நன்கொடை அளிக்கும் நிறுவனம் கைமாறு எதிர்பார்க்க வாய்ப்புண்டு என நீதிமன்றம் தெளிவுபடுத்தி உள்ளது.

இதைத்தவிர, SBI வங்கி இதுவரைக்கும் தேர்தல் பத்திரம் வாங்கியவர்கள் விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க வேண்டும் எனவும் அந்த தகவல்களை பொதுவெளியில் தேர்தல் ஆணையம் வைக்க வேண்டும் எனவும் உத்தரவு போட்டுள்ளது. இன்னும் சில வாரங்களில் இது வெளியாகும்.

மக்களுக்கான வெற்றி எப்படி?

இந்த சட்டத்தை கொண்டு வந்தது பாஜக அரசு, அதேபோல அதிக தேர்தல் நிதியை பெற்றது பாஜக அரசு. ஆகவே, இந்த சட்டம் தற்போது ரத்து செய்யப்பட்டவுடன் மற்ற கட்சிகள் மற்றும் பலர் இதனை பாஜவிற்கு பின்னடைவு என சொல்லுவார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? இது அனைத்து கட்சிகளுக்கும் பின்னடைவு தான்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு தேர்தல் பத்திரம் மூலமாக கிடைத்த மொத்த வரவில் (9208 கோடி) 57% (5271 கோடி) நிதியை பாஜக பெற்றுள்ளது. இதேபோல காங்கிரஸ் கட்சி 952 கோடி, மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் 767 கோடி, திமுக 628 கோடி ரூபாயை பெற்றுள்ளது.

நீங்கள் அதிகபட்ச தொகை அடிப்படையில் பார்த்தால் இது பாஜகவிற்கு இழப்பாக தோன்றலாம். ஆனால், ஆளும் கட்சிக்கு அல்லது ஆளும் அரசாக வரப்போகும் கட்சிக்கு நிறுவனங்கள் பொதுவாகவே பணத்தை வாரி வழங்கும். இந்த சட்டம் வழங்கியவர் யார் என்று வெளியே சொல்ல வேண்டாம் என்ற வாய்ப்பை வழங்குவதால் இன்னும் தைரியமாக இவை நிதியை வழங்கும்.

அவை விருப்பப்பட்டு வழங்குவது ஒருவகை என்றால் நிறுவனங்களை மிரட்டியும் கூட கட்சிக்கு நிதி செலுத்துமாறு செய்திடும் வாய்ப்பும் இங்கே உண்டு என்பதை மறக்கக்கூடாது.

ஆளும் கட்சியாக யார் இருந்தாலும் அவர்களுக்கு அதிக நிதி வருவதை இந்தத் திட்டம் ஊக்குவிக்கும் என்பதே நாம் உணர வேண்டிய உண்மை.

ஆகவே, அவற்றால் அசுர வேகத்தில் தங்களை வளர்த்துக்கொள்ள முடியும். இதனால் தேர்தலில் நேர்மை மற்றும் ஜனநாயகம் இரண்டும் கேள்விக்கு உள்ளாகும்.

ஆகவே, தற்போது தேர்தல் பத்திரம் திட்டத்தை ரத்து செய்து வந்துள்ள உத்தரவு என்பது பாஜகவிற்கு பின்னடைவு என பார்ப்பதை விட மக்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஓர் உத்தரவாகவே நான் பார்க்கிறேன்.

இதுவரைக்கும் நிதி அளித்தவர்கள் குறித்த தகவல்களை வெளியிட வேண்டும் என உத்தரவு வந்துள்ளது. இது பாஜகவிற்கு சிக்கலை உண்டாக்கலாம். மிகவும் அதிகப்படியாக நிதி சென்று சேர்ந்திருக்கும் அந்தக்கட்சிக்கு யார் நிதி அளித்தார்கள் என்ற தகவல் வெளியே வந்தால் விமர்சனங்களை உண்டாக்கலாம்.

இன்னும் சில வாரங்களில் நிதி அளித்தவர்கள் பற்றிய தகவல் அனைத்தும் பொது வெளிக்கு வந்துவிடும்.

உங்களது கருத்துக்களை தவறாமல் கமெண்டில் பதிவிடுங்கள்.

பாமரன் கருத்து

Share with your friends !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *