மஹாத்மாவை மீண்டும் கொல்ல வேண்டாம் – திறந்த மடல்
கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தின்போது “சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்ஸே, அவன் ஓர் இந்து ” என பேசியதில் இருந்து கோட்ஸே குறித்தும் மகாத்மா காந்தி குறித்தும் பல்வேறு கருத்து மோதல்கள் நடந்தன . காந்தி இந்தியாவின் தந்தை அல்ல அவர் பாகிஸ்தானின் தந்தை என ஆரம்பித்து
காந்தி அவர்களின் நன்மதிப்பின் மீது சேற்றினை வீசிடும் செயல்கள் அரங்கேறத்துவங்கின . கோட்ஸேவை தீவிரவாதி என கூறக்கூடாது என எதிர்ப்போரும் இருந்தார்கள் .
காந்தி அவர்களை கொன்றவர் கோட்ஸே , அவர் இந்து மதத்தை சார்ந்தவர் , அவர் அந்த மதம் சார்ந்த ஓர் இயக்கத்தோடு இணைத்திருந்தார் . இவை அனைத்துமே மறுக்க முடியாத உண்மைகள் . இவை எந்த அளவிற்கு உண்மையோ அதேபோலவே இந்தியாவின் சுதந்திரத்திற்கு அரும்பாடு பட்டவர்களில் முதன்மையானவர் காந்தி அவர்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை.
காந்தி தன்னுடைய இறுதிக்காலங்களில் வருணாசிரம அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளையும் சாதிய ரீதியிலான பிரிவினையையும் எதிர்த்தார் . பெரும் மனமாற்றத்தை அடைந்திருந்த ஆளுமைமிக்க காந்தி இன்னும் நீடித்தால் தங்களுடைய கொள்கைகளுக்கும் பிறவற்றிற்கும் பேராபத்து வந்துவிடுமோ என்ற அச்சத்தால் அரங்கேறியதுதான் மகாத்மாவின் மீதான தூப்பாக்கிசூடு . இதனை கோட்ஸேவின் வாக்குமூலத்தில் இருந்து எளிமையாக புரிந்துகொள்ள முடியும் .
பல்வேறு இன , மத , சாதிய பிரிவுகளால் பிளவுபட்டுக்கிடந்த மக்களை ஒருங்கிணைத்த ஒப்புமை அற்ற ஓர் மனிதர் காந்தி . அப்படிப்பட்ட நபரை துப்பாக்கியால் சுட்டவரை குற்றவாளியென்று சொல்லக்கூடாது என எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள் . கோட்ஸே துப்பாக்கியால் காந்தியை சுட்டுவிட்டு ஓடவில்லை என அவரது வீரத்தை புகழ்வோர் இருக்கிறார்கள் . சுட்டது யாரென்று தெரியவேண்டும் , அடிப்படைவாதத்தை அகற்ற முயன்றால் மஹாத்மாவிற்கும் இதே நிலைமை தான் என்பதனை உலகிற்கு உணர்த்தவே கோட்ஸே ஓடவில்லை என்பது அனைவரும் அறிந்ததே .
பல்வேறு காரணங்களால் வேற்றுமை நிறைந்துள்ள தேசத்தை ஒன்றிணைப்பவர் காந்தி . அவரது செயல்பாடுகளில் குறைகளும் கூட இருக்கலாம் . ஆனால் அவர் இந்நாட்டிற்க்காக செய்தவை ஏராளம் . அவரது நன்மதிப்பினை சொற்ப காரணங்களுக்காக குழைக்க முயலுவது நம் தலையில் மண்ணை வாரி நாமே போட்டுக்கொள்வதற்கு ஒப்பானது .
உருவாகும் புதிய தலைமுறைகளுக்கு உதாரணமாக சொல்வதற்கு நமக்கு தலைவர்கள் தேவை . அப்படிப்பட்ட பலரை இந்த தேசம் கொடுத்தும் இருக்கின்றது . ஆனால் நாம்தான் அப்படிப்பட்டவர்களை வேண்டுமென்றே தூற்றி தூற்றி அடையாளமற்று போகச்செய்கிறோம் . அந்த வரிசையில் மகாத்மாவை நிறுத்தியிருப்பது வேதனைக்கு உரியது .
புரிந்துகொள்க !